வியாழன், 9 டிசம்பர், 2021

மாரிதாஸ் கைது! 53 A, 505 (2) பிரிவுகளின் கீழ் இரு வழக்குகள்

மின்னம்பலம் : யு ட்யூப் வீடியோக்கள் மூலம் அடிக்கடி சர்ச்சை கருத்துகளை எழுப்பும் மாரிதாஸ் இன்று (டிசம்பர் 9) மதுரை சூர்யா நகரில் உள்ள அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்டார்.
நேற்று (டிசம்பர் 8) நீலகிரி மாவட்டம் குன்னூரில் இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அதில் அவர் உட்பட அவரோடு பயணித்த 13 பேரும் உயிரிழந்தனர்.
இந்திய விமானப் படை இதை விபத்து என்று உறுதி செய்திருக்கும் நிலையில் யு ட்யூபர் மாரிதாஸ் தனது ட்விட்டர் தளத்தில் இதுபற்றிய கருத்துகளை பதிவு செய்தார்.
முதலாவது பதிவில் திமுக, திமுகவினர் தேச விரோதிகள் என்று பொருள்படி, “திக, திமுக ஆதரவாளர்கள் பலரும் விபத்தில் இராணுவ தளபதி மரணத்தைக் கேலி செய்யும் விதமாகப் பதிவுகள் இடுவதும், சிரிப்பதுமாக எமோஜி போடுவதைக் காண முடிகிறது. ஒவ்வொரு முறையும் இதைச் செய்கிறார்கள். பிரிவினைவாத சக்திகளுக்கு திமுக சிறந்த தேர்வாக இருந்துவருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை” என மாரிதாஸ் குறிப்பிட்டிருந்தார்.அடுத்ததாக இன்று காலை தனது ட்விட்டர் பதிவில், “திமுக ஆட்சியின் கீழ் தமிழகம் இன்னுமொரு காஷ்மீராக மாறுகிறதா? தேசத்துக்கு எந்த பெரிய துரோகத்தையும் செய்யக்கூடிய ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்துக் கொள்ள இங்கே சுதந்திரம் இருக்கும் என்றால், அங்கே எந்த பெரிய சதிவேலை நடக்கவும் சாத்தியம் உண்டு. பிரிவினைவாத சக்திகள் ஒடுக்கப்பட வேண்டும்” என்று பதிவிட்டு சில நிமிடங்களில் அதை நீக்கிவிட்டார் மாரிதாஸ்.

இந்த நிலையில் இதுகுறித்து போலீஸாருக்கு தகவல்கள் சென்றன. இந்நிலையில் மாரிதாஸின் பதிவு குறித்து அவரிடம் விசாரிப்பதற்காக மதுரை புதூர் போலீஸார் சூரியா நகரிலுள்ள மாரிதாஸின் வீட்டுக்குச் சென்றனர். போலீஸார் மாரிதாஸ் வீட்டுக்கு சென்ற தகவல் பாஜகவினருக்கு கிடைத்தது. மாவட்டத் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சரவணன் தனது ஆதரவாளர்களுடன் மாரிதாஸ் வீட்டுக்கு வந்தார். பாஜக வழக்கறிஞர்களும் அங்கே வந்து மாரிதாஸை விசாரிக்க முறைப்படி சம்மன் இருக்கிறதா என்று போலீசாரிடம் கேட்டனர்.
அதன் பின் போலீசார் சம்மன் எடுத்து வந்து கொடுத்தனர். அதன் பின் மாரிதாசை காவல்நிலையம் அழைத்துச் செல்வதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாவட்ட பாஜக தலைவர் சரவணன் தன் காரிலேயே மாரிதாஸை போலீஸ் நிலையம் அழைத்துவருவதாக கூறினார். அதன்படியே அவரது காரில் போலீஸார் மாரிதாஸை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். இந்த சம்பவங்கள் நடப்பதற்கு சுமார் இரண்டு மணி நேரங்களுக்கு மேல் ஆனதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

“முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் மரணம் பற்றி இந்திய விமானப் படை, ஒன்றிய அரசு தெரிவித்துள்ள கருத்துகளுக்கு மாறாக எவ்வித அடிப்படை ஆதாரமும் இன்றி மாரிதாஸ் சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டுள்ளார். தன் கருத்தை அவர் அதன் பின் நீக்கிவிட்டார். இதுகுறித்து அவர் மீது 53 A, 505 (2) பிரிவுகளின் கீழ் இரு வழக்குகள் பதியப்பட்டுள்ளன. போலீஸ் முதல் கட்ட விசாரணை முடிந்து அவர் நீதிமன்றத்தின் முன் ஆஜர்ப்படுத்தப்படுவார்” என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கிறார்கள்.

இந்நிலையில் மாரிதாஸ் கைதை பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கண்டித்துள்ளார். அவர், “மதுரையில் மாரிதாஸ் அவர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்ட செய்தியைக் கேட்டறிந்து, அவரிடம் தொலைபேசி மூலமும் உரையாடினேன்! ஜனநாயகம் அளித்த கருத்துரிமையைப் பொருட்படுத்தாமல் பாரபட்சமான இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தி.மு.க-வை விமர்சித்தால் மட்டும் கைது? இதுதான் தமிழ்நாட்டின் தற்போதைய அவல நிலை. ஒருபக்கம் சமூக வலைத்தளத்தில் தன்னுடைய ஏவல் படையை தயார் செய்தும், இன்னொருபக்கம் தேசியவாதிகளை அறிவாலயம் அரசு கைது செய்கிறது! இந்த கபட நாடகத்தை தமிழக பாஜக வன்மையாக கண்டிக்கிறது!”என்று கூறியுள்ளார்.

-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக