வியாழன், 21 அக்டோபர், 2021

வைகோ மகனுக்கு எதிர்ப்பு- ம.தி.மு.க. மாநில நிர்வாகி ஈஸ்வரன் ராஜினாமா

மாலைமலர் : துரை வைகோவுக்கு பதவி வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையைச் சேர்ந்த ம.தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளர் ஈஸ்வரன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
கோவை:  ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோவுக்கு கட்சியில் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர் ம.தி.மு.க. தலைமை கழக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் நேற்று நடந்த ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் கூட்டத்தில் வாக்கெடுப்பு மூலம் துரை தேர்வு செய்யப்பட்டு அவருக்கு பதவி வழங்கப்பட்டதாக வைகோ அறிவித்தார்.


துரை வைகோவுக்கு பதவி வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையைச் சேர்ந்த ம.தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளர் ஈஸ்வரன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
கடந்த 28 ஆண்டுகளாக என் வாழ்க்கையை முழுவதுமாக அர்ப்பணித்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தில் பணியாற்றி வந்தேன். கட்சி இட்ட கட்டளைகளை செவ்வனே நிறைவேற்றி உள்ளேன். மக்களின் பிரச்சனைகளை தீர்க்க அறப்போராட்டத்தின் வாயிலாகவும் சட்டப்போராட்டத்தின் வாயிலாகவும் தொடர்ந்து போராடி உள்ளேன்.

தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு எதிராக எனது சட்டப்போராட்டத்தின் மூலமாக கோவையில் 10 ஆயிரம் மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இது தான் நான் செய்த மிகப்பெரிய சாதனையாக கருதுகிறேன்.

எனது பொதுவாழ்வின் மூலம் கிடைத்த அரசியல் தொடர்புகளை பயன்படுத்தி கடுகளவு கூட நான் பலன் அடைந்ததில்லை. அரசியலை எனது சுய லாபத்திற்காக பயன்படுத்தக்கூடாது என்பதை என் கொள்கையாகவே வைத்துள்ளேன்.

எது நடக்கக்கூடாது என்று நினைத்தேனோ அது நடந்துவிட்டது என்று எதை பொதுச்செயலாளர் வைகோ சொன்னாரோ அது நடப்பதற்கு முன்பே அமைதியாக சென்றுவிட நினைத்து கடிதம் எழுதினேன். ஆனால் பொதுச்செயலாளரின் காந்தக்குரல் என்னை கட்டிப்போட்டு விட்டது. ஆனால் இன்று கனத்த இதயத்தோடு இமைப்பொழுதும் என்னை நீங்கா என் தலைவரின் இயக்கமான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தில் இருந்து விலகிக்கொள்கிறேன்.

எனது சட்டப்போராட்டங்களை தொடரவும், மக்கள் பணிகளை தொடரவும் எனக்கு சிறு அமைப்பாவது தேவைப்படுகிறது. அதனால் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் என்ற ஒரு இயக்கத்தை தொடங்க உள்ளேன். இது அரசியல் இயக்கமல்ல. ஆனால் அரசியலை தூய்மைப்படுத்த பயன்படும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக