ஞாயிறு, 19 டிசம்பர், 2021

Behavioural Award ! விளையாட்டு, கல்வி, கணினி என எந்த துறையில் பரிசு பெற்றாலும் இவ்வளவு மகிழ்ச்சி இருந்திருக்காது.

May be an image of 2 people, people standing and monument

சுமதி விஜயகுமார் :  பரிணாம வளர்ச்சியை தவிர, உலகின் அனைத்து வளர்ச்சிக்கும் அடிப்படையானது கேள்விகள்.  அனைத்து மருத்துவ மற்றும் விஞ்ஞான வளர்ச்சிக்கும் கேள்விகள் மட்டுமே அடிப்படையாய் அமைந்திருக்கின்றன. ஆப்பிள் ஏன் மேலே செல்லாமல் கீழே விழுகிறது என்பதில் துவங்கி கருப்பு துளை (Black Hole) இருக்கும் போது வெள்ளை துளை (White Hole) ஏன் இருக்க கூடாது என்பது வரை. கேள்விகள் பிறந்திருக்காவிட்டால் நாம் இன்னமும் குகைகளில் வாழ்ந்திருப்போம். உலகம் இன்னும் அழகானதாய் இருந்திருக்கும்.  மழையும் வெயிலும் கால நிலைக்கு ஏற்ப இருந்திருக்கும். ஆனால் மனிதனின் வாழ்வு 30 வயதோடு நின்றிருக்கும். நம் உலகை போல் வேறு பல உலகங்கள் இருக்கும் சாத்தியத்தை அறியாமலேயே இறந்து போய் இருப்போம்.
இயற்கை சுழலியில் 100 அடி பின் சென்ற போதும் அறிவியலால் 1000 அடி முன்னோக்கி நகர்ந்திருப்பதற்கான காரணம் மனிதனுக்கு எழுந்த கேள்விகள் தான். 

ஒருபுறம் மனித சமூகத்தை முன்னேற்றும் கேள்விகள் பிறந்து கொண்டிருக்க, மறுபுறம் வேறு விதமான கேள்விகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. கல்யாணம் ஆயிடுச்சா , குழந்தை இருக்கா, எப்போ வேலைக்கு போவ, வீடு இருக்கா என்று அடுக்கிக்கொண்டே  போகலாம். குழந்தைகள் கேட்கும் கேள்வி என்றால் நமக்கு கண்முன் வருவது  'நிழல்கள்' திரைப்பட காட்சிதான். கடல் அலைகளை பார்த்து தன் தந்தையிடம் சிறுவன் கேட்கும் கேள்விகள். எவ்வளவு அர்த்தம் உள்ள கேள்விகள். கவினும் என்னிடம் நிறைய கேள்விகள் கேட்பதுண்டு. அவன் கேட்கும் கேள்விகள்  உலக அரசியல் பற்றியதாகவே இருக்கிறது. அதில் பெரும்பான்மையானவைக்கு எனக்கு விடைகள் தெரிவதில்லை. 'நீ படிக்கும் நூலகள் அளவிற்கு உனக்கு விடைகள் தெரிவதில்லை' (With the number of books you read , you answer very little) என்று ஒருமுறை கூறினான்.
குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு நமக்கு விடை தெரியவில்லை எனும் பொழுது நமக்கு எழும் கோபம்/கையாகத்தனத்தால் அவர்களை கடிந்து கொள்ள வேண்டியதாய் இருக்கிறது. உலகமே கைபேசியில் இருக்கும் பொழுதே இவ்வளவு சிரமம் என்றால், நம் அம்மா அப்பா தாத்தா பாட்டிக்கு மிக கடினமாகவே இருந்திருக்கும். சிறிய வயதில் நான் என்ன மாதிரியான கேள்விகள் கேட்டேன் என்பது நினைவில் இல்லை. அனேகமாக கேள்விகளே கேட்டிருக்க மாட்டேன் அல்லது விடை சொல்லிவிடும் அளவிற்கு கேட்டிருப்பேன். எனக்கு பெரிதாக கேள்விகள் எழுந்ததேயில்லை. விளையாடும் , நூலும், கொஞ்சமாக ஓவியங்களும் போதுமானதாக இல்லை. அதனாலேயே பள்ளியில் சராசரி மாணவியாகவே இருந்தேன். நான் கேட்ட கேள்விகள் தான் நினைவில் இல்லை , ஆனால் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் நினைவில் இருக்கிறது.
கொஞ்சம் படித்த உறவினர்கள் வீட்டிற்கு வந்தால் 'நல்லா இருக்கியா?' என்ற கேள்விக்கு அடுத்து 'கடைசியா என்ன ரேங்க் எடுத்த?' என்று கேட்பார்கள். நான் பெரியவள் ஆனது , கல்வி , திருமணம் , வேலை என அனைத்தும் தாமதமாகத்தான் நடந்தது. 'என்ன படிக்கிற, எப்போ முடிப்ப' எனவும், என் பெற்றோர்களிடம் 'எப்போ கல்யாணம்?' எனவும் வேலைக்கு போறியா , எவ்ளோ சம்பளம் என்பது முடிய அனைத்து கேள்விகளும் என் தனிப்பட்ட விஷயமாகவே இருக்கும். கடற்கரையில் அந்த சிறுவன் கேட்ட அந்த அறிவுபூர்வமான கேள்விக்கு பதில் சொல்லமுடியாத இந்த சமூகம் தான் எனக்கு பதில் சொல்ல பிடிக்காத கேள்விகளை கேட்டுக்கொண்டே இருக்கிறது. ஒருமுறை பதின் பருவதில் இருந்த crush வீட்டில் தெரியவர , பலவிதங்களிலும் அவமானங்களை சந்திக்க நேரிட்டது. அப்போது என்னை அவமானப்படுத்த என்னிடம் கேட்கப்பட்ட கேள்வி 'இந்தியாவின் மிக பெரிய விமான நிலையம் எங்கிருக்கிறது?' . எனக்கு விடை தெரியவில்லை என்ற போது 'இதுகூட தெரியல, முதல்ல ஒழுங்கா படி' என்பதாக தான் இருந்தது.
படித்து முடித்து விட்டால் போதும் கேள்விகள் நின்று விடும் என்று சிறிய வயதில் எண்ணியதுண்டு. படிப்பிலும் பெரிய ஆர்வம் எல்லாம் இல்லாததினால் எப்போது படித்து முடிப்போம் என்று தான் இருந்தது. அதுவரை மதிப்பெண்கள் மட்டுமே கேட்கப்பட்டது. அதன் பிறகு கல்யாணம், குழந்தை , வேலை  என்று அடுக்கடுக்கான கேள்விகள். ஒன்றை முடித்தால் அடுத்த கேள்வி.  வாழ்க்கை முடியும் வரை இது போன்ற கேள்விகள் முடியப்போவதில்லை என்பது புரிவதற்கே பல வருடங்கள் ஆனது. அண்ணன் திருமணத்தின் போது படிப்பை முடிந்திருந்த போது அப்பா அடைந்த பெருமையை தவிர வேறு மகிழ்ச்சி எல்லாம் இல்லை. நிம்மதி தான் இருந்தது. இனி படிப்பை முடித்துவிட்டேன் என்று சொல்லலாம் என்று. காலப்போக்கில் பதில் சொல்வதற்காகவே வாழ்வது போல் ஆகிவிட்டது.
 குழந்தைகளை பார்த்தால் 'என்ன படிக்கிற? நல்ல படிக்கணும்' என்று சொல்வதோடு நிறுத்திக்கொள்கிறேன். என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளை ஒருபோதும் அவர்களிடம் கேட்பதில்லை. திருமண பத்திரிகை கொடுக்கும் வரை 'எப்போ கல்யாணம்' என்று கேட்பதோ , எப்போ 'எப்போ குழந்தை ' என்று கேட்பதோ இல்லை. திருமண முறிவு என்று வேறு ஒருவர் மூலம் அறிந்தாலும் , அந்த நபராக இப்படி ஆயிடுச்சு என்று சொல்லும் வரை அதை பற்றி வாய் திறப்பதில்லை. இப்போதெல்லாம் சிறுவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எப்படி விடை அளிப்பது என்ற பயிற்சியில் தான் இருக்கிறேன். ஏனென்றால் சிறுவர்கள் கேட்கும் கேள்விகள் தான் என் அறிவை இளமையுடனும் , இந்த மானுடத்தை மேலும் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதுமாக இருக்கிறது.
என்  குழந்தைகளுக்கு நன்றாக படிக்க வேண்டும். கல்வி போல் நம்மை காப்பது வேறில்லை என்று மட்டும் தான் சொல்லி கொடுக்கிறேன். வகுப்பில் முதன் மாணவனாக வர வேண்டும் என்றெல்லாம் சொல்லுவதில்லை. நான் பார்த்தவரை , மதிப்பெண்களுக்கும் அறிவிற்கும் தொடர்பேயில்லை. ஆனால் மற்றவர்களை எப்படி மதிக்க வேண்டும் என்று சொல்லி கொடுப்பதில் மட்டும் கவனமாக இருக்கிறோம். அடுத்த ஆண்டு உயர்நிலை பள்ளி செல்லும் குழந்தைகளில் 10 தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு பல்வேறு பரிசுகள் வழங்க பட, கவினுக்கு Behavioural Award வழங்கப்பட்டது. விளையாட்டு, கல்வி, கணினி என பல எந்த துறையில் பிசிறிசு பெற்றிருந்தாலும் இவ்வளவு மகிழ்ச்சி இருந்திருக்காது.
பி கு: 2000ல் கவின் அறிவு சுடரின் அருகில் Vs 2021 கவினின் கையில் பள்ளி வழங்கிய அறிவு சுடர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக