சனி, 27 நவம்பர், 2021

உக்ரேனை இரசியா ஆக்கிரமிக்குமா?

இலக்கியா .இன்போ  :  94,000 இரசியப் படையினர் உக்ரேன் எல்லையில் குவிக்கபட்டு போர் பயிற்ச்சியில் ஈடுபட்டுள்ளனர் என அமெரிக்கப் பாதுகாப்புத்துறையை மேற்கோள் காட்டி புளூம்பேர்க் ஊடகம் 2021 நவம்பர் 21-ம் திகதி தகவல் வெளியிட்டது.
உக்ரேன் அரசு பிரிவினைவாதிகள் கையில் உள்ள உக்ரேனின் கிழக்குப்பகுதியில் உள்ள Donetsk மற்றும் Luhansk பிரதேசங்களில் இரசியப் படைகள் தமது ஆக்கிரமிப்புத் தாக்குதல் தயார் நிலையை விரிவு படுத்தி வருகின்றன என அறிவித்துள்ளது.
உக்ரேனின் இறைமைக்குட்பட்ட அந்த இரண்டு பிரதேசங்களும் 2014இல் தம்மை தனி நாடுகளாக பிரகடனப் படுத்தியுள்ளன.
   2014இல் உக்ரேனின் கிறிமியாப் பகுதியை இரசியா தன்னுடன் இணைத்துக் கொண்டது. அமெரிக்கப் படைத்துறையினர் மற்ற நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு உக்ரேன் எல்லையை நோக்கி இரசியா படைநகர்வு செய்வதைப் பற்றி அறிவுறுத்தியுள்ளார், அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் அண்டனி பிளிங்கென் உக்ரேனை ஆக்கிரமிப்பது பற்றி இரசியாவிற்கு தன் எச்சரிக்கையையும் தெரிவித்துள்ளார்

எல்லைகளில் தொல்லை

இரசியா உக்ரேன் எல்லையில் படைகளைக் குவிக்கையில் இரசியாவின் நட்பு நாடான பெலரஸ் போலாந்து எல்லையில் பெருமளவு தஞ்சக் கோரிக்கையாளர்களை மேற்காசிய நாடுகளில் இருந்து கொண்டு வந்து குவித்திருந்தது.

ஐரோப்பிய ஒன்றியம் பெலரஸ் மீது மேலும் பொருளாதாரத் தடையை அதிகரிக்கலாம் என அறிவித்ததைத் தொடர்ந்து பெலரஸ் தஞ்சக் கோரிக்கையாளர்களை போலாந்து எல்லையில் இருந்து அகற்றி விட்டது.

பெலரஸின் பின்னால் இரசியா நின்று செயற்படுவதாக மேற்கு நாட்டு ஊடகங்கள் குற்றம் சுமத்தின.

இரசியா மேன் படையினரையும் (Reserve Force) என்றுமில்லாத அளவில் திரட்டுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

2021 நவம்பர் முதலாம் திகதி அமெரிக்க உளவுத்துறையான சிஐஏயின் அதிபர் வில்லியம்ஸ் பேர்ண் இரசியா சென்று உக்ரேனை இரசியா ஆக்கிரமிப்பிற்கு எதிரான அமெரிக்காவின் எச்சரிக்கையை இரசியாவிடம் தெரிவித்திருந்தார்.

கேந்திர முக்கியம்மிக்க உக்ரேன்

இரசியாவிற்கு அடுத்தபடியாக ஐரோப்பாவில் இரண்டாவது பெரிய நிலப்பரப்பைக் கொண்ட நாடாக இருக்கும் உக்ரேன்

இரசியா, போலாந்து, சுலோவேனியா, ஹங்கேர், பெலரஸ், மொல்டோவா, ருமேனியா ஆகிய நாடுளுடனும் அஜோவ் கடலுடனும் செங்கடலுடனும் எலைகளைக் கொண்டுள்ளது.

இரசிய எல்லையில் உக்ரேனுக்குள் உயர் மலைத் தொடர் இருப்பது இரசியாவைப் பொறுத்தவரை உக்ரேன் ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடாகும். உக்ரேன் இரசியாவின் எதிரிகளின் கைகளில் இருந்தால் அது இரசியாவிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும். அதனால் உக்ரேன் நேட்டோவில் இணைவதை எந்த விலை கொடுத்தும் தடுப்பதற்கு இரசியா தயாராக உள்ளது என்பதை உக்ரேனுக்கு எதிராக இரசியா 2014இல் செய்த படை நடவடிக்கை எடுத்துக் காட்டுகின்றது.

இரசியாவின் செய்மதி அழிப்பு ஏவுகணைப் பயமுறுத்தல்

இரசியா தனது செய்மதி அழிப்பு ஏவுகணைகளை (AST Anti Satellite Missiles) 2021 நவம்பர் 15-ம் திகதி வெற்றிகரமாக பரிசோதித்தது.

இரசியாவில் இருந்து விண்ணை நோக்கி செலுத்தப்பட்ட ஏவுகணை Direct-Ascent missile வகையைச் சார்ந்தது. அது தரையில் இருந்து செலுத்தப்பட்டு நேரடியாக இலக்கின் மீது மோதி வெடிக்கக் கூடியது.

விண்வெளியி இருந்த இரசியாவின் சொந்த செய்மதி ஒன்றை அது அழித்த போது பல துண்டங்களாக சிதறியது.

அத்துண்டங்கள் வான்வெளியில் உள்ள பல செய்மதிகளுக்கு ஆபத்தானவை என்பதால் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிலையமான நாசா கடும் விசனமடைந்தது. இரசியாவால் முப்பதிற்கு மேற்பட்ட அமெரிக்க செய்மதிகளை அழித்து அமெரிக்க படையினரைக் “குருடாக்க” முடியும் என்ற இரசிய உளவுத்துறை தெரிவித்தது.

பொருளாதார காரணிகள்

உக்ரேன் இரசியாவின் யூரேசியா பொருளாதாரக் கூட்டணையில் இணைய வேண்டும் என இரசியா விரும்புகின்றது.

இரசியா பொருளாதார வலிமையை அடைவதை விரும்பாத மேற்கு நாடுகள் உக்ரேன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதை விரும்புகின்றன.

ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதறகான நிபந்தனைகளை நிறவு செய்யும் அளவிற்கு அதன் பொருளாதாரம் இன்னும் மேன்மையடையவில்லை.

அதனால் ஐரோப்பிய ஒன்றியம் உக்ரேனுடன் சில வர்த்தக் ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. அவற்றின்படி ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆழமானதும் முழுமையானதுமான சுதந்திர வர்த்தக வலயத்தில் உக்ரேனும் ஒரு நாடாக இணைந்துள்ளது. இதில் உக்ரேனைப்போலவே மொல்டோவா, ஜேர்ஜியா ஆகிய நாடுகளும் உள்ளன.

இருதலைக் கொள்ளியெறும்பாக அமெரிக்கா

அமெரிக்கா இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் அதிக கவனம் செலுத்துவதற்காக இரசியாவுடனான தனது முறுகல் நிலையை உறை நிலையில் வைத்திருக்க முடிவு செய்திருந்தது.

இரசியா உக்ரேன் மீதும் சீனா தைவான் மீதும் ஒரேயடியாக தாக்குதல் செய்தால் அமெரிக்காவால் இரண்டு முனைகளில் அதிக அளவு மீயுயர் ஒலிவேக ஏவுகணைகளை (Hypersonic Missiles) வைத்திருக்கும் இரு வல்லரசு நாடுகளுடன் போர் செய்ய முடியாது.

இதை இரசியா தனக்கு சாதகமாகப் பார்க்கின்றது. அத்துடன் 2010-ம் ஆண்டில் இருந்து அமெரிக்காவிற்கு பல தொல்லைகளை இரசியா கொடுத்து வருகின்றது.

சிரியாவில் அமெரிக்காவை வலுவிழக்கச் செய்தது. அமெரிக்காவில் பல இணையவெளி ஊடுருவல் இரசியாவில் இருந்து செய்யப்பட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியிருந்தது.

இரசியாவின் வரவு செலவுக் கணக்கு

உக்ரேனின் டொன்பாஸ் பகுதிக் கிளர்ச்சிக்காரர்களுக்கு உதவி செய்வதற்கு இரசியா பெருமளவு செலவழிக்க வேண்டி இருக்கின்றது.

உக்ரேனை முழுமையாக கைப்பற்றினால் இந்தச் செலவுகளைத் தவிர்க்கலாம் என்ற கருத்து இரசியாவில் முன்வைக்கப்பட்டுள்ளது.

2014-ம் ஆண்டில் இருந்ததிலும் பார்க்க உக்ரேனியப் படைகள் தற்போது அதிக பயிற்ச்சியும் மேலதிகப் படைக்கலன்களையும் அமெரிக்காவிடமிருந்து பெற்றுள்ளது.

இரசியாவின் ஆக்கிரமிப்புத் திமிரால் உக்ரேனியர்கள் அதிக சினம் கொண்டுள்ளனர். அதனால் உக்ரேனியப் படையினர் அதிக ஈடுபாட்டுடன் இரசியர்களை எதிர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உக்ரேனை பெருமளவு இழப்புக்களுடன் இரசியா கைப்பற்றினாலும் அதை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க இரசியா பெருமளவு செலவு செய்ய வேண்டியிருக்கும்.

இரசியாவின் தாக்குதல் திட்டம்

உக்ரேனின் உளவுத்துறையின் அதிபர் ஜெனரல் கிரிலொ பனரனோவ் வெளியிட்ட தகவலின் படி இரசியா வானில் இருந்து ஆகாயக்குடைகள் மூலம் தரையிறக்கல், கடல்வழி ஈரூடக தரையிறக்கல், தரைவழி நகர்வு ஆகியவற்றின் மூலம் உக்ரேனை ஆக்கிரமிக்க திட்ட மிட்டுள்ளது.

உக்ரேனை இரசியா பத்து முனைகளில் நாற்பது Battalion Tactical Groups (BTGS) மூலம் தாக்கலாம் என்றான் பனரனோவ்.

94,000 படையினர் 1200 தாங்கிகள், 1600 சேணேவிகள், (ஆட்டிலெறிகள்), 330 போர்விமானங்கள், 75 கப்பல்கள், 6 நீர்மூழ்கிகள் போன்றவற்றுடன் உக்ரேனை ஆக்கிரமிக்கலாம். மிகவுக் குளிரான கால நிலை நிலவும் ஜனவரி இறுதி அல்லது பெப்ரவரி ஆரம்பித்தில் இரசியா தனது ஆக்கிரமிப்பை மேற்கொள்ளலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இரசியப் படைத்துறையின் பேச்சாளர் உலகெங்கும் படைகளை அனுப்பும் நாடுகள் எமது நாட்டு எல்லைக்குள் எமது படையினர் செய்யும் நகர்வுகளை போர் என பீதியைக் கிளப்புகின்றனர் என்றார்.

இரசிய உளவுத்துறையின் (SVR) அறிக்கை: அமெரிக்கா பயமூட்டுகின்றது. (“Whipping up hysteria”) எனத் தெரிவிக்கின்றது.

-veltharma.com-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக