சனி, 2 அக்டோபர், 2021

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பா.ஜனதாவுடன் கைகோர்ப்பு- சிவசேனா சொல்கிறது

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பா.ஜனதாவுடன் கைகோர்ப்பு- சிவசேனா சொல்கிறது

தினத்தந்தி :  காங்கிரஸ் கட்சியை வீழ்த்த அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பா.ஜனதாவுடன் கைகோர்த்து இருப்பதாக சிவசேனா தெரிவித்துள்ளது.
 மும்பை,  காங்கிரஸ் கட்சி ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் முதல்-மந்திரியாக இருந்த அமரிந்தர் சிங் உள்கட்சி பூசல் காரணமாக சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து மந்திரி சரண்ஜித் சிங் சன்னியை காங்கிரஸ் மேலிடம் முதல்-மந்தியாக நியமித்தது.
இந்தநிலையில் உட்கட்சி பூசலுக்கு முக்கிய காரணமாக கருதப்படும் நவ்ஜோத் சிங் சித்து கட்சியுடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக தனது மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.அதேபோல பதவி விலகிய அமரிந்தர் சிங்கும் காங்கிரசில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால் பஞ்சாப் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இது குறித்து சிவசேனா அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் நேற்று வெளிவந்த தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-
காங்கிரஸ் கட்சிக்கு ஒரு முழுநேர தலைவர் தேவை. தலையில்லாத உடலால் என்ன பயன்? காங்கிரஸ் நோய்வாய்ப்பட்டுள்ளது. அதற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் அந்த சிகிச்சை சரியானதா, இல்லையா என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

ராகுல் காந்தி பழைய மாளிகையில்(காங்கிரஸ்) ஏற்பட்டுள்ள கசிவுகளை சரிசெய்ய முயற்சி செய்கிறார். ஆனால் சில பழைய நிலப்பிரபுகள் புதியவர்களை வேலை செய்ய விடாமல் தடுக்கின்றனர். அவர்கள் மாளிகையில் பல பகுதிகளை உரிமை கோர தொடங்கி உள்ளனர். காங்கிரசின் பழைய மூத்த தலைவர்கள் சிலர் பா.ஜனதாவுடன் ரகசிய தொடர்பு வைத்துக்கொண்டு சொந்த கட்சியை வீழ்த்த விரும்புகின்றனர் என்பது இப்போது உறுதியாகி உள்ளது.

ஒரு நிலையான தளபதி இல்லை என்றால் கட்சி எப்படி போராடும்? என்று சில புத்திசாலித்தனமான காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அவர்களின் கோரிக்கையில் எந்த தவறும் இல்லை. இந்த கேள்விக்கான சரியான பதில் காந்தியின் குடும்பத்தில் உள்ளது. ஆனால் அவர்களில் யார் சரியாக இருப்பார்கள் என்பது தான் கேள்வியாக உள்ளது. காங்கிரஸ் தலைமை மீது உள்ள சந்தேகம் மற்றும் குழப்பம் களையப்பட வேண்டும்.

ராகுல்காந்தி ஒரு தலித் தலைவரை பஞ்சாபில் முதல்-மந்திரியாக தேர்வு செய்து ஒரு வலுவான நடவடிக்கையை எடுத்துள்ளார். ஆனால் நவ்ஜோத் சிங் சித்து அவருக்கு பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளார்.காங்கிரஸ் கட்சியில் வார்த்தைகளால் சுட்டுவீழ்த்தும் தலைவர்களுக்கு பஞ்சம் இல்லை என்பதால் சமீபத்தில் கட்சியில் இணைந்த சித்து மீது ராகுல் காந்தி அவ்வளவு நம்பிக்கை வைக்க வேண்டிய தேவை இல்லை.இதுபோன்று நிலையற்ற, கணிக்க முடியாத தலைவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் காங்கிரஸ் தனது சொந்த கட்சியில் பிரச்சினையை அதிகரித்துள்ளது.

பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரி அமரிந்தர் சிங் மற்றும் கோவாவின் முன்னாள் முதல்-மந்திரி லூசினோ பேலேரியோ போன்றவர்களுக்கு அந்தந்த மாநிலங்களில் முதல்-மந்திரி போன்ற உயர் பதவிகள் காங்கிரஸ் கட்சியால் வழங்கப்பட்டன. ஆனால் அவர்கள் கட்சியை விட்டு வெளியேறி இருக்கிறார்கள்.

இதேபோல காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது ஜிதின் பிரசாதா மத்திய மந்திரியாக ஆக்கப்பட்டார். இருப்பினும் அவர் பின்னர் பா.ஜனதாவில் இணைந்தார்.நாட்டில் பல ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் இருந்துள்ளது. தற்போது சில மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. இருப்பினும் பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பிரதமர் நரேந்திர மோடி பிரதமரான பிறகு அந்த கட்சி பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக