வெள்ளி, 15 அக்டோபர், 2021

தலித் மாணவரை அடித்து உதைத்த அரசுப் பள்ளி ஆசிரியர் கைது . கடலூர் மாவட்டத்தில்

தலித் மாணவரை காலால் உதைத்த ஆசிரியர்


zeenews.india.com : கடலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவனை, ஆசிரியர் ஒருவர் பிரம்பால் அடித்து கால்களால் உதைக்கும் காட்சி வெளியாகியுள்ளது.
கடலூர் (Cuddalore) மாவட்டம் சிதம்பரத்தில் ஒரு அரசுப் பள்ளி உள்ளது. அங்கு பயிலும் மாணவன் (School Student) ஒருவர் வகுப்புக்கு சரியாக வராமல் இருந்தார். இதனால் கடுப்பான ஆசிரியர் அவரை முட்டிபோட வைத்துள்ளார்.
பின்னர் அங்கு இருந்த பிரம்பால் அந்த ஆசிரியர் மாணவனை கடுமையாக அடித்துள்ளார். இது மட்டும் இல்லாமல் அந்த ஆசிரியர் இதோடு நிற்காமல் அந்த மாணவரை தனது கால்களால் எட்டியும் உதைத்ததுடன் இழிவாக பேசி மோசமாக அடித்துள்ளார். இந்த சம்பவத்தை அங்கு இருந்த சக மாணவர் ஒருவர் வீடியோ பிடித்துள்ளார்.
இந்நிலையில் இந்த காட்சியை படம் பிடித்த மாணவர் அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது மாணவரை ஆசிரியர் மிருகத்தனமாக தாக்கும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

BBC  : மாணவரை பிரம்பால் அடித்து, காலால் எட்டி உதைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிதம்பரம் அரசு நந்தனார் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர் குமரனை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆசிரியர் அடித்து, உதைப்பதாகக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
என்ன நடந்தது?
சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் நேற்று பள்ளி வளாகத்தில் ஆய்வுக்கு சென்றுள்ளார். அப்போது குமரன் உட்பட சில மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து பள்ளி வளாகத்தில் இருப்பதைக் கண்ட தலைமை ஆசிரியர் மாணவர்கள் அனைவரையும் அவர்கள் வகுப்பு ஆசிரியரிடம் அழைத்துவந்து விட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த வகுப்பு ஆசிரியர் மாணவர்களை கண்டித்து அடித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அதில் குமரன் என்ற மாணவரை அடித்து காலால் உதைக்கும் போது அதை வகுப்பிலிருந்த சக மாணவர்களில் ஒருவர் அலைபேசியில் பதிவு செய்துள்ளார். இந்த காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ஆசிரியர் தாக்கியதால் காயமடைந்ததாக கூறி குமரனை சக மாணவர்கள் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தலித் சமூகத்தை சேர்ந்தவர்

இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் இதுபற்றி தகவலறிந்த கடலூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை துணை ஆட்சியர் செல்வபாண்டி, சிதம்பரம் ஆதிதிராவிட நலத்துறை தாசில்தார் சத்யன் ஆகியோர் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். பள்ளி வகுப்புக்கு வராத மாணவர்கள் சிலரை இயற்பியல் ஆசிரியர் சுப்பிரமணியன் தாக்கியதும், அதில் ஒரு மாணவரை பிரம்பாலும், காலாலும் தாக்கும்போது சக மாணவர் ஒருவர் காணொளி எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதும் விசாரணையில் தெரியவந்தது.


 

இதுபற்றி தகவலறிந்த சிதம்பரம் நகர காவல் துறையினர் அரசு மருத்துவமனைக்கு சென்று மாணவனிடம் விசாரணை நடத்தினர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவனிடம் அதிகாரிகள் குழுவினரும் நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டனர்.
வைரலான காணொளியின் காட்சி
படக்குறிப்பு,

வைரலான காணொளியின் காட்சி

இதையடுத்து மாணவர் காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மாணவனை வகுப்பறையில் தாக்கிய இயற்பியல் ஆசிரியர் சுப்பிரமணியன் மீது சிறார் வதை சட்டம், பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினத்தவர் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவு உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சிதம்பரம் நகர போலீசார் ஆசிரியர் சுப்பிரமணியனை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் ஆசிரியரை சிதம்பரம் இரண்டாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் முன்னிறுத்தினர். நடுவர் உத்தரவை அடுத்து அவர் சிதம்பரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து சிதம்பரம் நகர காவல் கண்காணிப்பாளர் ரமேஷ்ராஜை பிபிசி தொடர்பு கொண்டு பேசியது. அப்போது பேசிய அவர், "இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளோம். தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்ட ஆசிரியரிடம், நீதிமன்ற அனுமதி பெற்று உரிய விசாரணை மேற்கொள்ளப்படும். மேலும் பாதிக்கப்பட்ட மாணவர் தற்போது நலமுடன் உள்ளார்," என்றார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக