வியாழன், 28 அக்டோபர், 2021

ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்? துரோகி கதிர் ஆனந்த் ஒழிக, அதிமுகவின் கைகூலி கதிர் ஆனந்த் ஒழிக’ என்று...

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

மின்னம்பலம் :  துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?
தமிழ்நாட்டிலேயே வேறு எங்குமில்லாத அளவுக்கு சேர்மன் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக மறுதேர்தல் கோரி தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகனுக்கு சவால் விடும் வகையில் இந்த கோரிக்கை மனு அனுப்பப்பட்டிருப்பது திமுக வட்டாரத்தில் அடுத்த கட்ட அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த 6, 9 தேதிகளில் நடைபெற்று வாக்கு எண்ணிக்கை 12 ஆம் தேதி எண்ணப்பட்டது. வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் 20 ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டனர். அதன்பின் அக்டோபர் 22ஆம் தேதி ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், துணைத் தலைவர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்கள் தேர்தல் நடந்தது.
மிகப் பெரும்பாலான இடங்களில் திமுகவே சேர்மன் பதவியைக் கைப்பற்றிய நிலையில் சில இடங்களில் மட்டும் திமுகவுக்குள்ளேயே போட்டா போட்டி நிலவியது. அதிலும் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் சொந்த மாவட்டமான வேலூரையடுத்த திருப்பத்தூர் மாவட்டத்தில் பெரிய கலாட்டாவே நடந்தது.

திமுக மாவட்டச் செயலாளர் தேவராஜின் மருமகள் காயத்ரி பிரபாகரன் சேர்மன் வேட்பாளராக ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தேர்தல் முடிவுக்குப் பின் துரைமுருகனின் ஏலகிரி தோட்டத்தை கவனித்து வரும் பாரியின் மனைவி சங்கீதாவை சேர்மன் ஆக்க முயன்றார் துரைமுருகனின் மகனும் எம்.பி.யுமான கதிர் ஆனந்த். அதில் வெற்றியும் பெற்றார்.

கவுன்சிலர்கள் பதவியேற்பு அன்றே துரைமுருகன், கதிர் ஆனந்த் ஆகியோரின் ஆசியோடு அவர்களுக்கு நெருக்கமான பாரி ஆறு திமுக கவுன்சிலர்களை ஓசூருக்கு அழைத்துச் சென்றுவிட்டார். சேர்மன் தேர்தல் அன்று பாரி ஆதரவு திமுக கவுன்சிலர்கள், பாமக, அதிமுக கவுன்சிலர்கள் ஆதரவோடு சங்கீதா பாரி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். திமுக மாவட்டச் செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான தேவராஜின் ஆதரவு கவுன்சிலர்கள் ஓட்டு போடவே அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து அவர்கள் ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலக வாசலிலேயே, ‘துரோகி கதிர் ஆனந்த் ஒழிக, அதிமுகவின் கைகூலி கதிர் ஆனந்த் ஒழிக’ என்று கோஷமிட்டனர். இந்நிலையில் அடுத்த நாளே துரைமுருகன், கதிர் ஆனந்த் ஆதரவு ஒன்றிய செயலாளர்கள், பாரி ஆகியோர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டனர்.

இத்தோடு இந்த பிரச்சினை ஓயவில்லை. சேர்மன் தேர்தலில் திமுகவின் வேட்பாளராக முடிவு செய்யப்பட்டிருந்த காயத்ரி பிரபாகரன் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டருக்கும், மாநில தேர்தல் ஆணையத்துக்கும் ஒரு கோரிக்கை மனுவை அனுப்பியிருக்கிறார்.

அந்த மனுவில், “அக்டோபர் 22 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற வேண்டிய ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேர்தலுக்கு பி. சங்கீதா உள்ளிட்ட 11 உறுப்பினர்களை மட்டும் காலை 6 மணிக்கே, தேர்தல் அதிகாரியான வட்டார வளர்ச்சி அலுவலரின் ஆலோசனையின்படி காவல்துறை உதவியோடு ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குள் அனுமதித்துள்ளார்கள்.

ஆனால் காயத்ரியுடன் வந்த 5 உறுப்பினர்களையும் 9 மணிக்குதான் அலுவலகத்துக்குள் அனுமதித்தார்கள். ஆனால் எங்களையும் தேர்தல் அலுவலர் சுரேஷ் வாக்களிக்க விடாமல் காவல்துறை உதவியோடு வெளியேற்றிவிட்டார். இது தேர்தல் விதிகளுக்குப் புறம்பானது.

மேலும் ஒன்றிய குழு தலைவர் தேர்தல் மறைமுக தேர்தல்தான். ஆனால் சங்கீதா ஆதரவு உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவாக வாக்களித்து அவரிடம் காண்பித்து பெட்டியில் போட்டிருக்கிறார்கள். இதுவும் தேர்தல் விதிகளுக்குப் புறம்பானது. எனவே சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர்கள், காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று காயத்ரி பிரபாகரன் மனு அளித்துள்ளார்.

நாம் இதுகுறித்து திமுக வட்டாரத்தில் விசாரித்தபோது, “ஆலங்காயம் ஒன்றியத்தில் தேர்தலுக்கு முன்பே துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் செய்யும் வேலைகள் முதல்வர் ஸ்டாலினுக்கு ரிப்போர்ட்டாக சென்றிருக்கிறது. அப்போதே அவர் பொறுப்பாளர்களான அமைச்சர்களிடம் இதுபற்றி கூறியிருக்கிறார். இந்த நிலையில் மாவட்டச் செயலாளரின் வேட்பாளரை வாக்களிக்கக் கூட விடாமல் தேர்தல் நாளன்று துரைமுருகன் தரப்பினரின் நடவடிக்கைகள் முதல்வரை கோபப்படுத்தியிருக்கிறது. அதனால்தான் துரைமுருகன் ஆதரவாளர்களை நீக்கினார். மேலும், தலைமையின் அனுமதியின்பேரில்தான் மாவட்டச் செயலாளர் தேவராஜ் தரப்பினர் மறு தேர்தலுக்கான கோரிக்கை மனுவை கலெக்டரிடம் அளித்துள்ளார்கள். தேர்தல் ஆணையத்துக்கும் கொடுத்துள்ளார்கள்.

எனவே கூடிய சீக்கிரம் ஆலயங்காயம் ஒன்றியத்துக்கு மறு தேர்தல் நடத்தப்பட்டு மாவட்டச் செயலாளர் தேவராஜின் மருமகளான காயத்ரி பிரபாகரன் ஒன்றிய தலைவராக தேர்ந்தெடுக்கப்படலாம். அப்படி நடந்தால் துரைமுருகனுக்கு எதிராக திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் நேரடியாக மேற்கொண்ட அதிரடியான நடவடிக்கையாக அது அமையும்” என்கிறார்கள்.

-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக