வெள்ளி, 10 டிசம்பர், 2021

நகைக்காக தாய் - மகள் வீட்டிற்குள் எரித்து கொலை: கூட்டாளியால் சிக்கிய 2 இலங்கை அகதிகள்

மணிமேகலை
காளியம்மாள்

BBC : மண்டபத்தில் நகை, பணத்தை கொள்ளையடித்து விட்டு, ரயில்வே பெண் ஊழியர் மற்றும் அவரது மகளை எரித்து கொன்ற வழக்கில் இலங்கை அகதிகள் இருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக மேலும் ஒருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ரயில்வே ஊழியர் காளியம்மாள் 58. அவரது மகள் பிகாம் பட்டதாரி மணிமேகலை 34. இந்த இருவரது உடல்களும் முற்றிலும் கருகிய நிலையில் உள்புறமாக பூட்டிய குடியிருப்பில் டிசம்பர் 7ம் தேதி காலை கண்டுபிடிக்கப்பட்டது.
காளியம்மாளின் மூத்த மகள் சண்முகபிரியா அளித்த புகாரின் அடிப்படையில் மண்டபம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெறவிருந்த காளியம்மாள், மண்டபம் முகாம் முனைக்காடு உமையாள்புரத்தில் புதிய வீடு கட்டி வந்தார்.


கட்டட வேலைகளில் புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த இலங்கை அகதிகள் 4 பேர் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், காளியம்மாள் குடியிருந்த ரயில்வே குடியிருப்பில் சேதமடைந்த தரை தளத்தை 4 பேரும் கடந்த 20 நாட்களுக்கு முன் பூசும் பணியில் ஈடுபட்டனர். அப்போது காளியம்மாளிடம் இருந்த நகை, பணத்தை நோட்டமிட்டு கொள்ளையடிக்க திட்டமிட்டதாக போலீசார் கூறுகின்றனர்.
இலங்கை அகதிகள் சிக்கினர்

"இந்த 4 பேரில் 3 பேர் மட்டும் டிசம்பர் 6 நள்ளிரவு அரிவாள், இரும்பு உள்ளிட்ட ஆயுதங்களுடன் காளியம்மாள் வீட்டின் பின்புற வாசல் வழியாக உள்ளே புகுந்தனர். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த காளியம்மாள், மணிமேகலை ஆகியோரை தாக்கி இவர்கள் கொலை செய்துள்ளனர். தடயத்தை மறைக்க உடல்களைத் தீயிட்டு எரித்துவிட்டு, பீரோவில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்துக்கொண்டு தப்பியுள்ளனர்" என்கிறது போலீஸ் தரப்பு.

போட்டோவுடன் கூடிய இருவரின் மரண செய்தியை பத்திரிகைகளில் பார்த்த, காளியம்மாள் வீட்டில் வேலை பார்த்த அகதி ஒருவர், தன்னுடன் வேலை பார்த்த மற்ற 3 பேர் மீது சந்தேகம் உள்ளதாக மண்டபம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதன்படி போலீசார் விசாரித்தனர். மண்டபம் முகாமில் வசித்து வரும் புதுக்கோட்டை அகதிகள் முகாம் சசிகுமார் , கரூர் மாவட்டம் குளித்தலை அகதிகள் முகாம் ராஜ்குமார் (எ) சம்பூர்ணலிங்கம் ஆகியோரை மண்டபம் போலீசார் கைது செய்தனர்.

இவர்களிடமிருந்து 4 தங்க வளையல், 2 செயின், 2 தோடு ஆகியவற்றை கைப்பற்றினர். இதில் தொடர்புடைய நிஷாந்தனை தேடி வருகின்றனர்.

தொடர்ந்து இருவர் இறப்பில் மர்மம் நீடித்து வந்ததால் தென் மண்டல ஐஜி அன்பு மண்டபத்தில் உள்ள காளியம்மாள் வீட்டில் நேரடியாக வந்து ஆய்வு செய்து பின் உடலை எடுத்த மருத்துவரிடம் நடந்தது குறித்து கேட்டறிந்தார்.
கூட்டாளியால் சிக்கிய கொலையாளிகள்

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மண்டபம் காவலர் ஒருவர், "கடந்த 7ஆம் தேதி அதிகாலை காவல் நிலையத்திற்கு வந்த தகவலின் அடிப்படையில் உடனடியாக சென்று பார்க்கும் போது எரிந்த நிலையில் இரண்டு உடல்கள் காளியம்மாள் வீட்டில் கண்டெடுக்கப்பட்டன.

ஆனால் இருவரும் யார் என தெரியாத அளவுக்கு முழுமையாக எரிந்த நிலையில் உடல்கள் இருந்தன. பின் காளியம்மாள் இளைய மகள் இருவர் அடையாளத்தையும் உறுதி செய்தார். இந்த இறப்பில் எங்களுக்கு அதிகமாக சந்தேகம் இருந்தது. காரணம் வீட்டின் உள் பக்கமாக தாழிட்டு இருந்தது.

எப்படி வெளிநபர்கள் உள்ளே சென்று கொலை செய்திருக்க முடியும் எனவே இது தற்கொலையாக இருக்கலாம் என்ற கேள்வி இருந்ததால், சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்துவந்தது. இந்நிலையில் காளியம்மாள் வீட்டில் இருந்த பணம் மற்றும் நகையை திருட திட்டமிட்டிருந்த நால்வர் குழுவில் ஒருவரை விட்டு விட்டு மற்ற மூவரும் பணம் நகையை திருடி விட்டு இருவரையும் கொலை செய்து விட்டு தப்பியதாக அந்த குழுவில் ஒருவர் காவல்துறைக்கு தகவல் அளித்தார்.

சம்பவத்தில் ஈடுபட்டதாக இருவரை கைது செய்துள்ளோம் மற்றவரை தொடர்ந்து தேடி வருகிறோம். இன்று இரவுக்குள் அந்த நபரையும் கைது செய்வோம்.

இரவு நேரங்களில் தனியாக இருக்கும் பெண்கள், முதியவர்கள் வீடுகளை கண்காணிக்க சீருடை அணியாத காவலர்களை இரவு நேரங்களில் காவல் பணியில் ஈடுபடுத்த உள்ளோம்," என்று தெரிவித்தார் அந்த காவலர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக