திங்கள், 29 நவம்பர், 2021

நாடாளுமன்றத்தில் புதிய வேளாண் சட்டங்கள் ரத்து .. விவாதங்களுக்கு அனுமதி அளிக்க மறுத்த பாஜக! எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்

 மாலைமலர் : பாராளுமன்ற கூட்டத்தொடரில் மொத்தம் 29 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
புதுடெல்லி:  பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் அடுத்த மாதம் 23-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
பாராளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் மசோதா தாக்கல் செய்யப்படும் என்று ஏற்கனவே மத்திய அரசு அறிவித்து இருந்தது.
பாராளுமன்றம் இன்று கூடியதும் புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்றனர். காங்கிரசை சேர்ந்த பிரதீபா சிங், பா.ஜனதாவை சேர்ந்த ஜியானேஸ்வர் பட்டீல் ஆகியோர் எம்.பி.க்களாக பதவி ஏற்றனர். பிரதீபா சிங் இமாச்சல பிரதேச மாநிலம் மாண்டி தொகுதியில் இருந்தும், ஜியானேஸ்வர் பட்டீல் மத்திய பிரதேச மாநிலம் கன்வார் தொகுதியில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதைத்தொடர்ந்து மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் ஆஸ்கர் பெர்ணான்டஸ், கல்யான் சிங், செங்குட்டுவன் உள்பட 8 பேருக்கு சபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் கேள்வி நேரம் தொடங்கியதும் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.



அதன்பிறகு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டனர். வேளாண் சட்டத்தால் விவசாயிகள் மரணமடைந்தது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன் வைத்து எதிர்கட்சி உறுப்பினர்கள் சபையில் கூச்சலிட்டனர். இதனால் அவையை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக சபாநாயகர் ஓம் பிர்லா அவையை மதியம் 12 மணி வரை ஒத்திவைத்தார்.

12 மணிக்கு பிறகு பாராளுமன்ற மக்களவை கூடியதும் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வழிவகுக்கும் மசோதாவை மத்திய வேளாண்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்தார்.

உடனே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த மசோதா மீது விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால் இதை ஏற்க சபாநாயகர் மறுத்து விட்டார். இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோ‌ஷமிட்டனர்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளிக்கு இடையே 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து மாநிலங்களவையிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.


3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய உள்ளதாக பிரதமர் மோடி கடந்த 19-ந் தேதி அறிவித்து இருந்தார். அதன்படி இன்று பாராளுமன்றத்தின் முதல் நாள் கூட்டத்திலேயே இந்த சட்டத்தை ரத்து செய்யும்  மசோதா இரு அவைகளிலும் நிறைவேறியது.

முன்னதாக வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறுவதை விவசாய சங்கங்கள் வரவேற்றுள்ள போதிலும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்.எஸ்.பி.) சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் கூறி உள்ளனர். இதற்கு தி.மு.க. ஆதரவு தெரிவித்துள்ளது.

குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தி.மு.க. வலியுறுத்தி உள்ளது. இதற்காக ஒத்திவைப்பு தீர்மானத்தை தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு இன்று கொடுத்தார்.

இதேபோன்று பல்வேறு கட்சிகளும் தங்கள் மாநில விவகாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இன்று மனு கொடுத்தன.

இந்த கூட்டத்தொடரில் மொத்தம் 29 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

இதேபோல மேல்சபை இன்று கூடியதும் ஒரு மணி நேரத்திற்கு அவை ஒத்திவைக்கப்பட்டது. மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் 5 பேருக்கு ஒரு நிமிடம் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக புதிய எம்.பி.க்கள் அவையில் பதவி ஏற்றுக்கொண்டனர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக