வியாழன், 28 அக்டோபர், 2021

கள்ளக்குறிச்சி பட்டாசு விபத்து! தடை செய்யப்பட்ட நாட்டு வெடிகள் காரணமா? ... மக்கள் கோரிக்கை!

 மின்னம்பலம் : கள்ளக்குறிச்சி பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து, தமிழ்நாடு அரசுக்குச் சில கோரிக்கைகளை வைத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் அருகே உள்ள பட்டாசு கடையில் நேற்று முன்தினம் இரவு திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது. காயமடைந்த 10க்கும் மேற்பட்டோர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதுகுறித்து அறிந்த முதல்வர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

தொடர்ந்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன், தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கே.எஸ்.அழகிரியும், பாஜக அண்ணாமலையும் கோரிக்கை வைத்துள்ளனர். அதுபோன்று கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸும் கோரிக்கை வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று தேமுதிக விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பட்டாசுக் கடைகளை உடனடியாக ஆய்வு செய்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசு பட்டாசுக் கடைக்கு எந்த அடிப்படையில் அனுமதி வழங்குகிறதோ, அது முறையாகக் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை தொடர் கண்காணிப்பில் உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பட்டாசு விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சென்று பார்த்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர் அரசியல் தலைவர்கள்.

பட்டாசு விபத்து குறித்து எஸ்பி ஜியாவுல்ஹக் கூறுகையில் ''இந்த விபத்தில் வெடித்த வெடிகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. இதில் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு வெடிகள் அதிகம் உள்ளது. போதிய பாதுகாப்பு வசதியின்றி குடோனில் அதிகளவு பட்டாசுகளை சேகரித்து வெடி விபத்திற்கு காரணமான கடை உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

-வினிதா


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக