ஞாயிறு, 14 நவம்பர், 2021

மேட்டூர் அணை 120 அடியை எட்டியது, உபரி நீர் அப்படியே வெளியேறுகிறது, காவிரி கரை மக்களுக்கு எச்சரிக்கை

 Velmurugan P -  Oneindia Tamil :   சேலம் : மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை நள்ளிரவு எட்டியது .
இதனால் அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.
அணைக்கு வரும் 22,000 கன அடி நீர் முழுவதும் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதனால் காவிரி கரையோர மக்களுக்கு மேட்டூர் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. கர்நாடகாவில் உள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக அணைக்கு நீர் வரத்து 25 ஆயிரம் கனஅடி வரை அதிகரித்தது.

தொடர்ந்து நீர் வரத்து 20 ஆயிரத்தை தாண்டியபடி இருந்ததால் மேட்டூர் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

நள்ளிரவு 11 மணி அளவில் முழு கொள்ளளவான 120 அடியை மேட்டூர் அணை எட்டியது. அணை முழு கொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் நீர் மொத்தமும் காவிரி ஆற்றில் திறந்து திறந்து விடப்படுவதாக மேட்டூர் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் மதுசூதனன் வெள்ள அபாய எச்சரரிக்கை விடுத்துள்ளார். இன்று அதிகாலை முதல் காவிரி ஆற்றில் உபரிநீர் அதிக அளவில் திறக்கப்பட்டு உள்ளதால் காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்புக்காக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தநிலையில் சேலம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதால் . மேட்டூர் அணைக்கு வரும் 22,000 கன அடி நீர் முழுவதும் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனிடையே பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், தமிழக அரசு நினைத்தால் மேட்டூர் அணையிலிருந்து உபரி நீரை எடுத்து திப்பம்பட்டி நீரேற்று நிலையம் வழியாக எம்.காளிப்பட்டி ஏரிக்கு தண்ணீரைக் கொண்டுசெல்ல முடியும். எம்.காளிப்பட்டி ஏரியில் தொடங்கி மானாத்தாள் ஏரி வரை உள்ள 22 ஏரிகள் பழங்காலத்திலேயே கால்வாய்கள் மூலம் இணைக்கப்பட்டிருப்பதால் காளிப்பட்டி ஏரிக்குத் தண்ணீர் வந்தால், மீதமுள்ள 21 ஏரிகளும் இயல்பாகவே நிரம்பிவிடும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் மேட்டூர் அணையின் உபரி நீரைக் கொண்டு ஏரிகளை நிரப்பும் திட்டத்தால் யாருக்கும், எந்த பாதிப்பும் ஏற்படாது. இத்திட்டத்தின்படி மொத்தமுள்ள 100 ஏரிகளையும் நிரப்ப வேண்டும் என்றால் கூட, 0.555 டி.எம்.சி தண்ணீர்தான் தேவைப்படும். இதற்கான வினாடிக்கு 126 கன அடி தண்ணீரை நீரேற்றினால் போதுமானது என்றும் அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக