வெள்ளி, 1 அக்டோபர், 2021

பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்,தனிக்கட்சி? காங்.,கில் இருந்து விலகுவதாக அறிவிப்பு

 தினமலர் : புதுடில்லி :பஞ்சாப் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அமரீந்தர் சிங் பா.ஜ.,வில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ''நான் காங்.,கில் இருந்து விலக உள்ளேன்; ஆனால் பா.ஜ.,வில் இணையும் எண்ணமில்லை,'' எனக்கூறியுள்ளார்.
அதே நேரத்தில் அவர் தனிக்கட்சி துவங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பஞ்சாபில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இம்மாநில முதல்வராக பதவி வகித்து வந்த அமரீந்தர் சிங்குக்கு எதிராக, எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி துாக்கியதை அடுத்து, முதல்வர் பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார்.இதையடுத்து சரண்ஜித் சிங் சன்னி முதல்வராக பதவி ஏற்றார். புதிய அமைச்சரவையில் பொறுப்பேற்றுள்ள 18 அமைச்சர்களின் இலாகாக்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன.


கைகோர்ப்பு
பஞ்சாப் காங்., தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்ற முன்னாள் அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து, தன் தலைவர் பதவியை அதிரடியாக ராஜினாமா செய்தார். இது, காங்., வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அன்று, முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் டில்லி புறப்பட்டு சென்றார். அவர் பா.ஜ.,வில் இணைய உள்ளதாக பரபரப்பு ஏற்பட்டது.இந்நிலையில் டில்லி வந்த அமரீந்தர் சிங், மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித் ஷாவை அவரது இல்லத்தில் நேற்று முன் தினம் சந்தித்து பேசினார்.அப்போது விவசாயிகள் போராட்டம், எல்லை மாநிலமான பஞ்சாபின் பாதுகாப்பு நிலவரம் குறித்து அமித் ஷாவுடன் விவாதித்ததாக, அமரீந்தர் சிங் தெரிவித்தார். இந்த சந்திப்புக்கு பின் எந்த நேரத்திலும் அமரீந்தர் சிங் பா.ஜ.,வில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

இந்த பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமரீந்தர் சிங் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:காங்.,கில் நான் தொடர்ந்து அவமானப் படுத்தப்பட்டேன். இதுபோன்ற அவமானங்களை இதற்கு முன் சந்தித்தது இல்லை; அதை என்னால் ஏற்க முடியவில்லை. இதற்கு மேலும் காங்.,கில் தொடர என் நம்பிக்கையும், கொள்கையும் இடம் அளிக்கவில்லை. எனவே, காங்.,கில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். அதே நேரத்தில் பா.ஜ.,வில் இணையும் எண்ணமில்லை.
பஞ்சாபின் நலன் மற்றும் பாதுகாப்பை மனதில் வைத்து, என் அடுத்த கட்ட முடிவுகள் குறித்து சிந்தித்து வருகிறேன்.

பஞ்சாபின் எதிர்காலத்தை மனதில் வைத்து, மக்கள் ஓட்டளிக்க வேண்டும். எத்தனை கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டாலும், ஒரு கட்சியை பெரும்பான்மையாக வெற்றி பெறச் செய்வதே பஞ்சாப் மக்களின் வழக்கம். பஞ்சாபில் தவறான ஆட்சி அமைந்துவிட்டால், அது பாகிஸ்தானுக்கு சாதகமாக அமைந்துவிடும். பாக்., பயங்கரவாதிகள் நம் நாட்டிற்குள் அத்துமீறி நுழைவது அதிகரிக்கும்.பாக்., பயங்கரவாதிகளால் பஞ்சாபிற்கு ஆபத்து இல்லை என சிலர் கூறி வருகின்றனர். அவர்கள் தேச விரோத சக்திகளுடன் கைகோர்த்து உள்ளனர்.

சலசலப்பு
மூத்த தலைவர்களை காங்., தலைமை உதாசீனப்படுத்துகிறது. இது கட்சியின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. மூத்த தலைவர்களின் ஆலோசனைகளை பெற்று, அதை இளம் தலைவர்கள் நடைமுறைப்படுத்த வேண்டும்.மூத்த தலைவர் கபில் சிபல் வீடு தாக்கப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது. தலைமையால் ஏற்றுக் கொள்ள முடியாத கருத்துக்களை அவர் தெரிவித்ததால், அவரது இல்லம் தாக்கப்பட்டுள்ளது. சித்துவை பொறுத்தவரை அவருக்கு கூட்டம் கூட்ட தெரியுமே தவிர, அனைவரையும் அரவணைத்து செல்ல தெரியாது.இவ்வாறு அவர் கூறினார்.

சமரசம்
பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக அமரீந்தர் சிங் சொந்த கட்சி துவங்கி தேர்தலில் போட்டியிடுவார் என கூறப்படுகிறது.'பாக்., பிரதமர் இம்ரான் கானுக்கும், நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் நெருங்கிய நட்பு இருப்பதால், பஞ்சாப் போன்ற எல்லை மாநிலங்களில் சித்துவுக்கு முக்கிய பதவி வழங்குவது ஆபத்தானது' என, அமரீந்தர் சிங் ஏற்கனவே கருத்து தெரிவித்து இருந்தார்.இருவருமே முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் என்பதாலும், அமரீந்தரின் இந்த புகார் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மாநில பாதுகாப்பு விவகாரத்தை தன் தேர்தல் பிரசாரத்தின் முக்கிய அம்சமாக அமரீந்தர் கையில் எடுப்பார் என்றும் கூறப்படுகிறது.இதற்கிடையே பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங்கை சண்டிகரில் நவ்ஜோத் சிங் சித்து நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் சமரசம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.சித்துவின் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கப்பட்டதால், அவர் தன் ராஜினாமாவை திரும்பப் பெற்று, தலைவர் பதவியில் தொடர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்த சந்திப்புக்கு முன்னதாக தன் சமூக வலைதள பக்கத்தில் சித்து வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:தற்போது புதிய டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ள இக்பால் ப்ரீத் சிங் சஹோட்டா, அகாலி தளத்தின் பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான ஆட்சியில் சிறப்பு விசாரணை குழு அதிகாரியாக இருந்தார்.அப்போது பல்வேறு வழக்குகளில் பாதல் அரசு செய்த தவறுகளை மறைக்க அப்பாவிகளை சிக்க வைத்து, ஆளும் தரப்பை காப்பாற்றி உள்ளார்.இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

கபில் சிபலுக்கு எதிர்ப்பு தலைவர்கள் கண்டனம்
பஞ்சாப் காங்., உட்கட்சி குழப்பம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் காங்., தலைவர்கள் விலகல் உள்ளிட்டவை குறித்து நேற்று முன் தினம் கருத்து தெரிவித்த மூத்த காங்., தலைவரும், வழக்கறிஞருமான கபில் சிபல், 'காங்கிரஸ் கட்சிக்கு முழு நேர தலைவர் என ஒருவர் இல்லாத நிலையில், அனைத்து முடிவுகளையும் யார் எடுப்பது?' என, கேள்வி எழுப்பினார்.
இதனால் ஆத்திரமடைந்த காங்., தொண்டர்கள், டில்லியில் கபில் சிபல் வீட்டு முன் திரண்டு தாக்குதலில் ஈடுபட்டனர். அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதற்கு மூத்த காங்., தலைவர்கள் குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா உள்ளிட்ட, 'ஜி - 23' குழு என அழைக்கப்படும் அதிருப்தி குழு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 'இது திட்டமிட்ட ரவுடித்தனம்' என, அவர்கள் தெரிவித்தனர்.இதற்கிடையே இது குறித்து விவாதிக்க விரைவில் காங்., காரிய கமிட்டி கூட்டத்தை கூட்டவுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

அஜித் தோவலுடன் சந்திப்பு!
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை, பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் டில்லியில் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் நீடித்தது. அதன் பின், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டுக்கு அஜித் தோவல் புறப்பட்டு சென்றார்.
இந்த சந்திப்பின் போது, பஞ்சாப் மாநில பாதுகாப்பு நிலவரம் குறித்து, சில முக்கிய விபரங்களை அமரீந்தர் சிங் விளக்கியதாக கூறப்படுகிறது.

சத்தீஸ்கரிலும் சிக்கல்!
காங்., ஆட்சி நடக்கும் பஞ்சாபில் அடுத்தடுத்த அரசியல் திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில் சத்தீஸ்கரிலும் காங்., அரசுக்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது. மாநில முதல்வராக பூபேஷ் பாகேல் பொறுப்பேற்ற போது, இரண்டரை ஆண்டுகளுக்குப் பின், சுழற்சி முறையில் முதல்வர் பதவியை சிங் தியோவுக்கு வழங்க, காங்., தலைமை முடிவு செய்திருந்தது.
பாகேல் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் ஆக உள்ள நிலையில், முதல்வர் பதவியை அமைச்சர் சிங் தியோவுக்கு மாற்றி வழங்கக்கோரி, அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், காங்., - எம்.எல்.ஏ.,க்கள் 20 பேர் டில்லியில் முகாமிட்டுள்ளனர். ராகுலின் சத்தீஸ்கர் பயணம் குறித்து திட்டமிட வந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். எம்.எல்.ஏ.,க்களின் டில்லி பயணம், மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக