ஞாயிறு, 12 டிசம்பர், 2021

68 முன்னாள் ஆப்கான் பெண் எம்.பிக்களின் நிலை என்ன? உயிருக்கு பயந்து உலகெங்கும் ..இப்போது எங்கு வாழ்கிறார்கள்?

டாம் டான்கின்  -     பிபிசி 100 வுமன்   :  ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, அந்த நாட்டிலிருந்து பாதுகாப்பு கருதி தப்பித்துச் சென்ற ஆயிரக்கணக்கானவர்களில், அந்நாட்டின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடக்கம். 69 எம்.பி-க்களில் 60 பேர் தற்போது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் சிதறிச் சென்றிருப்பதை பிபிசி கண்டறிந்துள்ளது. ஆனால், இன்னும் பலர் ஆப்கன் பெண்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராட விரும்புகிறார்கள்.
மஷித் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), தாலிபன் ஆப்கனை கையகப்படுத்திய உடனேயே தலைமறைவாகிவிட்டார். இரண்டு நாட்களுக்கு மேல் ஒரு வீட்டில் தங்கவே மாட்டார். வெவ்வேறு இடங்களுக்கு நகர்ந்துகொண்டேயிருந்தார். கூட்ட நெரிசல், குழப்பம், குண்டு வெடிப்புகள் என்று நாட்டைவிட்டு வெளியேற மக்கள் கூடியிருந்தபோது, காபூல் விமான நிலையம் களேபரமாக இருந்தது. அந்த அபாயத்திற்கு நடுவே தன் குடும்பத்தை அழைத்துச் செல்ல அவர் விரும்பவில்லை. அதுகுறித்துப் பேசுகையில், “ஆப்கனின் கதவுகள் மூடப்பட்டன” என்கிறார்.

ஆனால், மூன்று மாதங்கள் தலைமறைவாக இருந்தபிறகு, இரண்டு வாரங்களுக்கு முன்புதான் அவர் முகத்தை பர்காவில் முழுவதுமாக மூடிக்கொண்டு, தன் குழந்தைகளோடு பேருந்தில் ஏறினார். முதலில் ஹெராத்திற்குச் சென்று, அங்கிருந்து இரானிய எல்லையை அடைந்தனர். “தாலிபன்களைப் பற்றிய ஒரு விஷயம் சொல்ல வேண்டுமெனில், அவர்கள் பெண்களின் மூடிய முகத்தை வெளிபடுத்துமாறு கட்டாயப்படுத்த மாட்டார்கள்,” என்று கூறினார்.

சோதனைச் சாவடியில் அவர் அடையாளம் காணப்பட்டிருந்தால், நிச்சயமாகத் தடுக்கப்பட்டிருப்பார். ஆனால், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பர்கா அணிவதை தாலிபன் அதிகாரிகள் எதிர்பார்க்க மாட்டார்கள். அதோடு, “அனைத்து ஆப்கன் அரசியல்வாதிகள், பெண் ஆர்வலர்களும் வெளியேறிவிட்டதாக அவர்கள் நினைக்கிறார்கள்,” என்றும் கூறுகிறார்.

 இரான் வழியாக 10 நாட்கள் பயணித்து, மஷித் தற்போது துருக்கியில் இருக்கிறார். ஆனால், துருக்கிய அதிகாரிகள் அவரை அரசியல்ரீதியாகச் செயல்பட அனுமதிக்க மாட்டார்கள் என்று கவலைப்படுகிறார். ஆகையால், அங்கேயே தங்குவதில் அவருக்கு விருப்பவில்லை.

ஆப்கனில் பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிர்கொள்ளும் ‘கொடுமை’களைப் பற்றி உலகத்திற்குத் தொடர்ந்து சொல்லவும் மாற்றத்திற்காகப் பிரச்சாரம் செய்யவும் அவர் விரும்புகிறார். ஆப்கனில் தங்கியிருக்கும் உறவினர்களைப் பாதுகாப்பதற்காக, இப்போது அவர் தம் அடையாளத்தை மறைத்து வருகிறார்.

69 பெண் எம்.பி-க்களில் ஒன்பது பேர் ஆப்கனில் தலைமறைவாக உள்ளதாக பிபிசி நிறுவியுள்ளது.

மற்ற பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலருக்கும், ஆப்கனிலிருந்து மக்களை மீட்ட விமானங்களில் எப்படியோ இடம் பிடித்துக் கொண்டனர். இப்போது ஐரோப்பாவில் 46 பேர் இருக்கிறார்கள். அதுபோக, கிரேக்கம், அல்பேனிய், துருக்கியில் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர். மற்றவர்கள், ஆஸ்திரேலியாவிலிருந்து கத்தார் வரை பல்வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
எந்த நாட்டில் வசிக்கிறார்கள்
படக்குறிப்பு,எந்த நாட்டில் வசிக்கிறார்கள்

செரினா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), தன்னுடைய கணவர் மற்றும் மூன்று மாத குழந்தையுடன் ஜெர்மனிக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார். ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுவதற்கு முன், அவர் காசநோயினால் பாதிக்கப்பட்டார். தற்போது ஜெர்மனியில், புகலிடம் தேடுவோர் முகாமில் இருந்த படி சிகிச்சை பெற்று வருகிறார்.

தன் நாட்டைவிட்டு ஓடி வரவேண்டியிருக்கும் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை என்று கூறியவர், “நான் ஒருமுறைகூடப் பார்த்திராத கண்டத்தில், மொழி தெரியாத ஒரு நாட்டில் தொலைந்துபோனதாக உணர்கிறேன்,” என்கிறார்.

மேலும், “நான் கசப்பான நாட்களைக் கடந்துவிட்டேன். இன்னும் மோசமான சூழ்நிலையில் இருந்தாலும்கூட, ஒவ்வொரு ஆப்கானியரும் தற்போது எதிர்கொண்டு வரும் பிரச்சனைகளைச் சிந்திக்கும் போதெல்லாம், நான் என் வலியை மறந்துவிடுகிறேன்,” என்று கூறுகிறார்.

ஆப்கனுக்குத் திரும்புவது என்ற கேள்விக்கே இடமில்லை என்கிறார். அவர், தன் கணவர் மற்றும் குழந்தையோடு ஒரு ஜெர்மன் நகரத்தில், புதிய வீட்டிற்கு மாற்றப்பட்டு மீண்டும் வாழ்க்கையைத் தொடங்கத் தற்போது காத்திருக்கவேண்டும். அதேநேரம், அவர்கள் விட்டுவிட்டு வந்த இல்லத்தோடு தம் தொடர்பைத் தக்க வைத்துக்கொள்ள தம்மால் முடிந்தவரை முயல்கிறார்.

“நான் போரிலும் துன்பத்திலும் வளர்க்கப்பட்டேன். ஆனால், நான் என் குழந்தையை என் தாய்நாட்டின் அதே கலாச்சாரம், பழக்கவழக்கங்கள், உணர்வுகளோடு வளர்ப்பேன்.”

கனடா 5,000 ஆப்கன் அகதிகளுக்கு தங்கள் நாட்டில் அனுமதி அளிப்பதாகக் கூறியுள்ளது. பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்குச் செல்ல விரும்புகிறார்கள்.
செரினா தன் கணவரோடு நடந்து செல்கிறார்.

பட மூலாதாரம்,DERRICK EVANS
படக்குறிப்பு,செரினா தன் கணவரோடு நடந்து செல்கிறார்.

அதோடு, எங்கு சென்றாலும் சரி, மஷித் போன்ற பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களும், பெண்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராட விரும்புகிறார்கள். ஆப்கனில் பெண்களின் உரிமை மீறல் மீது கவனத்தை ஈர்க்கவேண்டும். மேலும், தாலிபன்களுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க, பெண்களுக்கான “நாடுகடத்தப்பட்ட நாடாளுமன்றம்,’ ஒன்றை உருவாக்குவதற்குச் சிந்தித்து வருகிறார்கள்.

இது ஆப்கனிலிருந்து பெண் எம்.பி-க்களை வெளியேற்றுவதற்கு ஏற்பாடு செய்த தன்னார்வ நிறுவனம் ஒன்றின் யோசனை. இதை, ஐரோப்பாவில் இருக்கும் சில எம்.பி-க்கள் ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்டார்கள். அது சாத்தியப்படுமா என்பது விரைவில் தெரியவரும்.

கனடா நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னர், கனடாவுக்கான ஆப்கன் பிரதிநிதியாக இருந்தவர், ஷிங்காய் கரோகைல். இப்போது, அவர் டொரொன்டோவிற்கு வெளியே ஒரு நகரத்தில் வசித்து வருகிறார்.

அவர், ஆகஸ்ட் 15 அன்று நடந்த நிகழ்வுகளை விவரிக்கும்போது, “நான் காலையில் எனது மாகாணத்தையும் பிற்பகலில் ஜனாதிபதியையும் இழந்தேன். அந்த நாளின் முடிவில் எதுவுமே என்னை ஆச்சர்யப்படுத்தவில்லை” என்று கூறினார்.

ஆப்கானிஸ்தானின் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புச் சட்டத்தின் உந்து சக்தியாக விளங்கிய ஷிங்காய் கரோகைல். “பெண் எம்.பி-க்கள் எதையும் சாதிக்க வேண்டுமானால், தங்கள் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கித் தள்ள வேண்டும்,” என்று அவர் எச்சரிக்கிறார்.

“நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் வேறுபட்ட முன்னுரிமை மற்றும் வேறுபட்ட அரசியல் ஆர்வத்தோடு, ஆப்கனின் வெவ்வேறு பகுதியை பிரதிந்தித்துவப்படுத்தினர். ஆனால், இப்போது நாங்கள் அனைத்தையும் இழந்துவிட்டோம்.” என்கிறார் ஷிங்காய்.

“நம்மிடையே இருந்த வேறுபாடுகள் அனைத்தையும் இழந்துவிட்டோம். நாட்டைக் காப்பாற்றுவதும் மக்களுக்கு ஆதரவளிப்பதும் பெண்களுக்காகக் குரல் கொடுப்பதும் மட்டுமே முக்கியம் என்பதை உணரவேண்டிய நேரம் இதுவென நினைக்கிறேன்,” என்கிறார் கரோகைல்.
ஆப்கன் பெண் குழந்தைகளின் கல்விக்காக பிரச்சாரம் செய்ய நம்பிக்கையோடு இருக்கிறார் எலெ எர்ஷாத்

பட மூலாதாரம்,DERRICK EVANS
படக்குறிப்பு,ஆப்கன் பெண் குழந்தைகளின் கல்விக்காக பிரச்சாரம் செய்ய நம்பிக்கையோடு இருக்கிறார் எலெ எர்ஷாத்

ஆம்ஸ்டர்டாமிற்கு வெளியே ஒரு சிறு வீட்டில், எலே எர்ஷாத ஆப்கன் மரபிலான மதிய உணவைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார். உள்ளூர் பல்பொருள் அங்காடியில் தனக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் கண்டுபிடிக்கப் போராடுகிறார். அதைச் சரியாகப் பெறுவது முக்கியம்.

“இது என் மக்களை நினைவூட்டுகிறது. அவர்களில் சிலர், சாப்பிடுவதற்குப் போதுமான உணவு இல்லாதவர்கள்,” என்று கூறுகிறார்.

எலே எர்ஷாத் சமீபத்திய ஆப்கன் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருக்கவில்லை. ஆனால், அதற்கு முன் பத்தாண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். பின்னர் அதிபர் அஷ்ரப் கனியின் செய்தித் தொடர்பாளராகப் பணியாற்றினார். ஆப்கன் கையகப்படுத்தப்பட்ட பிறகு அவருடைய வங்கிக் கணக்கை முடக்கினார்கள். ஆனால், அவர் தன்னை மறைத்துக் கொள்ளவேண்டிய அவசியம் இருப்பதாக உணரவில்லை. செப்டம்பர் மாதம் வணிக விமானத்தில் நாட்டை விட்டு வெளியேறினார்.

அவர் இப்போது ஆப்கனுக்குத் திரும்பத் தயாராகி வருகிறார். தாலிபனிலுள்ள தன்னுடைய தொடர்புகளின் வழியே பாதுகாப்பு கிடைக்குமென்று எதிர்பார்க்கிறார். மேலும், ஆப்கனுக்கு வெளியே இருந்துகொண்டு அங்கு மாற்றத்தை ஏற்படுத்துவது எந்தளவுக்குச் சாத்தியம் என்று அவர் சந்தேகம் கொண்டிருக்கிறார்.

“மற்ற நாடுகளிலோ அல்லது வெளிநாட்டிலோ இருந்துகொண்டு செயல்படுவது சாத்தியமில்லை. நாம் ஆப்கனுக்கு உள்ளேயே இருக்கவேண்டும். தீர்வு ஆப்கானிஸ்தானில் இருக்கிறது. நாங்கள் அதை அங்குதான் கண்டுபிடிக்க வேண்டும்,” என்கிறார்.

தாலிபன் அரசின் கீழ் இருந்தாலும்கூட, சர்வதேச தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்து பெண்களுக்கான பள்ளிகளை உருவாக்குவது, பெண்களின் கல்வி உரிமைக்காக வாதிடுவது போன்றவற்றை மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறார்.

“ஒரு பிரச்சனையிலிருந்து நீங்கள் ஓடிவிடுவதால், அது தீர்ந்துவிடாது. அந்தப் பிரச்சனை என்றென்றும் அங்கேயே தான் இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக