வியாழன், 28 அக்டோபர், 2021

தோழர் நன்மாறன் காலமானார் . 'கண்டக்டர்' முதல் 'கம்யூனிஸ்ட்' வரை!

நக்கீரன் பாரதி நேசன்   :  எளிமையான ஆளுமைகளுக்கு எல்லாம் முகவரி தருவது மரணம் மட்டுமே. அப்படி, மரணம் அறிமுகப்படுத்தி வைத்துள்ள புதிய ஆளுமை நன்மாறன்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் மதுரை கிழக்குத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.-வுமான நன்மாறன், உடல்நலக் குறைவால், அரசு மருத்துவமனையில் காலமாகியுள்ளார்.
இரண்டு முறை எம்.எல்.ஏ.-வாக இருந்த ஒருவரின் மரணம், அரசு மருத்துவமனையில் நிகழ்வது என்பது, அரசியல் அதிசயம். காலமெல்லாம் வாடகை வீட்டில் வாழ்ந்து வந்த நன்மாறன், தனி வீட்டில் குடியேற நினைத்தார். ஆனால், அந்த எண்ணம் இறுதிவரை கைகூடவே இல்லை.
சாதாரண குடும்பத்தில் பிறந்த நன்மாறன், 12-ம் வகுப்பைத் தாண்டவில்லை. பள்ளிப்படிப்பு முடிந்தவுடன், கண்டக்டராக சில காலம் பணியாற்றினார்.


பிறகு, மார்க்ஸிய சிந்தனையில் ஏற்பட்ட ஈடுபாட்டால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார். 1968-ல் தொடங்கிய நன்மாறனின் அரசியல் பயணம், 2021 வரை தொடர்ந்துள்ளது.
கடந்த 2001 மற்றும் 2006 சட்டமன்றத் தேர்தலில், மதுரை கிழக்குத் தொகுதியில் போட்டியிட்ட நன்மாறன், மகத்தான வெற்றியைப் பெற்றார்.
தமிழகத்தில் உள்ள அத்தனை அரசியல் ஆளுமைகளுடனும் தொடர்பில் இருந்த நன்மாறன், அவர்களிடம் இருந்து எந்த உதவியையும் வாழ்நாள் இறுதிவரை கேட்டதேயில்லை. இவர் எம்.எல்.ஏ.-வாக இருந்த காலகட்டத்தில்தான் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உருவாக்கப்பட்டது. அதில், இவரின் பங்கு மகத்தானது.

அரசியல் என்ற சிமிழுக்குள் நன்மாறனை அடைப்பது சாத்தியமற்ற ஒன்று. மிகச்சிறந்த மேடைப் பேச்சாளர், குழந்தைக் கவிஞர், கதை சொல்லி எனப் பன்முகம் கொண்டவர். நகைச்சுவையுடன் முற்போக்கு கருத்துகளைத் தூவிச்செல்லும் 'மேடை கலைவாணர்' அவர். சங்க இலக்கியத்தின் மீது அதீத ஆர்வம்கொண்ட நன்மாறன், மாபொசி, கலைஞர், குன்றக்குடி அடிகளார் போன்றோரின் பேச்சுக்கு எப்போதும் ரசிகனாக இருந்தவர். நூலகத்தில் கூடுகட்டி வாழ்ந்து வந்த புத்தகப் பறவையாகவே இறுதி மூச்சு வரை இருந்துவந்தார்.

ஒருமுறை கட்சி நிகழ்ச்சிக்காகப் பேருந்தில் புறப்பட்ட நன்மாறன், தவறுதலாக ஒற்றைக் கால் செருப்பைத் தவறவிட்டுள்ளார். 'ஐயா.. ஒரு நிமிஷம் பஸ்ஸ நிப்பாட்டுறீங்களா.. என் செருப்பு கீழ விழுந்துட்டு..' என கண்டக்டரிடம் கேட்டுவிட்டு, கீழே இறங்கி செருப்பைத் தேடியுள்ளார். அவரின் செருப்பு மிக நீண்ட தூரத்தில் கிடந்துள்ளது. அதனை எடுக்கச் சென்றுள்ளார் நன்மாறன். அதற்குள் ஒரு ஆட்டோ டிரைவர் அவரை வழிமறித்து, 'ஐயா எங்க போறீங்க..?' எனக் கேட்டுள்ளார். 'நான் ஒரு நிகழ்ச்சிக்காக வெளியூர் போறேன்பா..' எனக் கூறிய அவர், பஸ்ஸை நோக்கி நடையைக் கட்டியுள்ளார். இடைமறித்த ஆட்டோ டிரைவர், 'வாங்க ஆட்டோவுல போகலாம்..' எனக் கூறியுள்ளார். 'ஆட்டோவுல வரலாம்.. ஆனா என் கிட்ட வெறும் 20 ரூபா தான் இருக்குப்பா..' என வெகுளித்தனத்துடன் கூறியுள்ளார். ஆட்டோ டிரைவரோ, 'அட வாங்கய்யா.. போகலாம்..' என அழைத்துச் சென்றுள்ளார். பின்னாளில், இந்தச் சம்பவத்தை வியந்து எழுதிய ஆட்டோ டிரைவரால்தான் இது வெளியே தெரியவந்தது.
 
இரண்டுமுறை எம்.எல்.ஏ.வாக இருந்தபோதும், அரசு வழங்கிய ஊதியத்தைக் கட்சிப் பணிகளுக்கே கொடுத்துவிட்டார். பதிலுக்கு, கட்சி கொடுத்த ரூ12,000 ரூபாயில்தான் குடும்பம் நடத்தி வந்தார் நன்மாறன். மதுரை ஆரப்பாளையத்தில் உள்ள வாடகை வீட்டில் இறுதிவரை, 6000 ரூபாய் வாடகைக்கு வசித்துவந்தார். கடந்த பிப்ரவரி மாதம், மதுரை ஆட்சியரைச் சந்தித்த நன்மாறன் ஒரு மனு கொடுத்தார். அதில், ஏழை எளிய மக்களுக்காகக் குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்படுகிற வீடுகளில் ஒன்றைத் தமக்கு ஒதுக்க ஆவண செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார். ஒட்டுமொத்த தமிழகமுமே இப்போதுதான் இவரைத் திரும்பிப் பார்த்தது. இப்படி ஒரு எம்.எல்.ஏ.-வாக வாழ முடியுமா எனப் பலரும் வேதனைக் குரல் எழுப்பினர்.

72 வயதிலும் துடிப்புடன் கட்சிப் பணி ஆற்றி வந்த நன்மாறன், நேற்று இரவு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சைப் பலனின்றி இன்று மாலை மரணமடைந்துள்ளார். நன்மாறனின் மரணத்திற்குக் கட்சி கடந்து பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். எளிமையின் தூதுவராக வாழ்ந்து வந்த தோழர் நன்மாறனின் புகழ் காலத்திற்கும் நிலைத்து நிற்கும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக