வியாழன், 11 நவம்பர், 2021

களப்பணியில் 12000 மின் ஊழியர்கள்!

களப்பணியில் 12000 மின் ஊழியர்கள்!

மின்னம்பலம் : பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ள 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர் என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் மழை பெய்து வரும் நிலையில், பல்வேறு இடங்களிலும் மின்சார இணைப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை ஓட்டேரி, குக்ஸ் ரோடு பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
மின்சார பாதிப்பு தொடர்பாக அவர் கூறுகையில், “சீரான மின் வினியோகத்தை வழங்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் 34,047 மின்மாற்றிகளில் 34,006 மின்மாற்றிகள் செயல்பாட்டில் உள்ளன. 41 மின்மாற்றிகளின் மின் விநியோகம் பொது மக்களின் பாதுகாப்பு கருதி நிறுத்தப்பட்டுள்ளன.


சென்னையில் 44 லட்சம் மின் இணைப்பு தாரர்களில், 1992 மின் இணைப்பு தாரர்களுக்கு மட்டும் மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அந்தப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாகவும் தேங்கியிருக்கின்ற மழை நீரை அகற்றும் பணி நடைபெற்று வருவதாலும் மின் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளன.

வியாசர்பாடியில் 7 மின்மாற்றிகளும், எழும்பூரில் 26 மின்மாற்றிகளும் , தி.நகரில் 3 மின்மாற்றிகளும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

பருவ மழையை எதிர்கொண்டு சீரான மின் வினியோகம் செய்வதற்காக மின் வாரியத்தின் சார்பில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் களப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னையில் மட்டும் 4000 களப்பணியாளர்கள் முழு நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மழையின் அளவு அதிகமாக இருந்தால் கூட சென்னையைத் தவிர மற்ற எந்த மாவட்டத்திலும் பாதிப்புகள் இல்லை. மழை அளவு அதிகமாக இருந்தாலும் அதனை எதிர்கொள்ள மின்வாரியம் தயாராக இருக்கிறது. 1,32,000 மின்கம்பங்கள் கையிருப்பில் உள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்மாற்றிகளும் தயாராக உள்ளன. இதர உபகரணங்களும் போதுமான அளவில் உள்ளது என்று தெரிவித்தார்.

-பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக