செவ்வாய், 28 டிசம்பர், 2021

முட்களின் மீது சில பட்டாம்பூச்சிகள்: கவிஞர் ஸர்மிளா ஸெய்யித் -1 -2 -3.. ஈழத்திலிருந்து ஒலிக்கும் முக்கியமான கலகக் குரல்..

முட்களின் மீது சில பட்டாம்பூச்சிகள்: கவிஞர் ஸர்மிளா ஸெய்யித் -1

மின்னம்பலம் - செவ்வாய் 19 டிச 2017  : முட்களின் மீது சில பட்டாம்பூச்சிகள்: கவிஞர் ஸர்மிளா ஸெய்யித் -12017-12-19T13:30:02+5:30
சந்திப்பு: தமயந்தி
(ஷர்மிளா ஸெய்யித்.. ஈழத்திலிருந்து ஒலிக்கும் முக்கியமான சமகாலப் படைப்பாளர்களில் முக்கியமானவர். அவரது கலகக் குரல் பெண் புனைவு மையத்தைக் கலைத்துப் போட்டு பின் அதில் நீந்தும் வண்ணங்களோடு வேறொரு சாயம் கலங்காத வானத்தைப் பரிந்துரை செய்கிறது.
இதனாலே எண்ணிலடங்கா எதிர்ப்புகளைச் சந்திக்கும் ஷர்மிளாவுடான இந்த உரையாடல் நிலப் போர் சூழலையும் மனப் போர் இறுக்கத்தையும் மதப் போர் அடக்குமுறைகளையும் முழுதாக வரைய முற்படுகிறது.)

உங்கள் குழந்தைப் பருவம், வீடு, சூழல் பற்றி இன்று நினைத்துப் பார்க்கும்போது… ?

 தேடல்களையும் கேள்விகளையும் இயல்பாகக் கொண்டது எனது குழந்தைப் பருவம். ஏறாவூரில், கயறுநிஸா – ஸெய்யித் அகமது தம்பதியரின் மூத்த மகள். ஒரு சகோதரன், மூன்று சகோதரிகளுடன் இயல்பான குடும்பம். எனது சில கவிதைகளில் சொல்லி இருப்பதுபோலவே பூவரச மரங்களிலிருந்து சிலுசிலுத்துக் கிளம்பிவரும் வரும் காற்றும், பாங்கொலியும் ஊதுபத்தி வாசனையுமாக ஏறாவூர் இயற்கையின் ஆசீர்வாதம்! மட்டக்களப்பு மீன்பாடும் தேனாடு எனச் சொல்லப்படுகின்ற நகரம். 

 மீன்பிடியும் விவசாயமும் பிரதான தொழில்கள். வாப்பா கிழக்கிலங்கைக்கும் தலைநகருக்கும் ஏற்றுமதி – இறக்குமதி வியாபாரத்தினூடாக ஊரில் அறியப்பட்ட, செல்வமும் செல்வாக்குமுடையவர். பிரதான ஏற்றுமதிப் பொருள் மீன். உம்மா, வாப்பா இருவரினதும் படிப்பு வாசிக்கவும் எழுதவும் அறிந்தவரைத்தான். எனினும் வெகு நூதனமாகச் சுதந்திரமாக, பாலியல் சமத்துவத்துடன், குழந்தைப் பருவத்தில் கிடைத்திருக்கக்கூடிய எல்லா வளங்களுடனும் வளர்க்கப்பட்டோம்.

ஏறாவூர் முற்றிலும் இஸ்லாமியச் சூழல் கொண்ட ஊர். ஆறு வயதிலிருந்து சைக்கிள் ஓட்டினேன். அந்தக் காலத்தில் இஸ்லாமியச் சூழலில் ஒரு பெண் பிள்ளை சைக்கிள் ஓட்டுவதென்பது அவ்வளவு விரும்பத்தகுந்த காரியமில்லை. பன்னிரண்டு வயதிலும் முட்டிக்கால் வரை சட்டையும் இரட்டை ஜடையுமாக சைக்கிளோட்டித் திரிந்த என்னால் உம்மா, வாப்பாவுக்குக் கிடைத்ததெல்லாம் அவமானங்கள்தான். ஒரு பெண் பிள்ளையை எப்படி வளர்ப்பதென்று என் பெற்றோருக்குப் பலரும் வகுப்பெடுத்தார்கள். பெண் குழந்தையின் சிறு பிராயங்களை அனுபவிக்கத் தராத, சிறுமியை அவளது ஏழு வயது முதலே பெண்ணாகப் பார்க்கிற ஊரில் இப்படியாக வளர்ந்தேன் என்று நினைத்துப் பார்க்கையில் நெகிழ்வாக இருக்கிறது. பத்து பன்னிரண்டு வயதில் சைக்கிள் ஓட்டுவதற்கு ஏங்குகின்ற சூழல்தான் இன்றைக்கும் எங்கள் ஊரில் இருப்பது.

எனது சுதந்திரத்திற்காகக் கடுமையாகத் தண்டிக்கப்பட்டிருக்கிறேன். இருட்டறையில் பூட்டப்பட்டிருக்கிறேன். மரத்தில் கட்டிவைக்கப்பட்டிருக்கிறேன். என்னை மாற்றவும் எனது சுதந்திரக் குணாதிசயங்களைக் கட்டுப்படுத்தவும் எடுக்கப்பட்ட இந்த முயற்சிகளையும் உக்கிப்போன நம்பிக்கைகளையும் பொய்யாக்கிச் சுதந்திரமானவளாகவே வளர்ந்திருக்கிறேன்.

உங்களின் கல்லூரிக் காலம்... என்ன படித்தீர்கள்?

பள்ளிப் படிப்பு முடிந்ததுமே வீட்டைவிட்டுப் புறப்பட்டுவிட்டேன். முழுக்க முழுக்க சுய தீர்மானங்களுடன் சுய உழைப்புடனும் எனது 19ஆவது வயது வாழ்வைத் தொடங்கினேன். பத்திரிகைத் துறையிலிருந்த ஈடுபாடு காரணமாக ஊடகக் கல்வியைக் கற்கும் பொருட்டே கொழும்புக்கு வந்தேன். கொழும்பு வந்ததும் கல்வி ஒரு தாகமாகவே மாறிவிட்டது. பரிச்சயமற்ற மொழியும், அறிமுகமில்லாத மனிதர்களுடனான சகவாசமும் அனுபவங்களும் என்னில் நிறையவே மாற்றங்களை ஏற்படுத்தின. கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்தில் கல்வி முகாமைத்துவத்தில் பட்டப்படிப்பை முடித்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் இதழியல், கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உளவியல் ஆகியனவும் கற்றேன். இவை தவிர தொழில்முறை ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிகள், பயணங்கள், கள அனுபவங்கள், மனித உரிமைகள் தொடர்பான கற்கைகள் நிறையக் கற்றுத்தந்தன.

முழுமையான கல்லூரி அனுபவம் என்று சென்னை ஸ்டெல்லா மேரிஸில் படித்த காலத்தைச் சொல்லலாம். சமூகப் பணித்துறையை (Social Work) அங்குதான் மூன்றாண்டுகள் கற்றேன்.

உங்கள் இளம் வயதில் என்னவாக ஆக வேண்டும் என விரும்பினீர்கள்?

இளமைக் காலத்தில் சட்டம் படிக்க வேண்டும், சட்டத்தரணியாக வர வேண்டும் என்ற ஆசை இருந்தது. அது நிறைவேறவில்லை. பிற்காலத்தில் அது நிறைவேறக்கூடிய வாய்ப்புகள் வந்தபோது சூழல்கள் பொருந்தவில்லை.

கவிதை பக்கம் மனம் சாய்ந்தது எப்போது? அந்தக் கவிதை நினைவிருக்கிறதா?

பதின்மப் பருவத்திலிருந்து… ‘வாழ விரும்புகிறேன்’ என்ற கவிதைதான் எனக்குத் தெரிந்து நானெழுதிய முதலாவது கவிதை. சிறகு முளைத்த பெண் கவிதைத் தொகுப்பில் இருக்கும்.

நிலைகுலைக்கும் இந்த வலியிலிருந்து

வெளியேற விரும்புவதேயில்லை நான் – ஏன்?

வலிகளை மெய்யாகவே விரும்புகிறேன். ஒவ்வொரு முறையும் வலி, எந்த வடிவத்தில் வந்தென்னைத் தாக்கும்போதும் அதைக் கடந்துவிடுவதற்கான பிரயத்தனங்களில் என்னை செதுக்கிக்கொள்கிறேன். வலிகளுக்குப் பிறகு, சுடுபட்ட தங்கத்தைப் போல தெளிவான என்னைக் காணுகின்றேன். எனக்கு நிகழ்ந்த எல்லாவித அநீதிகளும் என்னைப் பிடித்துத் தள்ளிய தோல்விகளும் ஏமாற்றங்களும் மீண்டும் எழுந்து நிற்பதற்கான மனத்திடத்தையே தந்திருக்கின்றன. தனிமை, ஏமாற்றம், பிரிவு, இழப்பு, அவமானம் என்று வலி எந்த வடிவத்தில் வந்தாலும் விரும்பி ஏற்கவே விரும்புகிறேன்.

பர்தாவிலிருந்து எப்போது வெளிவரும் மனம் தோன்றியது?

பர்தாவிலிருந்து வெளிவரவில்லை. பர்தாவைப் பற்றி ஏற்படுத்தப்பட்டிருக்கும் பொதுவான புரிதல்களிலிருந்தே வெளியே வந்தேன். ஒரு சிறுமி தலையை மறைக்க வேண்டியது ஏனென்ற கேள்வி ஆறு, ஏழு வயதுகளிலேயே வந்துவிட்டிருந்தது. பச்சிளம் பருவத்தில் குர்ஆன் மதரஸாவுக்குக் கால்களை மறைக்கும்படியான நீண்ட உடைகளை அணிய மறுத்ததிலிருந்து கேள்விகள் தொடங்கின. எனது பன்னிரண்டாம் வகுப்பு வரைக்கும் பர்தாவில்தான் பள்ளிக்குப் போக வேண்டியதிருந்தது. அது கட்டாயம். அங்கே மீறல்களுக்கு இடமில்லை. படிப்பு வேண்டுமென்றால் பர்தாவுடன்தான் பள்ளிக்குச் செல்ல வேண்டும். இஸ்லாமியப் பாரம்பர்யமான ஊரொன்றில் வேறு தெரிவுகள் இருக்க முடியாது.

பர்தாவைக் களைந்த போதான உணர்வு எவ்வாறிருந்தது?

முன்பே சொன்னதுதான்! பர்தாவிலிருந்து வெளிவரவில்லை. பர்தாவைப் பற்றி ஏற்படுத்தப்பட்டிருக்கும் பொதுவான புரிதல்களிலிருந்தே வெளியே வந்தேன். பர்தாவைக் களைவதென்பது தலையை மூடியிருக்கும் ஒரு துண்டுத் துணியைக் களைந்தெறிவதில்லை. என்னைப் பொறுத்தவரை பர்தா என்பது தலையை மூடிக்கொண்டு இருக்கக் கூடிய ஒரு துண்டுத் துணியில்லை.

என்னென்ன எதிர்வினைகள் இருந்தன?

சமூகம் எதிர்பார்க்கின்ற அல்லது அடையாளப்படுத்துகின்ற பர்தாவிலிருந்து வெளியேறியதற்கான எதிர்வினைகளைப் பற்றிக் கேட்கிறீர்கள் என நினைக்கிறேன். பர்தா அணியாத இவளை ஓர் இஸ்லாமியப் பெண்ணாக மட்டுமல்ல, ஒரு பெண்ணாக ஏற்றுக்கொள்வதற்கே சமூகம் தயங்குகிறது என்பேன். சமூக மதிப்பீடுகளிலிருந்து புறக்கணிப்பட்டேன், புறக்கணிக்கப்படுகின்றேன். ஒரு முழம் துணித் துண்டுக்கு அளிக்கின்ற மரியாதை ஒரு மனுஷிக்கு இல்லை என்பதில் உள்ள மதச் சாயமிடப்பட்ட அரசியல் மிக ஆபத்தானது. நமது பாதையில் எப்போதும் கற்களையும் முட்களையும் பரப்பிக்கொண்டே இருப்பது. என்னை இஸ்லாத்திற்கு எதிரானவள் என்றும், மேலைத்தேய சக்திகளினால் இயக்கப்படுகின்றவள் என்றும் வெறுப்புப் பிரசாரம் செய்வது தொடர்ந்து நடந்துகொண்டேயிருக்கிறது. பொதுவெளிக்கு வருவதற்குத் துடிக்கும் இளைய சமுதாயப் பெண்களைக்கூட “ஸர்மிளா ஸெய்யித்திற்கு நேர்ந்ததுபோலப் புறக்கணிக்கப்படுவாய்” என்று எச்சரிக்கும் அளவுக்கு எதிர்வினைகள் நடந்துகொண்டிருக்கின்றன.

கத்னா – இதற்கு எதிரான உங்கள் குரல் வலியது. நீங்கள் இந்தப் போராட்டத்தில் எப்படி ஈடுபட்டீர்கள்?

கத்னா என்பது பெண் உடல் மீதான அத்துமீறல். இது மதரீதியான செயற்பாடு அல்ல, கலாசார ரீதியான செயற்பாடே என்று சொல்லப்படுகின்றது. ஆனால் சில மதவாதிகள் கத்னாவுக்கு ஆதரவாகச் செயற்படுகின்றார்கள். கத்னா மத ரீதியான செயற்பாடு என்றாலும் சரி, கலாசார ரீதியான செயற்பாடு என்றாலும் சரி, நிறுத்தப்பட வேண்டியது. கத்னா புழக்கத்தில் இல்லை என்பதாகத்தான் நான்கூட நம்பிக் கொண்டிருந்தேன். இந்தத் தலைமுறைப் பெண் குழந்தைகள் இந்தக் கொடுமைக்கு ஆளாகவில்லை என்று நம்பிக்கொண்டிருந்த ஒரு பொழுதில்தான் 2014இல் எங்கள் குடும்பத்திற்குள்ளேயே கத்னா செய்யப்பட்டதை அறிந்து அதிர்ந்தேன். அப்போது தொடங்கிய தேடல்தான்.

இரண்டு தசாப்தங்களுக்கு முன்பே இல்லாமலாகிப் போய்விட்டதாக நம்பிக்கொண்டிருந்த ஒரு பண்பாடு யாருக்கும் தெரியாதபடியாக ரகசியமாக இன்னும் உயிர்ப்போடு இருப்பதைக் கண்டறிந்ததில் இருந்து ஈடுபாடு தொடங்கியது. பெண் கத்னாவை எதிர்த்துக் குரல் எழுப்பும் பல பெண்களும் ஆண்களும் இப்போது அடையாளப்படுத்தப்பட்டுப் பொதுநோக்குடன் ஒன்றாகச் செயல்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனை முடிவுறுத்துவது அப்படியொன்றும் எளிதான காரியமில்லை. முன்பே ஓரிடத்தில் சொல்லியதுபோல பெண்களையும் உள்வாங்கிக்கொண்ட வகையில் பெண்களுக்கு அநீதி இழைக்கும் முறைமையுடன் கூடிய செயல்பாடாக இருக்கும் பெண் கத்னா குறித்து பாரிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் தேவையாக உள்ளன.

கத்னாவை மறுக்கும் பெண் எப்படி நடத்தப்பட்டாள்?

கத்னா தனக்கு வேண்டாம் என்று பெண்கள் மறுக்க முடியாது. ஏனென்றால் கத்னா செய்யப்படுவது பெண் குழந்தை பிறந்த நாற்பதாவது நாள்களில். பிறந்து நாற்பதே நாள்கள் ஆன ஒரு பிஞ்சுக் குழந்தையால் எதனையுமே மறுக்க முடியாது. கத்னாவை மட்டும் எப்படி மறுக்க முடியும்?

தலாக் – உங்கள் பார்வை?

தலாக் எனும் சொல்லுக்கு விடுவித்தல், அவிழ்த்தல், கைவிடுதல் என்பதாகப் பொருள் கொள்ளலாம். பொதுவான பயன்பாட்டில் இச்சொல் விவாகரத்து எனும் மணமுறிவை குறிக்கும்.

திருமணம் என்பது வாழ்க்கை ஒப்பந்தம். ஓர் ஆணும் பெண்ணும் கணவன் மனைவியாக ஒப்பந்தம் செய்துகொண்டு மனம் ஒன்றி இல்லற வாழ்வைத் தொடங்கியிருக்கும்போது மனக் கசப்பு, உறவில் விரிசல், இருவரும் இனிமேல் இணைந்து வாழவே முடியாது போன்ற தவிர்க்க முடியாத நெருக்கடிகள் தோன்றலாம். இத்தகைய சூழலில் திருமண உடன்படிக்கையை ரத்து செய்யும் பொருட்டே மணவிலக்குச் சட்டத்தை இஸ்லாம் அனுமதித்துள்ளது. மணவிலக்கு விடயத்தில் இஸ்லாம் ஆண்களுக்கு ‘தலாக்’ எனும் உரிமையை வழங்கியிருப்பது போன்று பெண்களுக்கு ‘குல்கூ’ எனும் உரிமையை வழங்கியிருக்கிறது. இந்த இருவகையான மணவிலக்குச் சட்டங்களும் பல்வேறு நிபந்தனைகள் கட்டுப்பாடுகளைக் கொண்டது.

இலங்கை போன்ற அரபு தேசம் அல்லாத முஸ்லிம்கள் வாழும் நாடுகளில் "இஸ்லாமிய விவாக விவாகரத்துச் சட்டம்” காதி நீதிமன்றின் தன்னிச்சையான போக்குகளுக்குள் மட்டுப்பட்டிருப்பதைக் காண முடியும். முறையான கண்காணிப்புப் பொறிமுறைகள் இல்லை. காதி நீதிபதிகள் சட்டத்திற்குக் கட்டுப்படுவதைவிடவும் தனிமனிதர்களின் யதேச்சாதிகாரத்திற்கே கட்டுப்பட்டவர்களாக உள்ளார்கள். உதாரணமாக, ‘முத்தலாக்’ விடயத்தில் தலாக் என்ற சொல்லை கணவன் மூன்று தடவைகள் மொழிய வேண்டும். ஒவ்வொன்றுக்குமிடையில் ஒரு மாதவிடாய் காலம் காத்திருத்தல் வேண்டும். கோபத்தில் தலாக் கூறுதல் கூடாது போன்ற இறுக்கமான நிபந்தனைகள் உள்ளன. ஒருவன் மனைவியை ஒரே நேரத்தில் ‘தலாக் – தலாக் – தலாக்’ என்றோ, ‘முத்தலாக்’ என்றோ, ‘மூன்று தலாக் கூறிவிட்டேன்’ என்றோ கூறி விவாகரத்துச் செய்தால் அத்துடன் எல்லாமே முடிந்துவிடும் என்பது இஸ்லாத்திற்கு எதிரான, தவறான நடைமுறை. ஆனால், நடைமுறையில் கணவன் வெளிநாட்டிலிருந்தபடியே வாட்ஸ்அப்பில் முத்தலாக் சொல்வதைக்கூட காதி நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. இம்மாதிரியான ஒருதலைபட்சமான விவாகரத்து, பெண்களுக்கு உரிய பராமரிப்பு, நஷ்டஈடுகளைப் பெற்றுக்கொடுப்பதில் பாரபட்சம் போன்ற குளறுபடிகள் பல்வேறு சமூகப் பிரச்னைகளுக்குக் காரணமாக இருக்கின்றன. ஒரு பிரச்னையைத் தீர்ப்பதற்கான தீர்வு இன்னுமொரு பிரச்னையைத் தோற்றுவிக்கும்படியாக நடைமுறைப்படுத்தப்படுவது மோசமான முன்னுதாரணம்.

சட்டக் கல்லூரி சென்று சட்டம் பயின்று சட்டத்தரணியான பெண்களும்கூட ஹாதி நீதிபதியாக முடியாதா? சட்டம் மதத்தை ஆதரிக்கிறதா?

சட்டத்தையும் மதத்தையும் இங்கே சம்பந்தப்படுத்த வேண்டிய புள்ளி வேறு. இலங்கையில் தற்போது நடைமுறையில் இருக்கின்ற இஸ்லாமிய விவாக விவாகரத்துச் சட்டத்தில் (Muslim Marriage and Divorce Act) முன்வைக்கப்படும் பல்வேறு திருத்தங்களில் (Reform) ஒன்றாக, காதி நீதிமன்றங்களில் பெண்களும் உள்வாங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம். முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்திற்கும் நடைமுறைப்படுத்தப்படும் காதி முறைமைக்கும் சீர்திருத்தம் அவசியம். இந்தச் சீர்திருத்தத்தில் இஸ்லாத்தில் ஏற்பட்டிருக்கும் நவீன முன்னேற்றங்களையும், மனித உரிமைகளையும், அடிப்படை உரிமைகளையும், பால்நிலைச் சமத்துவத்தையும் கணக்கில் எடுக்கப்பட வேண்டும்.

இலங்கையின் முஸ்லிம் தனியார் சட்டத்தில் (Muslim Personal Law) தற்போதுள்ள நீதிமன்ற அமைப்பில் பெண்கள் நீதிபதியாக இருக்க முடியாது. இங்கே காதி நீதிமன்றங்களை மேற்பார்வை செய்யும் பொறிமுறை இல்லை. அரச மேற்பார்வை, ஒழுங்குக் கோட்பாடுகள், கட்டமைப்புக்கள் எதுவுமில்லாது செயற்படுகின்ற காதி நீதிமன்றங்களில் காதியார் மற்றும் பள்ளி பரிபாலன சபை என இவர்கள் செலுத்தும் ஆதிக்கம் பெண்களின் வாழ்வு சம்பந்தமான முக்கிய நிலைகளைப் பெரிதும் பாதிக்கின்றது.

இதனைப் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்குப் பங்களிப்புச் செய்யும் காரணியாகப் பார்க்க வேண்டியுள்ளது. பெண்களைக்கொண்டு நீதி செலுத்த முடியாது என தனியான காதி நீதிமன்ற முறைமைக்கு ஆதரவானவர்கள் தெரிவித்துவருகிறார்கள். காதி நீதிபதிகளாக இருக்கின்ற ஆண்கள் சட்டம் பயின்றவர்கள் இல்லை. சட்டம் பற்றிய அடிப்படைத் தகுதியற்ற ஆண்கள் காதி நீதிபதிகளாக இருக்க முடியும் என்றால் ஏன், சட்டம் பயின்ற பெண்கள் காதி நீதிபதிகளாக இருக்க முடியாது?

பலதார மணத்துக்கு எதிராக உங்கள் குரல் ஓங்கி ஒலிக்கிறது. அதன் சிக்கல்களாக நீங்கள் பார்ப்பது எவற்றை?

(இந்த நேர்காணலின் அடுத்த பகுதி ...

  கவிஞர் ஸர்மிளா ஸெய்யித் - 2

  கவிஞர் ஸர்மிளா ஸெய்யித் - 3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக