திங்கள், 27 டிசம்பர், 2021

நிதி ஆயோக் சுகாதார தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு 2வது இடம் ! - உத்தர பிரதேசம் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.

 கலைஞர் செய்திகள் : “இதுதான் நீங்க சொன்ன வளர்ச்சியா?”: கடைசி இடத்தில் உத்தர பிரதேசம்- வெட்டவெளிச்சமாக்கிய நிதி ஆயோக் அறிக்கை!
நிதி ஆயோக் வெளியிட்டுள்ள சுகாதார தரவரிசை பட்டியலில் நாட்டிலேயே பெரிய மாநிலமான உத்தர பிரதேசம் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.
நிதி ஆயோக் வெளியிட்டுள்ள சுகாதாரத்துறை தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு 2ஆம் இடம் பிடித்துள்ள நிலையில், பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேசம் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.
ஒன்றிய அரசின் நிதி ஆயோக் சார்பில் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களின் சுகாதார உட்கட்டமைப்பை ஆய்வு செய்து தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டும். 2014ஆம் ஆண்டு முதல் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்த தரவரிசைப் பட்டியலுக்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதார நிலை 23 காரணிகளை கொண்டு மதிப்பீடு செய்யப்படுகிறது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள பெரிய மாநிலங்களுக்கான சுகாதார தரவரிசை பட்டியலில் கேரளா முதல் இடத்தைப் பிடித்துள்ளது. தமிழ்நாடு இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

இதில் தமிழ்நாட்டின் சுகாதாரத்துறைக்கு 72.42 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 2018-19, 2019-20 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலிலும் தமிழ்நாடு 2ஆம் இடத்தையே பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நிதி ஆயோக் வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் நாட்டிலேயே பெரிய மாநிலமான உத்தர பிரதேசம் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. அந்த மாநிலம் வெறும் 30.57 மதிப்பெண்களை மட்டுமே பெற்றுள்ளது.

பா.ஜ.கவின் யோகி ஆதித்யநாத் ஆட்சியில் உத்தர பிரதேசம் வளர்ச்சியடைந்து வருவதாக பா.ஜ.கவினர் பரப்புரை மேற்கொண்டு வரும் நிலையில் சுகாதாரக் கட்டமைப்பில் தொடர்ந்து அம்மாநிலம் பின்தங்கியிருப்பது உண்மை நிலையை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக