ஞாயிறு, 21 நவம்பர், 2021

பிட்காயின் ஊழல் ஹேக்கர் மூலம் கர்நாடக அரசியலில் நடந்தது என்ன? BBC

BBC : இம்ரான் குரேஷி  -      பிபிசி இந்திக்காக  :  இந்தியாவின் முதல் பிட்காயின் ஊழலின் மையப்புள்ளியாக ஒரு 25 வயது இளம் ஹேக்கர் இருக்கிறார். இந்த ஊழல் பிரச்சனை கர்நாடகாவை ஆட்சி செய்து வரும் பாஜகவின் முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கட்சிக்கு உள்ளும் வெளியிலும் பெரும் குடைச்சலைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
ஸ்ரீ கிருஷ்ண ரமேஷ் என்கிற ஸ்ரீகி பள்ளி படிக்கும் போதே ஹேக்கிங் தொழில்நுட்பத்தை கற்றுக் கொண்டதாகவும், பிட்காயின் பரிவர்த்தனை சந்தைகள், போக்கர் விளையாட்டு வலைதளங்கள், கர்நாடக அரசின் இணைய கொள்முதல் வலைதளத்தை எல்லாம் ஹேக் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
தான் ஹாங்காங்கில் இயங்கும் பிட்ஃபினிக்ஸ் க்ரிப்டோகரன்சி சந்தையை 2015ஆம் ஆண்டிலேயே ஹேக் செய்ததாகவும், 2016 ஆகஸ்டில் 1,19,756 பிட்காயின்களை திருடியதாகவும் காவல்துறையிடம் முன் வந்து தெரிவித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
ஸ்ரீகி ஒரு சில முறை போதைப் பொருள் வழக்கில் சிறையைக் கண்டுள்ளார். கடைசியாக கடந்த வாரம் கூட சிறையில் இருந்துள்ளார். அவர் கர்நாடகாவின் விசாரணை முகமைகளிடம் கூறும் விஷயங்கள் மற்றும் விசாரணையின் வேகம் கர்நாடக முதல்வர் பொம்மை மற்றும் காங்கிரஸ் கட்சி மத்தியில் ஒரு அரசியல் போரை உருவாக்கியுள்ளது.
விளம்பரம்

ஸ்ரீகி கூறும் விஷயங்களில் பெரும்பாலானவற்றுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என இந்த விவகாரங்களில் நேரடியாக தொடர்புடைய ஒரு மூத்த அதிகாரி, தன் அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாமல் பிபிசி இந்தியிடம் கூறினார்.

    கிரிப்டோகரன்சி முறைகேடுகள்: இந்தியா எப்படி எதிர்கொள்ளப் போகிறது?
    கொள்ளையடித்த ஹேக்கருக்கு ஜாக்பாட்: பல கோடி ரூபாய் பரிசு தரப்படுவது ஏன்?

இந்த விவகாரத்தில் பாஜகவினரே தனக்கு எதிராக கட்சியில் செயல்படுவதை கட்டுப்படுத்துமாறு, பசவராஜ் பொம்மை, அமித் ஷாவிடம் புகார் கூறியதை, அதிகாரபூர்வமாக இதுவரை கர்நாடக பாஜகவினர் மறுக்கவில்லை. மேலும் பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா பிட்காயின் ஊழல் விவகாரம் தொடர்பாக கர்நாடக பாஜகவினரிடம் அறிக்கை ஒன்றை கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது, அதையும் பாஜகவினர் மறுக்கவில்லை.

மறுபக்கம், அரசு இந்த விசாரணையை பலவீனப்படுத்த முயல்வதாக காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது. "மேல்மட்டத்தில் உள்ளவர்களைப் பாதுகாக்கத்தான் காவல்துறையின் இந்த விசாரணை. உச்ச நீதிமற நீதிபதி தலைமையின் கீழ் விசாரணை நடந்தால் தான் உண்மை வெளி வரும்" என காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பிரியங்க் கார்கே பிபிசி இந்தியிடம் கூறினார்.

ஸ்ரீகியின் பங்கு என்ன?

ஸ்ரீகியின் ஹேக்கிங் திறனை காவல்துறை அதிகாரிகள் பாராட்டுகின்றனர். தான் நான்காம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போதே ஹேக் செய்யகற்றுக் கொண்டதாகவும், பிற்காலத்தில் இந்த திறன்கள் சட்டவிரோதமான சைபர் குற்றம் தொடர்பான செயல்களுக்கு உதவியதாக, ஸ்ரீகியே முதன்மை மெட்ரோபொலிடன் மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தின் முன்னிலையில் ஒப்புக் கொண்டார்

4 - 10 வகுப்புக்குள் பிளாக்ஹாட் என்கிற ஹேக்கர்கள் குழுவில் இணைந்ததாகவும், அங்குதான் மற்றவர்களைச் சுரண்டுவதையும் ஹேக்கிங் செய்யவும் பயிற்றுவிக்கப்பட்டதாக கூறினார்.

ஸ்ரீகி நெதர்லாந்துக்குச் செல்வதற்கு முன், பெங்களூரில் ஒரு கல்லூரியில் கணினி அறிவியல் படித்தார். அதன் பிறகு பிட்காயின் பரிவர்த்தனை சந்தை (பணத்துக்கு பதிலாக பிட்காயின்கள் பரிமாற்றப்படும் தளம்) உட்பட பல்வேறு வலைதளங்களை ஹேக் செய்யும் அனுபவத்தைப் பெற்றார்.

ஹேக்கிங் எல்லாம் செய்த ஸ்ரீகியின் பெயரில் ஒரு வங்கிக் கணக்கு கூட இல்லை, எனவே மேற்கு வங்கத்தில் உள்ள அவரது நண்பர் ராபின் கந்தேல்வால் கணக்குக்கு எல்லா பணமும் சென்றது. ராபினுக்கு தான்(ஸ்ரீகி) 8 கோடி ரூபாய் மதிப்புள்ள பிட்காயின்களைக் கொடுத்ததாகவும், அதற்கு ராபின் தனக்கு பணம் கொடுத்ததாகவும் கூறினார்.

போக்கர் வலைதளங்களை ஹேக் செய்து, தன் நண்பர்கள் வெல்வதற்கு உதவி செய்ய, ஸ்ரீகியின் நண்பர்களால் அவர் பல வாரங்களுக்கு பெரிய ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டதாக காவல்துறை வட்டாரங்களில் ஒருவர் கூறினார்.

2015ம் ஆண்டிலேயே பிட்ஃபினிக்ஸ் பிட்காயின் பரிவர்த்தனை தளத்தை ஹேக் செய்து, 2,000 பிட்காயின்களை திருடிய முதல் நபர் என ஸ்ரீகியே ஒப்புக் கொண்டார். அப்போது ஒரு பிட்காயின் 100 - 200 அமெரிக்க டாலர் மதிப்பு கொண்டதாக இருந்தது. சொகுசாக வாழ இப்படி செய்ததாக ஒப்புக் கொண்டார்

பெங்களூரு நகர மையத்தில் ஒரு மாலிலுள்ள உணவகத்தில் ஏற்பட்ட சண்டையில்தான் ஸ்ரீகியின் பெயர் காவல்துறை ஆவண பதிவுகளில் முதல்முறையாக அடிபட்டது. ஃபார்சி கேஃப் வழக்கு என பிரபலமாக இவ்வழக்கு அழைக்கப்படுகிறது. என் ஏ ஹாரிஸ் என்கிற காங்கிரஸ் சட்டமன்ற உருப்பினரின் மகன் மொஹம்மத் நலபட், வித்வத் என்கிற செல்வாக்குள்ள ஒருவரின் மகனை தாக்கியதாக கூறப்படுகிறது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்றவர்கள் அல்லது அச்சம்பவம் நடந்த போது அங்கு இருந்தவர்கள் மற்ற கட்சியைச் சேர்ந்த பெரிய அரசியல்வாதிகளின் பிள்ளைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீகி நெதர்லாந்திலிருந்து இந்தியா திரும்பிய பின் மொஹம்மத் நலபட் உடன் நட்பானதாகவும், சுமார் மூன்று ஆண்டுகள் அவரோடு சுற்றித் திரிந்ததாகவும் பெங்களூரில் உள்ள முதன்மை மெட்ரோபொலிடன் மேஜிஸ்ட்ரேட் முன்னிலையில், அவரே முன்வந்து கொடுத்த வாக்குமூலத்தில் குறிப்பிட்டார்.

அவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் ஸ்ரீகியும் ஒருவர், ஆனால் முன்கூட்டயே வாங்கப்பட்ட ஜாமீனோடு நகரத்துக்குள் வந்த இருவரில், ஸ்ரீகியும் ஒருவர். ஸ்ரீகி தொடர்ந்து வட இந்திய நகரங்களிலேயே பயணித்ததால் அவர் கைதாவதை தவிர்த்து வந்தார்.

இந்த வழக்குக்குப் பிறகு, கடந்த நவம்பர் 2020-ல் டார்க் நெட் எனப்படும் இணைய வெளியில் போதைப் பொருளைக் கொண்டு சேர்க்கும் விஷயத்தில் தான் ஸ்ரீகி என்கிற ஸ்ரீ கிருஷ்ணாவின் பெயர் அடிபட்டது.

போதைப் பொருள் தொடர்பான விசாரணையில் தான் ஸ்ரீகி தன் ஹேக்கிங் திறன் குறித்தும், தன் வாழ்கை முறை குறித்தும் வாய் திறந்தார். அப்போது தான் 2019ம் ஆண்டு கர்நாடக அரசின் சென்டர் ஃபார் எக்ஸலென்ஸ் இணைய கொள்முதல் வலைதளம் ஹேக் செய்யப்பட்டு, ஏலம் கோருபவர்களின் எர்னஸ்ட் மணி டெபாசிட் என்றழைக்கப்படும் (இ எம் டி) வைப்புத் தொகை பணம் 11.5 கோடி ரூபாய் ஹேக் செய்யப்பட்டது வெளியானது.

இந்த வழக்கை தற்போது அமலாக்கத் துறையால் விசாரிக்கப்பட்டு வருகிறது. அரசு வலைதளத்தில் ஹேக் செய்யப்பட்டு திருடப்பட்ட பணம் உத்தரப் பிரதேசத்தில் புலந்த்சரில் நிம்மி எண்டர்பிரைசஸ் என்கிற ஒரு நிறுவத்தின் பெயரிலும், உதய் கிராம விகாஷ் சன்ஸ்தா என்கிற நாக்பூரைச் சேர்ந்த அரசு சாரா அமைப்பு உட்பட 14 கணக்குகளில் வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது என அமலாக்கத் துறை கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு செய்தியறிக்கை மூலம் கூறியது.

"இது ஒரு நீண்ட நெடிய பணச் சலவை திட்டம் போலத் தெரிகிறது" என ஒரு காவல்துறை அதிகாரி தன் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் கூறினார்.

அரசியல்வாதிகள், ஸ்ரீகிருஷ்ணா போன்ற ஹேக்கரைக் கொண்டு, எல்லோரையும் திருப்திபடுத்துவதாக காவல்துறையினர் சந்தேகப்படுகின்றனர்.

கர்நாடகாவின் எதிர்கட்சித் தலைவர் சித்தராமைய்யா கடந்த மாத கடைசியில் இரு முக்கிய அரசியல் பிரமுகர்கள் பிட்காயின் ஊழலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதை குறிப்பிட்டு சமூக வலைதளத்தில் பகிர்ந்த போது அரசியல் நெருக்கடி உண்டானது.

அரசியல்வாதிகளுக்கு உதவும் வகையில் வழக்கை மூட முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டினார் சித்தராமைய்யா. முதல்வர் பொம்மைக்கும், இவருக்கும் இடையிலான சொற்போரில், சித்தராமைய்யா நகர குற்றப் பிரிவினரின் குற்றப்பத்திரிகையில் 5,000 பிட்காயின்கள் குறிப்பிடப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார். ஒரு பிட்காயினின் மதிப்பு சுமார் 49 லட்ச ரூபாய்.

அதற்கு பதிலளித்த பொம்மை, வழக்கு அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ வசம் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். பிறகு ஸ்ரீகி என்கிற ஸ்ரீகிருஷ்ணாவை காங்கிரஸ் தான் தங்கள் ஆட்சிக் காலத்தில் விடுவித்ததாகக் கூறினார். அதை பிபிசி இந்தியிடம் மறுத்தார் சித்தராமைய்யா.

இதில் வினோதமான விஷயம் என்னவென்றால், இவ்விவகாரத்தில் முதல்வரின் வாதங்களுக்கு வலுசேர்க்கும் வகையில் கட்சியின் மற்ற தலைவர்கள் பலரும் முன்வரவில்லை. பாஜகவிலிருந்து பேசியவர்களும், காங்கிரஸ் - ஜனதா தளம் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி பாஜகவில் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

"சிறு விவகாரங்களுக்கு கூட அறிக்கை விடும் கர்நாடக பாஜக மாநில தலைவர் நவீன் குமார் கடீல், இந்த பிட்காயின் விவகாரத்தில் ஏன் அமைதியாக இருக்கிறார்" என பிரியங்க் கேள்வி எழுப்புகிறார்.
பசவராஜ் பொம்மை, கர்நாடக முதல்வர்


"பிட்காயின் விவகாரம் குறித்து அதிகம் கவலைப்பட வேண்டாம்" என பிரதமர் நரேந்திர மோதியிடம் கூறியதாக, கடந்த வாரம் பிரதமரை சந்தித்த பின் பத்திரிகையாளர்களிடம் கூறினார் முதல்வர் பொம்மை.

மறுபக்கம் "பிட்காயின் விவகாரத்தில் பொம்மை ஈடுபட்டாரா இல்லையா என்று தெரியவில்லை. இந்த விவகாரத்தை முறையாக விசாரித்து, குற்றம் செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என்பதைதான் நாங்கள் கேட்கிறோம்" என்கிறார் கர்நாடக காங்கிரஸ் தலைவர் சித்தராமைய்யா.

சித்தராமைய்யா, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி கே சிவகுமார், பிரியங்க் கார்கே ஆகியோர் இவ்வழக்கு விசாரணையின் தன்மையைக் குறித்து கேள்வி எழுப்பினர்.

"ஸ்ரீகியிடமிருந்து ஒன்பது கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின்களை மீட்டிருப்பதாக, காவல்துறை, பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியது. அப்போது பொம்மை தான் உள்துறை அமைச்சராக இருந்தார். 31 பிட்காயின்களுக்கு என்ன ஆனது என அவர் விளக்க வேண்டும். இன்று ஒரு பிட்காயினின் மதிப்பு 51 லட்சம் ரூபாய்" என்றார் சித்தராமைய்யா.

"பாஜக பிட்காயின் வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. உண்மையை மறைக்கவோ யாரையும் பாதுகாக்கவோ தேவை இல்லை. ஃபார்சி கேஃப் வழக்குக்கும், பிட்காயினுக்கு ஏதோ தொடர்பு இருப்பதாக ஜனதா தளம் தலைவர் குமாரசாமியே கூறியது இங்கு நினைவுகூரத்தக்கது" என பாஜகவின் செய்தித் தொடர்பாளர் கேப்டன் கணேஷ் கார்னிக் பிபிசி இந்தியிடம் கூறினார்.

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பிட்காயின் பிரச்சனையை பிரதமரிடம் தெரியப்படுத்திய உடனேயே, க்ரிப்டோகரன்சியை நிர்வகிப்பது தொடர்பாக விவாதிக்க ஒரு அதிகாரபூர்வ கூட்டத்தை மோதி கூட்டியதால், கணேஷ் கார்னிக் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

    பிட்காயினின் எதிர்காலத்தை இந்திய அரசு எப்போது முடிவு செய்யும்?
    க்ரிப்டோ கரன்சியில் கொரோனா நன்கொடையாக இந்தியாவுக்கு ரூ. 7,400 கோடி

காவல்துறை விசாரணை குறித்த கேள்விகள்

பெங்களூரு காவல்துறை 31 பிட்காயின்கள் காணாமல் போனதை மறுக்கிறது. பிட்காயின்கள் ஸ்ரீகிருஷ்ணா கணக்கிலிருந்து பரிமாற்றம் செய்யப்படவில்லை, அதே போல பிட்காயின்கள் காணாமலும் போகவில்லை என பெங்களூரு ஆணையர் கமல் பந்த் ஒரு செய்தியறிக்கையில் குறிப்பிட்டார்.

கடந்த டிசம்பர் மாதம்தான் காவல்துறை பிட்காயின் கணக்கைத் தொடங்க அரசு அனுமதித்தது. 31.08 பிட்காயின்கள் கொண்ட கணக்கை ஸ்ரீகிருஷ்ணா காட்டினார். அதை மீட்க முயன்ற போது, 186.811 பிட்காயின்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

"ஸ்ரீகி தன்னுடைய கணக்கு என்று கூறியது ஒரு பிட்காயின் பரிவர்த்தனை தளத்தின் லைவ் கணக்கு, அதற்கு ஸ்ரீகியிடம் தனி கடவுச் சொல் எதுவும் இல்லை என சைபர் நிபுணர்கள் கூறினர்" என காவல்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஸ்ரீகி கூறிய விஷயங்களுக்கு போதுமான ஆதாரம் இல்லை என காவல்துறை சைபர் நிபுணர்களின் கருத்தை சுட்டிக்காட்டி கூறியது.

இதுவரை எந்த ஒரு வெளிநாட்டு சட்ட முகமைகளோ, வெளிநாட்டு நிறுவனங்களோ, ஸ்ரீகி கூறியது போல தங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக பெங்களூரு காவல்துறையை அணுகவில்லை. பிட்ஃபினிக்ஸ் நிறுவனம் சார்பாக எந்த பிரதிநிகள் கூட தங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாகவோ, ஹேக் சம்பந்தப்பட்ட விவரங்களைக் கேட்கவில்லை" என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குற்றம்சாட்டப்பட்ட ஸ்ரீகி க்ரிப்டோகரன்சி தளங்களை ஹேக் செய்ததாகக் கூறுவதால், 2021 ஏப்ரலில் காவல்துறை ஒரு வழக்கை சிபிஐ இன்டர்போலிடம் பரிந்துரைத்ததாக காவல்துறை கூறியது.

"காவல்துறை இன்டர்போலிடம் பரிந்துரைத்த வழக்கில் 23,000 ரூபாய் குறித்து மட்டுமே விசாரிக்க வேண்டும். இப்போது காவல்துறை தாங்கள் பரிந்துரைத்த வழக்கின் குற்ற எண் (Crime Number) தவறாக என்கிறது. இதை நான் குறிப்பிட்ட பிறகு, காவல்துறை அதை புரிந்து கொள்ள ஆறு மாதமாகியுள்ளது" என்கிறார் பிரியங்க் கார்கே.

"தற்போது நடந்து கொண்டிருக்கும் விசாரணை, மேல்மட்டத்தில் உள்ளவர்களை பாதுகாக்க நடத்தப்படுகிறது என நாங்கள் புரிந்து கொள்கிறோம். ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதியின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டால்தான், உண்மை வெளிவரும்" என்கிறார் கார்கே.
வரம்புகளற்ற பிட்காயின்

பிட்காயின் வரம்புகளற்ற, கட்டுப்பாடற்ற ஒன்று என்கிறார் பெங்களூரில் உள்ள செக்யூரிட் கன்சல்டன்சி நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி சசிதர் சி என்.

"பிட்காயின் முழுமையான மறைமுகத்தன்மையைக் கொடுக்கிறது. யார் வேண்டுமானாலும் வாங்கலாம் விற்கலாம். ஆகையால் இது பணச்சலவைக்கும், சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இது ஹவாலா போன்றது. இதை போதைப் பொருள் மற்றும் குற்ற நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தலாம். இதில் மிக மோசமான விஷயம் என்னவென்றால், க்ரிப்டோகரன்சி ஒட்டுமொத்த வங்கி அமைப்பையும் தவிர்க்கிறது. இது அரசுக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்துகிறது."

ஸ்ரீகி கூறுவதை காவல்துறையினரால் எப்படி சரிபார்க்க முடியும்?

"ஸ்ரீகி அனைத்தையும் இணையத்தின் வழி செய்திருப்பதால், அவரது நடவடிக்கைகள் அனைத்தின் பதிவையும் பெற முடியும். இணையத்தில் உள்ள தடத்தை யாராலும் அழிக்க முடியாது. காவல்துறையை பிட்காயின் பரிவர்த்தனை தளங்களோ மற்றவர்களோ அணுகுவதற்கு பதிலாக, பிட்காயின் பரிவர்த்தனை தளங்களிடமோ, மற்றவர்களிடமோ நம் நாட்டிலிருந்து ஏதாவது ஹேக் நடந்ததா என காவல்துறை கேட்டதா? என்பதுதான், காவல்துறை அறிக்கையிலிருந்து இப்போது நம் முன் எழும் கேள்வி. " என்கிறார் சசிதர்.

ஸ்ரீகிருஷ்ணா சொல்வதென்ன?

ஸ்ரீகியின் தந்தை அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அருகிலுள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கியுள்ள ஸ்ரீகிருஷ்ணா ஒரு உணவக சண்டையில் கைது செய்யப்பட்டார்.

அவர் விடுவிக்கப்பட்ட போது, இதெல்லாம் பொய் செய்தி என்றும், தனக்கு இது குறித்து எதுவும் தெரியாது என்றும் பத்திரிகையாளர்களிடம் கூறினார் ஸ்ரீகி.
அடுத்து என்ன?

"ஸ்ரீகிருஷ்ணா, அவரது பணக்கார மற்றும் அரசியல் செல்வாக்கு மிக்க நண்பர்களாலும், தலைவர்களாலும் பயன்படுத்தப்பட்ட ஒரு கருவி தான். நெருப்பின்றி புகையாது என்பதை அனைவரும் அறிவர். இந்த பிரச்சனைத் தீ எவ்வளவு தூரம் பரவும் என்பது யாருக்கும் தெரியாது" என ஒரு பாஜக தலைவர், தன் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் கூறினார்.

ஸ்ரீகியின் வழக்கு எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது, அதனால் ஏற்படும் அரசியல் தாக்கங்கள் என்ன?

"இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு இந்த விவகாரம் தெரியும் என்றும், அவர் எப்போது இந்த விவகாரத்தில் தேவையான நடவடிக்கை எடுப்பார் என யாருக்கும் தெரியாது" என்கிறார்கள் பாஜகவினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக