செவ்வாய், 16 நவம்பர், 2021

உதயநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்; அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் ஆலோசனை!

 கொண்டாட்டம் தவிர்ப்பு?

Arsath Kan -  Oneindia Tamil :   சென்னை: உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை தடபுடலாக கொண்டாடுவது குறித்து திமுக இளைஞரணி நிர்வாகிகள் மாவட்ட வாரியாக ஆலோசனைக் கூட்டங்கள் நடத்த உள்ளதாகவும் தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் இதற்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே சென்னை மற்றும் கன்னியாகுமரி கனமழையால் தவித்து வரும் நிலையில் அமைச்சர் ஒருவர் உதயநிதி பிறந்த நாள் கொண்டாட்ட ஆலோசனையில் பங்கேற்பதா என பாஜக அதிருப்தி மற்றும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
தூத்துக்குடியில் இது தொடர்பாக நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்ட ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டதுடன், எப்படி கொண்டாடலாம் என தனது பங்குக்கு சில யோசனைகளையும் இளைஞரணியினருக்கு கொடுத்து விட்டு வந்துள்ளார்.

இதேபோல் அனைத்து மாவட்டங்களிலும் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களில் அமைச்சர்கள் பங்கேற்க இருப்பதாக கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

திமுக இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கு வரும் 27-ம் தேதி 44-வது பிறந்தநாள் வருகிறது. இதையொட்டி அவரது பிறந்தநாளை திருவிழாவை போல் கொண்டாடி தீர்க்க தமிழகமெங்கும் உள்ள இளைஞரணி நிர்வாகிகள் முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொண்டர்கள் திரள மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா எப்படி நடைபெறுமோ அதே போல் இந்தாண்டு உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை திமுக இளைஞரணியின் தலைமையகமான அன்பகத்திலிருந்து முக்கிய பிரமுகர் ஒருவர் செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மாவட்ட வாரியாக அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களை தொடர்பு கொண்டு உதயநிதியின் பிறந்தநாள் விழா எப்படி இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதிலும் எத்தனை கட் அவுட், எத்தனை பிளக்ஸ், எவ்வளவு சுவர் விளம்பரம், எவ்வளவு வால் போஸ்டர் என விவரங்களையும் மாவட்ட வாரியாக கொடுத்து அதை பாலோ செய்யவும் அன்பகத்தில் இருந்து உத்தரவு பறந்துள்ளதாக சொல்கிறார்கள்.
சட்டமன்ற உறுப்பினரான பிறகு உதயநிதி ஸ்டாலின் கொண்டாடவுள்ள முதல் பிறந்தநாள் இது என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர்கள் பங்கு அமைச்சர்கள் பங்கு திமுக இளைஞரணியிர் ஒரு பக்கம் கொண்டாட்டத்துக்கு ஆயத்தமாகி வரும் வேளையில், அமைச்சர்களும் இதில் தங்கள் பங்களிப்பை செலுத்த ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது.
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி கபடி போட்டி, கிரிக்கெட் போட்டி, என இளைஞர்களை கவரக்கூடிய வகையில் போட்டிகள் நடத்தி பரிசுகளை அள்ளிக்கொடுக்க பல அமைச்சர்கள் முன் வந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

 இதனிடையே மழை வெள்ளபாதிப்புகளுக்கு மத்தியில் நிவாரண பணிகளை முடுக்கிவிடாமல் உதயநிதி பிறந்த நாள் விழா கொண்டாட்டம் தொடர்பான ஆலோசனை தேவையா என அமைச்சர் கீதா ஜீவனுக்கு பாஜக பிரமுகர் எஸ்ஜி சூர்யா கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் தேவையற்ற சர்ச்சையில் சிக்க விரும்பாத உதயநிதி, இந்தாண்டு தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்க்க முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வரும் வரை நாங்கள் செய்வதை செய்கிறோம் என மாவட்ட வாரியாக ஏற்பாடுகள் மட்டும் தடையில்லாமல் நடந்து கொண்டிருக்கிறதாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக