வெள்ளி, 29 அக்டோபர், 2021

ரஜினிக்கு ரத்த குழாய் திசுக்கள் இறக்கும் இன்பார்க்சன் பாதிப்பு ! ICUல் சிகிச்சை..

 Mathivanan Maran  -   Oneindia Tamil :  சென்னை: சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்துக்கு ரத்த குழாய் திசுக்கள் இறந்துவிடக் கூடிய இன்பார்க்சன் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ரஜினிகாந்துக்கு ஐ.சி.யூ.வில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் டெல்லி சென்றிருந்தார். டெல்லியில் நடைபெற்ற தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இதன்பின்னர் டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றார்.

டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த் தீபாவளிக்கு ரிலீசாகும் தாம் நடித்த அண்ணாத்த படத்தை குடும்பத்தினருடன் பார்த்து மகிழ்ந்தார்.
இது தொடர்பாக தமது மகளின் செயலியான ஹூட் ஆப்பில் நெகிழ்ச்சியுடன் பதிவு செய்தும் இருந்தார். அதில் பேரன் தம்மை கட்டி அணைத்து பாராட்டியதை பெருமிதம் பொங்க ரஜினி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை திடீரென ரஜினிகாந்த் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான உடல்நலன் பரிசோதனைக்குதான் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டதாக லதா ரஜினிகாந்த் தெரிவித்தார். ஆனால் காய்ச்சல், தலைவலி காரணமாக ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இதனிடையே ரஜினிகாந்துக்கு இரவு முழுவதும் தீவிர சிகிச்சைப் பிரிவான ஐ.சி.யூவில் சிகிச்சை அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக நாம் விசாரித்த போது, ரஜினிகாந்துக்கு இன்பார்க்சன் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. அதாவது ரஜினிகாந்துக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எனப்படும் முழு உடல்நலன் பரிசோதனை செய்யப்பட்டது.
இன்பார்க்சன் பாதிப்பு
இன்பார்க்சன் பாதிப்பு

அதில், ரத்த குழாய்களுக்கு போதிய ரத்தம் கிடைக்காமல் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் இப்படி போதிய ரத்தம் கிடைக்காததால் ரத்த நாள திசுக்கள் அழிந்து வருவதும் தெரியவந்தது. இதனை இன்பார்க்சன் பாதிப்பு என கூறுகின்றனர். தற்போது ரஜினிகாந்து இன்பார்க்சன் பாதிப்புக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் காவேரி மருத்துவமனை சார்பில் ஓரிரு மணிநேரங்களில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்படும் என்கிற எதிர்பார்ப்பும் நிலவுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக