ஞாயிறு, 17 அக்டோபர், 2021

பன்னீர்-எடப்பாடி: சமரசம் பேசும் சசிகலா

பன்னீர்-எடப்பாடி: சமரசம் பேசும் சசிகலா

மின்னம்பலம் :  ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி ஆகியோரை யாரும் தரக்குறைவாக பேச வேண்டாம் என்றும்  எல்லாரும் இணைந்து அதிமுக ஆட்சிக்கு வர பாடுபட வேண்டும் என்றும் சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதிமுகவின் பொன்விழாவை ஒட்டி இன்று (அக்டோபர் 17)  சென்னை  ராமாவரத்திலுள்ள எம்.ஜிஆரின் தோட்டத்தில் அதிமுக பொன் விழா மலரை வெளியிட்ட சசிகலா அங்கே தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவரது  தொனியில் பெரும் மாற்றம் தெரிந்தது.


சில மாதங்கள் முன்பு அலைபேசியில் தொண்டர்களோடு பேசிய சசிகலா, “நான் வர்றேன்.  கட்சியை  பாத்துக்குறேன். கவலையே படாதீங்க’ என்று பேசியவர் இன்று ராமாவரம் தோட்டத்தில் பேசும்போது பன்னீர், எடப்பாடியோடு சமரசம் பேசும் மனநிலையில் இருப்பதையே வெளிப்படையாக உணர்த்தியிருக்கிறார்.
அவர் பேசுகையில், “தலைவர் வழி வந்த அம்மாவின் உண்மையான தொண்டர்கள் நாம் அடுத்தவர்களை புண்படுத்த வேண்டாம் என்று நான் நினைக்கிறேன்.  அதனால் இனிமேல் யாரும் பொதுக்கூட்டங்களில் பேசும்போது கூட யாரையும் தரக் குறைவாக பேச வேண்டாம்.

கண்போன போக்கிலே கால் போகலாமா... கால் போன போக்கிலே மனம் போகலாமா... மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா? புரட்சித் தலைவரின் இந்த பாடல் யாருக்குப் பொருந்தும் என்பதை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.  இன்று நம் இயக்கம்  ஆட்சியில் இருந்திருந்தால் புரட்சித் தலைவருக்கும், அம்மாவுக்கும் எவ்வளவு பெருமையாக இருந்திருக்கும்.

நெருக்கடிகள் என்னை சூழ்ந்த போது கூட கழகத்தை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்துவிட்டு தான் நான் சென்றேன். தேர்தலில் நான் ஒதுங்கி இருந்தது ஏன் என்று உங்களுக்கே தெரியும்.   என்னால் இந்த இயக்கத்துக்கு எள் முனையளவும் பாதிப்பு வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் அமைதியாக இருந்தேன்.  கழகத்தைக் காப்பாற்ற வேண்டியது நம் அனைவரின் பொறுப்பு.  இந்த நேரத்தில் நமக்குத் தேவை ஒற்றுமைதான்.  நீர் அடித்து நீர் விலகாது. நமக்குள் ஏற்பட்ட பிளவுகள் தான் நம் எதிரிகளுக்கு இடம்  கொடுத்துவிட்டது.

இந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழகத்தில் 33 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் இருந்தது. இந்த இயக்கம் இன்றைக்கு இரும்புக் கோட்டையாக மாறியிருக்கிறது என்றால் இருபெரும் தலைவர்கள்தான் காரணம். மக்கள் நலனிலும், தொண்டர்கள் நலனிலும் அக்கறை காட்டாவிட்டால் நாம் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் தூக்கி எறியப்படுவோம் என்பதை எல்லாரும் உணரவேண்டும்.  நாம் இணைந்து நிற்க வேண்டிய நேரம் இது.     

 புரட்சித் தலைவர் மறைவுக்குப் பின் கழகம் பிளவுபட்டது.  இதே  ராமாவரம் தோட்டத்தில் ஜானகி அம்மையார் என்னை அழைத்தார்கள். அவர்களோடு நான் பேசி நல்ல முடிவு ஏற்பட்டது.  அந்த அம்மாவே கட்சி ஒண்ணு சேரணும்னு சொல்லிட்டாங்க; அது இந்த வீட்டில்தான் நடந்தது.   அம்மாவின் பெருமுயற்சியால் கழகம் ஒன்றுபட்டு மீண்டும் கழக ஆட்சி அமைந்தது. அதுபோலவே புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித் தலைவி  ஆகியோரின் வழியில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து மக்களின் பேராதரவோடு கழக ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் கொண்டுவர வேண்டும்  அதற்கு நம் அனைவரும் பாடுபடவேண்டும். நாம் ஒன்றாக வேண்டும் கழகம் வென்றாக வேண்டும்” என்ற சசிகலா தன் பேச்சை முடிக்கும்போது ஜெயலலிதா பாணியில்,’அண்ணா நாமம் வாழ்க, புரட்சித் தலைவர் நாமம் வாழ்க, புரட்சித் தலைவி நாமம் வாழ்க’ என்று சொல்லி முடித்தார்.

சசிகலாவுக்கு நெருக்கமான வட்டாரங்களில் நாம் பேசியபோது, “பன்னீர், எடப்பாடி பின்னால் பாஜக இருக்கிறது. மேலும் நீதிமன்றத்தில் உரிமை வழக்குகள் முடிவுக்கு வர நீண்ட ஆண்டுகள் ஆகும். எனவே சட்டப்படி நடத்தும் போராட்டத்தை குறைத்துக்கொண்டு சமரசத் திட்டத்தை முன் வைத்து அதிமுகவை ஒன்றாக்குவதில் இறங்கிவிட்டார் சசிகலா. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கடுமையாக தோல்வி அடைந்துள்ள நிலையில் அடுத்து  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், பின்  நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவை வருவதால் இந்த  சமரசத் திட்டத்தை எடப்பாடி, பன்னீர் ஒரேயடியாக நிராகரிக்கமாட்டார்கள் என்று நம்புகிறார் சசிகலா. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடையும் என்று சசிகலா எதிர்பார்த்தார். அதையடுத்துதான் இந்த சமரசத் திட்டத்தை வெளிப்படையாகவே அவர் முன் வைத்திருக்கிறார்” என்கிறார்கள்.  

-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக