வெள்ளி, 22 அக்டோபர், 2021

அதிமுகவின் இளங்கோவன் அதிகார மையமானது எப்படி ?

எடப்பாடியுடன் இளங்கோவன்.
இளங்கோவன்.

BBC : இளங்கோவன் அதிமுகவின் அதிகார மையமானது எப்படி?  தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் வீடு மற்றும் அவருடன் தொடர்புடைய 23 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
யார் இந்த இளங்கோவன்?
தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவர், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர், சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துவருகிறவர் இளங்கோவன்.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வலது கரமாக செயல்பட்டுவரும் இளங்கோவன், தமிழ்நாடு கூட்டுறவு வங்கித் தலைவராக 2013 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்ததில் பல முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு பல மாவட்டங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆத்தூர் அருகே உள்ள புத்திர கவுண்டம்பாளையத்தில் உள்ள இளங்கோவன் வீடு மற்றும் சென்னை, சேலம், திருச்சி உள்ளிட்ட நகரங்களில் உள்ள இளங்கோவனோடு தொடர்புடைய 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இளங்கோவனின் சகோதரர் மற்றும் சகோதரி வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதே போல சேலம் மரவனேரி பகுதியில் உள்ள அவரது ஆடிட்டர் ஜெயப்பிரகாஷின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஆரம்ப காலம்

ஆத்தூர் அருகே உள்ள புத்திர கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன். காதல் திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். ஆரம்பத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்ததாரராக தன வாழ்க்கையை தொடங்கிய இளங்கோவன் அப்போதைய ஆத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் மஞ்சினி முருகேசனுடன் இணைந்து அரசியலில் செயல்பட்டு வந்தார்.

ஒரு கட்டத்தில் ஜெயலலிதாவின் பார்வை இளங்கோவன் மீது பட அதிமுக-வின் மாவட்ட செயலாளர் ஆனார். தொடர்ந்து 2௦௦6 ல் பனைமரத்துப்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். பின்னர் மாவட்ட செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டு எஸ் கே செல்வத்துக்கு வழங்கப்பட்டது.

உடனே இளங்கோவன் அப்போதய அமைப்பு செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடம் ஐக்கியமானார். பின்னர் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் பதவி கிடைக்க அவருடனே இருந்த இளங்கோவனின் கை சேலம் மாவட்டத்தில் ஓங்கியது.

இதை தொடர்ந்து சென்னையில் சசிகலாவின் உறவினர் டாக்டர் கலியமூர்த்தியுடன் இளங்கோவனுக்கு பழக்கம் ஏற்பட அவர் மூலமாக ஜெயலலிதா, சசிகலா, தினகரன், ஓ.பன்னீர்செல்வம் என அனைவரின் ஆதரவையும் பெற்று அதிமுகவின் உள்வட்டத்துகுள் பெரிய அளவில் வலம் வரத்தொடங்கினார்.
இளங்கோவன்.
ஒரு கட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் நம்பகமான உள்வட்டத்திலும் அவர் இருந்தார்.
தொடர்ந்து ஜெ பேரவை மாவட்ட செயலாளர் கூட்டுறவு வங்கி தலைவர் என அடுத்ததடுத்து பதவிகள் கிடைக்க, இளங்கோவன்அதிமுகவில் ஒரு அதிகார மையமானார்.

ஜெயலலிதா இறந்த பின் ஏற்பட்ட அரசியல் திருப்பங்களில் எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். இந்நிலையில் எம்எல்ஏக்களையும் அமைச்சர்களையும் கண்காணிக்கும் பொறுப்பு இளங்கோவனிடம் ஒப்படைக்கப்பட்டதாக அதிமுக உள்வட்டாரங்கள் கூறுகின்றன.

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது சேலம் மாவட்டத்தில் அதிமுக தேர்தல் பணிகளை கவனிக்கும் பொறுப்பு இளங்கோவனிடம் வழங்கப்பட்டது. சேலத்தில் உள்ள 11 சட்ட மன்ற தொகுதிகளில் 1௦ தொகுதியை அதிமுக கைப்பற்றியது. அதற்கான செலவுகளையும் இளங்கோவன் கவனித்துக்கொண்டதாகவும் திமுகவினர் கூறுகின்றனர். இது மேலும் அதிமுகவுக்குள் இளங்கோவன் செல்வாக்கு உயரக் காரணமானது.
புத்திர கவுண்டம்பாளையத்தில் தற்பொழுது பிரமாண்டமாக வீடு ஒன்றை கட்டி வருகிறார் இளங்கோவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக