வெள்ளி, 5 நவம்பர், 2021

இன்னும் நீதி கிடைக்காத ஜெய் பீம் கதைகள் இங்கு ஆயிரம் உண்டு

Karthikeyan Fastura  :  JaiBhim படம் வாழ்வு நெடுக நான் பார்த்தும், கேட்டும், படித்தும், அனுபவித்தும், விசாரித்தும் தெரிந்த பல சாதிய அடக்குமுறைகளை ஒட்டுமொத்தமாக கிளறிவிட்டதால் எதுவும் உடனே எழுதத் தோன்றவில்லை.
ஜெய்பீம் படம் திரைக்கதைக்காக non-linearல் செல்லாமல் இருந்தால் பலரால் படத்தை பார்க்க சகிக்காமல் திரையை பாதியில் மூடி இருப்பார்கள். நான் அறிந்த கதைகள் எல்லாம் அப்படித்தான் எனக்கு சொல்லப்பட்டன.  அவர்கள் சொல்லும்போது அழுகையையும் கோபத்தையும் அடக்குவது அத்தனை கடினம். அதை விட கொடுமை அந்த சம்பவங்களில் யார் ஒருத்தரும் நீதியை பெற்றதாக எனக்கு சொல்லவில்லை. போராடி வருவதாக தான் சொல்லியிருக்கிறார்கள். தெளிவாக சொல்வதென்றால் நீதி கிடைக்காத கதைகள் தான் இங்கு ஆயிரமாயிரம்.


எவிடென்ஸ் அமைப்பின் மூலம் நடைபெறும் பெண்நீதி அமர்வுக்கு பேசுவதற்கு செல்வேன். அப்போதெல்லாம் அங்கு வந்திருக்கும் பெண்கள் கூறும் சாதிரீதியாக ஒடுக்கப்படும் சம்பவங்கள் வார்த்தைகளில் விவரிக்கமுடியாதவை.
ஆறுமாதத்திற்கு முன்பு அதுபோன்றதொரு அமர்வில் தேனிக்கு பக்கத்தில் இருந்து வந்த ஒரு தாய் சொன்ன கதை ஜெய்பீம் படத்தில் வந்ததை விட வேதனை. ரோந்தில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் அந்த வழியாக வந்த 17 வயது பையனை கண்டுகொள்ளாமல் சென்றத்திற்காக நிறுத்தி விசாரித்தபோது நான் என்ன சார் தப்பு பண்ணினேன் எதுக்கு விசாரிக்கிறீங்க என்று தன்மீது தவறில்லையே என்ற தைரியத்தில் கேட்ட கேள்விக்காக அவன் மேல் பொய்கேஸ் போட்டு லாக்கப்பில் அடித்து துவைத்து கொன்று விட்டார்கள். இந்த படத்தை போலவே ஒன்றுமே நடக்காதது போல திரும்பவும் அவர் அம்மாவிடம் வந்து உன் மகன் தப்பிவிட்டான் வந்தா போலீஸ் ஸ்டேஷன் வரச் சொல்லு என்று சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். பிறகு அவரது மகன் விபத்தில் இறந்துவிட்டதாக தெருவோரத்தில் பிணத்தை எடுத்து காட்டி இருக்கிறார்கள். அந்த தாய் இது அத்தனையும் என்னிடம் சொல்லும்போது அடிவாங்கி இறந்தபின் அவன் உடம்பில் இருந்த காயங்களை எடுத்த புகைப்படங்களை காட்டினார். என்னால் அதை தொட முடியவில்லை. ஆனால் அத்தனை சான்றுகளையும் மடியில் தூக்கி சுமந்துகொண்டிருக்கிறார் நீதி கிடைக்கவேண்டும் என்று. இந்த படத்தில் உள்ளது போலவே அந்த SI இந்த தாயை மிரட்டி இருக்கிறார். பிறகு போலீஸ் சமரசம் பேசி இருக்கிறது ஐந்து லட்சம் கொடுக்கிறோம் வாங்கிக்கொள்ளுங்கள் என்று. தாய் அதை வாங்க மறுத்து நீதிக்காக போராடிக் கொண்டிருக்கிறார்.
நீதிபதி சந்துருவை போல இங்கு எவிடென்ஸ் கதிர் அண்ணன் தான் அவர்களின் நம்பிக்கை. அவரிடம் கேளுங்கள் ஆயிரம் ஜெய்பீம் பட கதைகள் சொல்லுவார்.
மாணவ நிருபராக விகடனில் அடியெடுத்து வைத்தபோது கோவில் கலச திருட்டுக்காக கொட்டாம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் சென்று விசாரித்தேன். அங்கிருந்த writer கொத்தாக புகைப்பட கட்டை எடுத்துக் கொடுத்து இதில் பாருங்கள் என்றார். சில புகைப்படங்கள் அதிர்ச்சியின் உச்சிக்கு கொண்டு சென்றன. கொலை செய்யப்பட்ட தலித் பெண்ணின் உறுப்பு குதறி உள்ளிருக்கும் உறுப்புகள் வெளியே சிந்திய நிலையில் கிடந்த சடலம். என்ன சார் இதெல்லாம் கேட்டப்ப நிலத் தகராறில் ஆதிக்கசாதியினர் பழிவாங்க செய்ததாக கூறினார். இன்றும் அந்த புகைப்படத்தின் பிம்பம் மறக்கவிடாமல் செய்கிறது.
இன்றும் எண்ணற்ற சாதிய அடக்குமுறை நடந்துகொண்டு தான் இருக்கிறது. இந்த படத்தை பார்த்து கண்ணீர் உதிர்க்கும் பலரும் கூட சாதிய கொடுமையை சுயஉணர்வில்லாமல் கூட செய்திருப்பார்கள். சுய உணர்வோடும் செய்திருப்பார்கள். அந்தளவிற்கு சாதியம் என்பது புரையோடி போயுள்ளது.
conscious casteistக்கு உதாரணம் நடிகர் கமல், ஜெய்பீம் படம் பார்த்துவிட்டு கண்ணீர் சிந்தினாராம். அவரே தான் தேவர்மகன் பார்ட்-2 எடுக்க திட்டமிடுகிறார். சபாஷ்நாயுடு என்று பெயர் வைத்து படம் எடுக்க அறிவிக்கிறார்.
unconscious casteistக்கு உதாரணம் இதே படத்தின் நாயகன் சூர்யா தான் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் சாதிய பெருமை பேசும் படங்களை எடுத்த இயக்குநர் முத்தையாவை வைத்து விருமன் என்று அடுத்த படம் எடுக்கிறார்.
சாதி உணர்வில் சிறிது பெரிது என்று இடமில்லை. Virus is a Virus. Thats all. படத்தை பற்றி அடுத்த பதிவில் விரிவாக எழுதுகிறேன். அதற்கு முன்பு இதன் படைப்பாளி இயக்குனர் தோழர் தா.சே.ஞானவேல் அவர்களை இறுக அணைத்து வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக