வியாழன், 7 அக்டோபர், 2021

பொது இடங்கள் சாலைகளில் உள்ள சிலைகளை அகற்ற வேண்டும்- சென்னை உயர்நீதிமன்றம்

 மாலைமலர் : தமிழ்நாடு  முழுவதும் பொது இடங்கள் மற்றும் சாலைகளில் உள்ள தலைவர்களின் சிலைகளை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
வேலூர் மாவட்டம், அரக்கோணம் தாலுகாவில் உள்ள கிராமம் ஒன்றில் அரசின் அனுமதி பெறாமல் புறம்போக்கு நிலத்தில் அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டிருந்தது. இந்த சிலையை அகற்றும்படி தாசில்தார் உத்தரவு பிறப்பித்தார்.
இதை எதிர்த்து வழக்கறிஞர் வீரராகவன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'நெடுஞ்சாலைகளை சிலைகளை வைக்கக் கூடாது என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு இருப்பதால், சிலையை அகற்றியதில் தவறில்லை' என்று கூறினார். இதனை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.


மேலும் நீதிபதிகள், தமிழ்நாடு முழுவதும் பொது இடங்கள், சாலைகள், புறம்போக்கு நிலங்கள், அரசு நிலங்களில் உள்ள தலைவர்கள் சிலைகளை மூன்று மாதங்களில் அடையாளம் கண்டு அகற்ற வேண்டும். பொதுமக்கள் உரிமைகள் பாதிக்கப்படாத வகையில் சிலைகள் மற்றும் கட்டுமானங்களை அமைப்பது குறித்து விரிவான விதிகளை வகுக்க வேண்டும்.

அனுமதி பெற்று பொது இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் தலைவர்களின் சிலைகளை அகற்றி, பூங்கா போன்ற இடங்களில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பாக 6 மாதங்களில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்' என்று தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்து நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக