புதன், 3 நவம்பர், 2021

சரத் பவாரின் மகன் அஜித் பவாருக்கு சொந்தமான ரூ.1,000 கோடி சொத்துகள் முடக்கம்....

 தினமலர் : மும்பை: மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாருக்கு சொந்தமான ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2010 ல் மஹாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில், மாநில கூட்டுறவு வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள சர்க்கரை ஆலை குறைந்த விலையில் ஏலத்தில் விடப்பட்டது.
அப்போது, கூட்டுறவு வங்கியின் கூட்டுறவு வங்கியின் இயக்குநர்கள் வாரியத்தில் பிரதான உறுப்பினராக இருந்த, தற்போதை துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான அஜித் பவார் இருந்தார்.
அந்த ஆலையை வாங்க உபயோகப்படுத்தப்பட்ட நிதிகளில் பெரும்பாலான தொகை அஜித்பவாருக்கு சொந்தமான 'ஸ்பார்க்லிங் சாயில் பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டதும், இந்த ஆலையை வைத்து வங்கிகளில் பல கோடி கடன் ரூபாய் பெறப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.


இது தொடர்பாக எழுந்த புகாரின் பேரில், அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் ரூ.65.75 கோடி மதிப்பிலான அந்த சர்க்கரை ஆலையை முடக்கினர். வரி ஏய்ப்பு புகாரில் அஜித் பவாரின் சகோதரிகள் உள்ளிட்ட சில குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான தொழில் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் கடந்த அக்., 7 ம் தேதி சோதனை நடத்தினர். இதனுடன் ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் சிலவற்றிலும் சோதனை நடந்தது. இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், அஜித் பவாருக்கு சொந்தமான ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு சொத்துகள் முடக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மும்பையின் நாரிமன் பாயின்ட் பகுதியில் உள்ள நிர்மல் டவர் உள்ளிட்ட 5 சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக