திங்கள், 8 நவம்பர், 2021

தொடர் கனமழை... மீண்டும் மிதக்கும் சென்னை...

 நக்கீரன் : நேற்றிரவு முதலே சென்னையில் பல இடங்களில் கனமழை தொடர்ச்சியாகத் தொடர்ந்து பெய்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 3 நாட்களுக்குக் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், புதுச்சேரியில், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கரூர், திருச்சி, நீலகிரி, கோவை, கள்ளக்குறிச்சி, சேலம் புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும். தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூரில் கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாளை விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுச்சேரி, சென்னையில் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 10 மற்றும் 11ம் தேதிகளில் சென்னை உட்பட வட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 9-ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் கரைக்குத் திரும்பி வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு நாட்களுக்குத் தென்மேற்கு வங்கக்கடல் ஆந்திர கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக வீடுகளில் மழைநீர் புகுந்தது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து இருப்பதால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். கனமழை காரணமாகத் தண்ணீர் தேங்கி உள்ளதால் சென்னையில் 6 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது. ஈவிஆர் சாலை சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை, வியாசர்பாடி சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, கணேசபுரம் சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வில்லிவாக்கம் சுரங்கப்பாதையில் இலகுரக இருசக்கர வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் முடிவு செய்து கொள்ளலாம் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் கண்காணிப்பு அதிகாரிகள் 15 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே 3:50 முதல் மீண்டும் மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
 
சென்னை புளியந்தோப்பு பகுதியில் மழைநீர் வீட்டிற்குள் புகுந்ததால் மக்கள் அவதியடைந்தனர். வேளச்சேரி ராம்நகர் பகுதியில் மழைநீர் தேங்கியது. மெரினா கடற்கரைச் சாலை, பாண்டி பஜார் சாலை மழைநீர் தேங்கியது. தி.நகர் விஜயராகவன் சாலையில் குடியிருப்பு பகுதிகளில் மழை நீரில் சிக்கியவர்களைத் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் பொதுமக்களைப் படகில் அழைத்து  வந்தனர். தணிகாசலம் சாலை மழைநீர் தேங்கியது. மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள காவலர் குடியிருப்பு வளாகத்திலிருந்த மரம் சாய்ந்து விழுந்தது. பூந்தமல்லி நெடுஞ்சாலை பெரியார் சாலை, மூர் மார்க்கெட் அருகே பிராட்வே குரலகம் அருகே ராயப்பேட்டை நெடுஞ்சாலை, எழும்பூர் வரதராஜாபுரத்தில் உள்ள சின்ன குழந்தை தெருவில் வீடுகளில் மழைநீர் புகுந்தது. எழும்பூர் கெங்கி ரெட்டி பாலத்தில் தேங்கிய மழை நீரில்  இளைஞர் ஒருவர் குளித்தார். வியாசர்பாடி ஜீவா ரயில்நிலைய பாலத்தின் கீழ்வந்த பெண்மணி பள்ளத்தில் தவறி விழுந்தார். வியாசர்பாடி கல்யாணபுரம் சென்னை மாநகராட்சி பள்ளியில் மழை நீர் புகுந்தது. இப்படி மீண்டும் மழைநீரில் மிதக்கத் தொடங்கியுள்ளது 'சென்னை'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக