வெள்ளி, 29 அக்டோபர், 2021

பெகாஸஸ்: 'உளவு பார்த்தவர்கள் சர்வதேச அளவில் அம்பலப்படுவார்கள்' - 'தி இந்து' என்.ராம்

பெகாசஸ்
என். ராம்

முரளிதரன் காசி விஸ்வநாதன்  -      பிபிசி தமிழ்  :  பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தை விசாரிக்க குழு ஒன்றை அமைத்து உச்ச நீதிமன்றம் புதன்கிழமையன்று உத்தரவிட்டது. இந்த வழக்கின் பின்னணி குறித்தும் தீர்ப்பு குறித்தும் வழக்குத் தொடுத்தவர்களில் ஒருவரான மூத்த பத்திரிகையாளர் என். ராம் பிபிசி தமிழிடம் பேசினார். பேட்டியிலிருந்து.
கே. பெகாசஸ் வழக்கில் நிபுணர் குழுவை அமைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் நீங்கள் என்ன கோரியிருந்தீர்கள்?
ப. இரண்டு விஷயங்களைக் கோரியிருந்தோம். முதலாவதாக, இந்தியக் குடிமக்கள் மீது என்.எஸ்.ஓ பெகாசஸ் உளவு செயலியை மத்திய அரசு பயன்படுத்தியிருக்கிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டுமெனக் கோரியிருந்தோம். இதற்கு மத்திய அரசு பதிலளிக்கும்போது, இது குறித்து நாங்கள் பதில் சொல்ல தேவையில்லை என்று சொன்னதை நீதிமன்றம் ஏற்கவில்லை. அடுத்ததாக, சுயேச்சையான ஒரு நிபுணர் குழுவை ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலோ, தற்போதைய நீதிபதி தலைமையிலோ அமைக்க வேண்டும் எனக் கோரியிருந்தோம். அதை நீதிமன்றம் ஏற்றிருக்கிறது.
அரசு தானே ஒரு நிபுணர் குழுவை அமைப்பது, இது தொடர்பான தவறான கருத்துகளைப் போக்குவதாகச் சொன்னது. ஆனால், இதனை நீதிமன்றம் ஏற்கவில்லை என்பது மிக முக்கியமானது.

காரணம், நீதி வழங்கப்பட்டால் மட்டும் போதாது; வழங்கப்பட்டதாகத் தெரியவும் வேண்டும் என்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

ஆகவே முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ரவீந்திரன் தலைமையில் குழுவை நீதிமன்றம் அமைத்தது. அவருக்கு உதவிசெய்ய ஒரு மூத்த காவல்துறை அதிகாரி உட்பட இரு நிபுணர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார். இது மிக நல்ல முடிவு. இந்த நிபுணர் குழுவிற்கான வரையறைகளும் மிகச் சிறப்பாக இருக்கின்றன.

கே. இந்த குழுவிற்கான வரையறைகளாக முக்கியமாக என்னென்ன சொல்லப்பட்டிருக்கிறது?

ப. இந்த உளவு செயலி, இந்தியர்களால் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா, அப்படியானால் யார் பயன்படுத்தியது, வெளிநாட்டு ஏஜென்சிக்கு இதில் தொடர்பு இருக்கிறதா, அப்படியிருந்தால் அதில் அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை, இதுபோல நடக்காமல் இருக்க சட்டத்தில் என்ன நடவடிக்கை எடுக்கலாம், நாடாளுமன்றம் அத்தகைய சட்டத்தை இயற்றும்வரை நீதிமன்றம் என்ன செய்ய வேண்டும் என விரிவாக பல வரையறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன.

கே. ஓர் அரசு அரசியல் தலைவர்களையோ மற்றவர்களையோ உளவு பார்ப்பது பல ஆண்டு காலமாக நடப்பதுதான். ஆனால், பெகாசஸ் விவகாரத்தை இவ்வளவு தீவிரமாக அணுக வேண்டிய அவசியம் என்ன?

ப. ஏனென்றால் பெகாசஸ் என்பது ராணுவத் தரத்திலான உளவு செயலி. அந்தச் செயலி ஒருவரது போனிற்கு அனுப்பப்பட்டால் அந்த போனை முழுமையாக கைப்பற்ற முடியும். தேவைப்பட்டால், நாம் விரும்பும் விஷயங்களை அந்த போனில் திணிக்க முடியும். அப்படித் திணிக்கப்பட்ட ஆவணங்களை வைத்து அரசு வழக்குத் தொடரலாம். முடிவில் அவர் நிரபராதி எனத் தீர்ப்பளிக்கப்படலாம். ஆனால், அதற்கான சட்டநடைமுறைகளே அவருக்கான தண்டனையாக அமைந்துவிடும். அந்த அளவுக்கு அந்த உளவு செயலி மோசமானது.

என்.எஸ்.ஓ குழுமத்தைப் பொறுத்தவரை இந்தச் செயலியை அரசுகளுக்கும் அரசு அமைப்புகளுக்கு மட்டுமே தருவதாகச் சொல்கிறது. இந்தியாவில் இந்தச் செயலியால் இத்தனை பேர் ஊடுருவப்பட்ட நிலையில், யார் செய்தார்கள் எனத் தெரியாது என்று அரசு சொல்வது மிக விசித்திரமாக இருக்கிறது. அதனை நீதிமன்றம் ஏற்கவில்லை.
 

கே. இது போன்ற செயல்கள் தேசப் பாதுகாப்பிற்காகச் செய்யப்படும்போது அது குறித்து மற்றவர்கள் கேட்க முடியாது என அரசு சொல்கிறது...

ப. உச்ச நீதிமன்றம் இது குறித்து அழகாகக் கூறியிருக்கிறது. அதாவது, தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் இலவச பாஸ் ஏதும் கிடைக்காது என நீதிமன்றம் கூறியிருக்கிறது. உண்மையிலேயே இதில் தேசப் பாதுகாப்பு சம்பந்தப்பட்டிருந்தால், தாங்கள் அதில் தலையிடப்போவதில்லை என்பதையும் நீதிமன்றம் சொல்லிவிட்டது. ஆனால், மேற்கு வங்கத் தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தில் இருந்தபோது, பிரசாத் கிஷோரின் போன் இந்த உளவு செயலியால் ஊடுருவப்பட்டது நிரூபிக்கப்பட்டுவிட்டது. ஆகவே, இந்த உளவு செயலியால் ஒருவர் ஊடுருவப்பட்டாரா இல்லையா என நிரூபிப்பது இப்போது எளிது. அரசை நம்பியிருக்க வேண்டியதில்லை.

கே. இதுபோன்ற உளவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வேறு நாடுகளிலும் விசாரணைக் குழுக்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அப்படியே உளவு பார்க்கப்பட்டது நிரூபிக்கப்பட்டாலும் என்ன நடந்துவிடுமென எதிர்பார்க்கிறீர்கள்..?

ப. நான் யூகங்களுக்குள் செல்ல விரும்பவில்லை. நான் மனுதாரராக இருப்பதால், கவனமாகப் பேச வேண்டும். ஆனால், இப்படி நடந்தது நிரூபிக்கப்பட்டால், உளவு பார்த்தவர்கள் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் அம்பலப்படுவார்கள். யார் உளவு பார்த்தது என்று தெரியவந்தால், வழக்குத் தொடர முடியும். ஆனால், இதற்கெல்லாம் நீண்ட காலம் ஆகும்.
பெகாசஸ்

இதைச் சட்ட விரோதமாகச் செய்திருக்கிறார்கள். அந்தரங்க தனியுரிமை தாக்கப்பட்டிருக்கிறது. கருத்து சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம் ஆகியவை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கின்றன. இப்படியெல்லாம் நாம் உளவு பார்க்கப்படுகிறோம் என்று தெரிந்தாலே, நம்மால் நிம்மதியாக எழத முடியாது.

கே. இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கின. இது தவிர, இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் நடந்துகொண்டவிதம் போதுமானது என நினைக்கிறீர்களா?

ப. இன்னும் செய்திருக்கலாம். ஆனால், இந்த விவகாரத்தை அவர்கள்தான் பெரிதாக்கினார்கள். இல்லாவிட்டால், சில ஊடக கட்டுரைகளோடு இது முடிந்து போயிருக்கும். மக்கள் முன்பாக இதனை பெரிய விஷயமாக்கியது அரசியல் கட்சிகள்தான். எதிர்க்கட்சிகள் இன்னும் செயல்பட்டிருக்கலாம் என்றாலும் போதுமான அளவு செய்திருக்கிறார்கள்.

கே. இவ்வளவு நடந்த பிறகும் மத்திய அரசு நடந்துகொள்ளும்விதம் எப்படியிருக்கிறதென நினைக்கிறீர்கள்?

ப. சுரணையற்று இருக்கிறார்கள். தேர்தல் வரும் பார்த்துக்கொள்ளலாம் என இருக்கிறார்கள். ஏற்கனவே தமிழ்நாட்டிலும் மேற்கு வங்கத்திலும் தோற்றுவிட்டார்கள். பஞ்சாபிலும் உ.பியிலும் தேர்தல் நெருங்குகிறது. பார்த்துக்கொள்ளலாம் என்று இருப்பார்கள். ஆனால், எல்லா அரசாங்கங்களும் இப்படித்தான். இம்மாதிரி ஊழல் போன்றவை வெளியாகும்போது, "ஏதோ சில பத்திரிகைகளில் வந்திருக்கிறது. நம்மை ஆதரிப்பவர்கள் யாரும் இதை நம்பப்போவதில்லை" என்று இருப்பார்கள்.

ஆனால், நெருக்கடி நிலை காலத்தில் மக்கள் இதையெல்லாம் நம்பினார்கள். அதனால்தான் இந்திரா காந்தி தோல்வியடைந்தார். அப்படி தோல்வி கிடைக்கப் போகிறது என்பது அவருக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தது. அந்த அளவுக்கு அரசியல் கூருணர்வு இருந்தது. இவர்களுக்கு இருக்கிறதா என்பது தெரியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக