செவ்வாய், 12 அக்டோபர், 2021

அதிமுகவின் அடுத்த அவைத் தலைவர்..? ஜெயகுமாரின் பதில்!

 நக்கீரன் செய்திப்பிரிவு  :  அதிமுக பொன்விழா ஆண்டு வருகிற அக்டோபர் 17ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் பொன்விழா கொண்டாட்ட நிகழ்வுகள் குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் ஆலோசனைக் கூட்டம் இன்று (11.10.2021) காலை 10 மணியளவில் தொடங்கி 2 மணிநேரம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அதிமுக மூத்த நிர்வாகிகளான ஜெயகுமார், சி. விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, காமராஜ், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பொன்விழா கொண்டாட்டம் தவிர, ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்தும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா செல்ல இருப்பது குறித்தும், அதிமுகவின் புதிய அவைத் தலைவரை தேர்வு செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.


இக்கூட்டத்திற்குப் பின்பு செய்தியாளரைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், “அதிமுக தோற்றுவிக்கப்பட்ட  50 ஆண்டுகளில் 30 ஆண்டு காலம் ஆட்சி செய்தது.
இது எந்த ஒரு கட்சிக்கும் கிடையாது. ஐந்து முதலமைச்சர்கள் இதுவரை அதிமுக ஆட்சியில் ஆண்டுள்ளனர். பல சோதனைகள், இன்னல்களைத் தாண்டி வீரநடை, வெற்றிநடை போட்டுவருகிறது அதிமுக இயக்கம். பொன் விழா எப்படி கொண்டாட வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பொன் விழா ஆண்டு என்பதால் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படும்” என்றார்.

மேலும், ‘உண்மையான எதிர்க்கட்சி நாம் தமிழர் தான்’ என்ற சீமானின் கருத்து குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, “இந்த இயக்கத்தை எந்த கொம்பன் நினைத்தாலும் ஆட்ட முடியாது; அசைக்கவும் முடியாது. 1 கோடி 46 லட்சம் வாக்குகள் பெற்ற அதிமுக, இமயமலை போன்றது. ஆக இமயமலை போல் உள்ள இயக்கத்தைப் பரங்கிமலை போன்றவர்கள்; தாழ்ந்து கிடப்பவர்கள் கருத்து தெரிவிப்பது 2021இன் சிறந்த நகைச்சுவையாக பார்கிறேன்” என்றார்.

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து குறித்தும், அதிமுகவின் அடுத்த அவைத் தலைவர் பதவிக்கு உங்கள் பெயரும் அடிப்படுகிறதே என்ற நிருபர்களின் கேள்விக்கு, “வியூகங்கள் சார்ந்த தலைமை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். எந்தக் குழப்பமும் இல்லை, இது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. உரிய நேரத்தில் அவைத் தலைவர் குறித்து அறிவிக்கப்படும். நான் ஒரு சாதாரண தொண்டன். இதுவே என் பெருமை; அது போதுமானது. பதவி இரண்டாவதுதான்” என்றார்.
 
சசிகலா குறித்தான கேள்விக்குப் பதிலளித்த ஜெயகுமார், “எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் உண்மையான அதிமுக தொண்டர்கள் எங்கேயும் போகமாட்டார்கள். சாகும்வரை அதிமுகதான். சிறையிலிருந்து வந்தவர்கள் ஏன் ஜெயலலிதா நினைவிடம் செல்லவில்லை. தற்போது அரசியல் செய்ய வேண்டும் என்று நினைத்தவர்; மக்கள், தொண்டர்களால் புறக்கணிக்கப்பட்டவர் நினைவிடம் செல்கிறார். நீங்கள் எங்கே வேண்டுமானாலும் போலாம் யாரும் வர மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக