செவ்வாய், 2 நவம்பர், 2021

திமுகவில் உதட்டளவே ஒற்றுமை: நேரு முன்னிலையில் பார்த்திபன் எம்.பி. பாய்ச்சல்

மின்னம்பலம் : அமைச்சர் பதவி கிடைக்கப்பெறாத மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை நியமித்து கட்சி விவகாரங்களிலும், ஆட்சி நிர்வாக விவகாரங்களிலும் அந்த அமைச்சர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறார் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்.
இந்த வகையில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரிதும் தோல்வி அடைந்த கோவை மாவட்டத்துக்கு அமைச்சர் செந்தில்பாலாஜியும், சேலம் மாவட்டத்துக்கு அமைச்சர் கே.என்.நேருவும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
இதுபோல் அமைச்சர் பிரதிநித்துவம் இல்லாத நாகப்பட்டினம், திருவாரூர். தஞ்சாவூர், நெல்லை, தென்காசி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வகையில் அமைச்சர் கே. என்.நேரு சேலத்தில் முகாமிட்டு கட்சி நிகழ்ச்சிகளிலும், அரசு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு கட்சி பற்றியும் நிர்வாகம் பற்றியும் ஆய்வு நடத்தி வருகிறார். அக்டோபர் 30 ஆம் தேதி சேலத்தில் இருக்கும் கிழக்கு, மேற்கு, மத்திய என அனைத்து மாவட்ட அமைப்புகளையும் இணைத்து சேலம் மாவட்ட திமுக பொது உறுப்பினர்களின் கூட்டத்தைக் கூட்டினார்.

சேலம் மாவட்டத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 11 தொகுதிகளில் ஒன்றில் மட்டுமே திமுக வெற்றிபெற்றது. மீதி 10 தொகுதிகளிலும் அதிமுகவே வெற்றிபெற்றது. இது தொடர்பான ஆய்வுக் கூட்டமாகவும் நேரு கூட்டிய கூட்டம் நடந்தது.

தனக்கும் சேலத்துக்குமான தொடர்புகளை நினைவுகூர்ந்த கே.என்.நேரு கட்சியின் நிர்வாகிகளை எல்லாம் பேசவிட்டு சேலம் திமுகவில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொண்டார்.

மாவட்டச் செயலாளர்கள் எஸ்.ஆர்.சிவலிங்கம், செல்வ கணபதி, பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகியோர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஏற்பட்ட தோல்விக்கான காரணங்கள் என தங்கள் கருத்துகளை கூறினார்கள்,

இந்த வகையில் சேலம் தொகுதி திமுக எம்பி எஸ்.ஆர். பார்த்திபன் பேசும்போது அரங்கத்தில் கூடியிருந்த திமுக நிர்வாகிகள், தொண்டர்களிடமிருந்து ஆரவாரம் எழுந்துகொண்டே இருந்தது நேருவும் எம்பி பார்த்திபனின் பேச்சை உற்று நோக்கினார்.

அப்படி என்னதான் பேசினார் பார்த்திபன் எம்பி?

“அமைச்சர் நேரு அவர்களை சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நமது முதல்வர் நியமித்திருப்பதன் மூலம் சேலத்தில் இனி திமுகவுக்கு தோல்வியே இல்லை என்ற நிலை உருவாகுமென்பதை திமுகவின் ஒவ்வொரு தொண்டனும் உணர்ந்திருக்கிறான். மறைந்த வீரபாண்டியார் சேலத்தில் திமுகவுக்கு மட்டுமல்ல அனைத்துக் கட்சிகளுக்கும் தலைவராக இருந்தார். அவர் இந்த இயக்கத்துக்கு செய்த தியாகங்கள், அவரால் சேலம் மாவட்டம் வளர்ச்சி பெற்ற விதம் ஆகியவற்றை மறந்துவிட முடியாது.

20011க்குப் பிறகு திமுக சேலத்தில் வெற்றி பெறமுடியவில்லை என்று இங்கு பேசிய நிர்வாகிகள் கூறினார்கள்,. தேர்தலுக்கு முன்பே மாவட்டக் கழகக் கூட்டங்களில் நான் சில விஷயங்களை பேசியிருக்கிறேன்.

இந்த மாவட்டத்திலே திமுக எட்டு முதல் பத்து தொகுதிகள் வரை கைப்பற்றும் என்று நம்முடைய தலைவர் நம்பிக்கையோடு இருந்தார். ஆனால் சேலம் மாவட்டத்தில் பத்து தொகுதிகளில் தோல்வி அடைந்தோம். இதற்குக் காரணம் என்ன என்பதை நாம் சிந்தித்து ஆய்வு செய்து வரும் காலத்தில் இதுபோன்ற தோல்வியை சந்திக்காத மாவட்டமாக சேலத்தை உருவாக்கிட வேண்டும்.

தேர்தலுக்கு முன் நான் மத்திய, கிழக்கு, மேற்கு மாவட்ட கூட்டங்களில் பேசும்போது நான் சொன்னேன், ‘உள்ளாட்சித் தேர்தலிலே சேலம் மாவட்டத்தில் நாம் தோல்வி அடைந்திருக்கிறோம். , மாவட்ட ஊராட்சியிலும் தோல்வி அடைந்தோம். இன்னும் ஓராண்டில் பொதுத் தேர்தல் வர இருக்கிறது. அதற்குள் நாம் அனைத்தையும் சரிசெய்துகொள்ளவில்லை என்று சொன்னால், இந்தத் தோல்வி பொதுத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று நான் சொன்னேன். இங்கே பேசிய பலரும் ஒற்றுமை ஒற்றுமை என்று பேசினார்கள். அந்த ஒற்றுமையை உதட்டளவிலே மட்டும் வைத்துக்கொண்டிருந்தால் வெற்றியை சுவைக்க முடியாது. ஒற்றுமை என்பது அடிவயிற்றில் இருந்து வரவேண்டும். கிளைக் கழகங்களில் இருந்து வரவேண்டும். ஒன்றியத்தில் இருந்து வரவேண்டும். மாவட்டம் வரை ஒற்றுமையாக இருக்க வேண்டும். அப்போதுதான் சேலம் மாவட்டம் திமுகவின் கோட்டையாக வீரபாண்டியாரின் கோட்டையாக மாறும். இல்லையென்றால் ஒவ்வொரு தேர்தலிலும் தோல்வி அடைந்துவிட்டு ஏதோ ஒரு காரணத்தை சொல்லிவிட்டு போய்க் கொண்டே இருக்க வேண்டியதுதான்,

எடப்பாடி பழனிசாமி ஒரு தலைவர் கிடையாது. அவர் அதிமுகவின் ஒரு தொண்டர், மாவட்டச் செயலாளர். அவரிடம் தோற்றதற்காக நாம் கண்ணீர் சிந்த வேண்டும். இது எதிர்காலத்தில் நடக்கக் கூடாது.

நமது முதல்வர் இந்தியாவின் மாநிலங்களுக்கெல்லாம் வழிகாட்டியாக இருக்கிறார். இருபது மணி நேரம் உழைக்கிற முதல்வர் அண்ணன் தளபதிதான். அவர் வேகத்துக்குப் பணியாற்றுகிற அண்ணன் முதன்மைச் செயலாளர் நேரு தொடர்ந்து திருச்சியில் சிக்ஸ் அடித்துக்கொண்டே இருக்கிறார், எப்போது தேர்தல் வந்தாலும் சிக்ஸர் அடிக்கிறார். தலைவர் கலைஞரிடத்திலும், தளபதியிடத்திலும் எளிதில் பாராட்டு பெற முடியாது, அண்ணன் இந்த இருவரிடத்திலும் பாராட்டு பெற்று அவர்களின் இதயங்களில் நீங்காத இடத்தைப் பிடித்தவர்.

இதற்குக் காரணம் சாதாரண கடை கோடி தொண்டனைப் பார்த்தாலும் தோளில் கைபோட்டு, என்னடா மாப்ள என்னடா மச்சான் என்று உறவு கொண்டாடுவார். அது ஒன்றே போதுமென்கிறான் கட்சிக்காரன். அதைத்தான் விரும்புகிறான் திமுக தொண்டன். நிர்வாகிகளிடம் எதிர்பார்ப்பது குறைந்தபட்ச மரியாதை, குறைந்தபட்ச அரவணைப்பு மட்டும்தான். அன்பு காட்டுங்கள், வெற்றியை நாங்கள் கொடுக்கிறோம் உங்களுக்கு என்கிறார்கள் தொண்டர்கள்.

எடப்பாடி என்ன எம்ஜிஆரா, ஜெயலலிதாவா? அவர் மார் தட்டுகிறார். அதற்குக் காரணம் என்ன? திமுகவினர் நாம் பயிற்சி பெற்ற ராணுவ வீரர்கள் போன்றவர்கள். நம்மிடத்தில் ஒற்றுமையாக இருந்தால் யாராக இருந்தாலும் நம்மால் வெல்ல முடியும். எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்தில் கடந்த பத்தாண்டுகளில் பாலம் கட்டுவதாக சொல்லி கொள்ளையடித்தாரே தவிர மக்களுக்கான அடிப்படை வசதிகள் எதையும் செய்யவில்லை.

எனவே திமுகவினர் நாம் ஒவ்வொரு பகுதியிலும் மக்களை சென்று சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டு அதை அரசு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த ஒரு மாதத்தில் போர்க்கால நடவடிக்கையாக செயல்பட வேண்டும். அப்போதுதான் சேலம் மாவட்டத்தில் உள்ள ஆறு நகராட்சிகள், ஒரு மாநகராட்சி, முப்பதுக்கும் மேற்பட்ட பேரூராட்சிகளை திமுக வெல்ல முடியும். நாம் அனைவரும் ஒற்றுமையோடு இதைச் செய்வோம். அமைச்சர் நேரு தலைமையில் வெற்றியை முதல்வரிடம் ஒப்படைப்போம்”என்று பேசினார் பார்த்திபன் எம்பி.

எம்பியின் இந்த பேச்சை தனியாக அவரை அழைத்து பாராட்டிய நேரு, ‘இதைத்தான் நானும் விரும்புறேன். தலைவரும் விரும்புறாரு. எல்லாரும் ஒற்றுமையாக இருந்து செயல்படணும்” என்று கூறியிருக்கிறார்.

அண்மையில் கூட பார்த்திபன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து தனது எம்பி தொகுதியில் தான் செய்த சேவைகளை புத்தக வடிவில் கொடுத்திருந்தார். வீரபாண்டி ராஜா மறைவுக்குப் பின்னர் திமுகவின் சேலம் மாவட்ட அமைப்பில் நிர்வாகிகள் மாற்றம் இருக்குமென்று பலரும் எதிர்பார்த்த நிலையில் பார்த்திபனும் மாவட்டச் செயலாளர் பதவியைக் குறிவைத்து காய் நகர்த்துகிறார்.

இதுகுறித்து எம்பி பார்த்திபனிடமே நாம் கேட்டோம். “நான் எம்பியானதில் இருந்து ஒவ்வொரு மாதமும் எனது பணிகளைத் தொகுத்து ஆவணமாக்கி தலைவரிடம் வழங்கி வருகிறேன். அந்த அடிப்படையில்தான் தற்போதும் வழங்கினேன். அமைச்சர் நேரு தலைமையில் சேலத்தில் திமுக ஒற்றுமையாக இருந்து வென்றிட வேண்டுமென்பதையே எனது பேச்சில் நான் தெரிவித்தேன். மற்றவற்றை தலைவர்தான் முடிவு செய்வார்”என்றார் பார்த்திபன்.

எம்பி பார்த்திபனின் பேச்சு சேலம் திமுக மட்டுமல்ல மற்ற மாவட்ட திமுக தொண்டர்களிடத்திலும் வெகுவாக பரவிக் கொண்டிருக்கிறது

-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக