சனி, 16 அக்டோபர், 2021

'ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணையத் தலைவர் நியமனம்'- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

உருவாகிறது தமிழ்நாடு ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணையம். - #DMK4TN

 நக்கீரன் செய்திப்பிரிவு  :  தமிழ்நாடு ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணையத்திற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  
இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு இன்று (15/10/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் சமூகப் பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், மாநில அளவில் ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர் ஆகியோருடைய சட்டப்பூர்வமான உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களுடைய முக்கியமான பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும், 'தமிழ்நாடு ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணையம்' என்கிற புதிய அமைப்பு ஒன்றைத் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் வகையில் உருவாக்கிட உரிய சட்டம் இயற்றப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு, அதற்கான உரிய சட்டமும் இயற்றப்பட்டுள்ளது.


மேற்படி, அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, 'தமிழ்நாடு ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணையத்திற்கு' கீழ்க்காணும் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தமிழ்நாடு ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணையத்தின் தலைவராக சென்னை உயர்நீதிமன்றத்தின் மேனாள் நீதியரசர் சிவக்குமார், துணைத் தலைவராக புனிதப் பாண்டியன், உறுப்பினர்களாக வழக்கறிஞர் குமாரதேவன், எழில் இளங்கோவன், லீலாவதி தனராஜ், வழக்கறிஞர் பொ.இளஞ்செழியன், முனைவர் கே.ரகுபதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆணையத்தின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம் மூன்று ஆண்டு காலம் ஆகும். இந்த ஆணையம், ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர் ஆகியோருடைய சட்டப்பூர்வமான உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களுடைய முக்கியமான பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும் உரிய ஆலோசனைகளையும், பரிந்துரைகளையும் அரசுக்கு அவ்வப்போது வழங்கும்." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக