புதன், 6 அக்டோபர், 2021

பிரான்ஸ் திருச்சபை பாதிரியார்களால் 2,16,000 சிறாருக்கு பாலியல் கொடுமை: விசாரணை அறிக்கை

பாரிஸில் நடந்த ஒரு பிரார்த்தனை

BBC : 1950ஆம் ஆண்டு முதல் பிரான்சில் உள்ள கத்தோலிக்க பாதிரியார்களால் 2,16,000 சிறார்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாகியுள்ளனர் என்று இது தொடர்பான விசாரணையில் தெரியவந்துள்ளது.
2,900 முதல் 3,200 பேர் வரை சிறாரை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிய குற்றங்களில் ஈடுபட்டதாக திருச்சபை உறுப்பினர்களின் கொடுமைகள் தொடர்பாக விசாரிக்கும் குழுவின் தலைவர் ஜீன் மார்க் சாவே தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தி தமக்கு வலியை ஏற்படுத்துவதாக போப்பாண்டவர் பிரான்சிஸ் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
பள்ளி ஆசிரியர்கள் போன்ற திருச்சபையின் சாதாரண உறுப்பினர்கள் செய்த தவறுகளை கணக்கிட்டால் இந்த பாதிப்பு எண்ணிக்கை 3,30,000 ஆக உயரும் என்று விசாரணை அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
திருச்சபை அதன் நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களின் சங்கமான லா பரோல் லிபரேயின் (சுதந்திர பேச்சு) நிறுவனர் பிரான்சுவா டெவாக்ஸ், "இது நம்பிக்கைக்கு துரோகம், மன உறுதிக்கு துரோகம், குழந்தைகளுக்கு துரோகம்" என்று கூறினார்.


இது பிரான்சின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்திருப்பதாகவும் அவர் கூறினார். "திருச்சபையின் அனைத்துப் பொறுப்பிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீங்கள் இறுதியாக நிறுவன ரீதியிலான அங்கீகாரம் வழங்கியுள்ளீர்கள். இது ஆயர்கள் மற்றும் போப் ஆண்டவர் இன்னும் செய்யத் தயாராக இல்லாத ஒன்று." என்று அவர் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களின் சங்கமான லா பரோல் லிபரேயின் (சுதந்திர பேச்சு) நிறுவனர் பிரான்சுவா டெவாக்ஸ்

போப் கடந்த சில நாட்களில் வருகை தந்த பிரெஞ்சு ஆயர்களை சந்தித்த பிறகு இந்த அறிக்கை பற்றி அறிந்து கொண்டதாக வாடிகன் கூறியுள்ளது.
"பாதிக்கப்பட்டவர்களின் காயங்களுக்கு ஆழ்ந்த கவலையும், முன்வரும் துணிச்சலுக்கு நன்றியும் அவர் தெரிவித்தார்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த விசாரணை அறிக்கையின் வெளியீடு உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க திருச்சபை அதிகாரிகளுக்கு எதிரான பல கோரிக்கைகள் மற்றும் வழக்குகளைத் தொடர்ந்து நடந்திருக்கிறது.

சுயேச்சையான இந்த விசாரணை 2018 இல் பிரெஞ்சு கத்தோலிக்க திருச்சபையால் நியமிக்கப்பட்டது.

இது இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக நீதிமன்றம், காவல்துறை மற்றும் திருச்சபை பதிவுகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களிடமும் சாட்சிகளிடமும் தகவல்களைப் பெற்றது.

விசாரணையால் மதிப்பிடப்பட்ட பெரும்பாலான குற்றச்சாட்டுகள் பிரெஞ்சு சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர மிகவும் பழையவை எனக் கருதப்படுகின்றன.
'பாதிக்கப்பட்டவர்களை நம்பவில்லை'

ஏறக்குறைய 2,500 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கை, பாதிக்கப்பட்டவர்களில் "பெரும்பான்மையானவர்கள்" 10 முதல் 13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்று கூறியுள்ளது.

திருச்சபை பாலியல் கொடுமைகளைத் தடுக்கத் தவறியது மட்டுமல்லாமல், அது தொடர்பாக புகார் அளிக்கவும் தவறியது, சில தருணங்களில் பாலியல் வேட்டை நடத்துவோர் எனத் தெரிந்தே அவர்களுடன் குழந்தைகளைத் தொடர்பு கொள்ள வைத்திருக்கிறது என்று விசாரணை அறிக்கை கூறுகிறது.

"முழுமையான அலட்சியம், குறைபாடு, மவுனம், நிறுவன அளவிலான ஒட்டுமொத்த மறைப்பு போன்றவை நடந்திருக்கின்றன" என்று விசாரணையின் தலைவர் ஜீன்-மார்க் சாவே செய்தியாளர்களிடம் கூறினார்.

2000களின் முற்பகுதி வரை பாதிக்கப்பட்டவர்கள் மீது "கொடூரமான அலட்சியத்தை" திருச்சபை காட்டியது என்று அவர் கூறினார்.

"பாதிக்கப்பட்டவர்கள் நம்பப்படுவதில்லை, அவர்களின் குரல் கேட்கப்படுவதில்லை. அப்படிக் கேட்கப்பட்டாலும், நடந்தவற்றில் அவர்களுக்கும் பங்களித்திருக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது" என்று அவர் விளக்கினார்.
அறிக்கை குறித்து போப் ஆண்டவர் கவலை தெரிவித்துள்ளார்
கத்தோலிக்க திருச்சபையில் பாலியல் கொடுமை நடப்பது ஒரு தொடரும் பிரச்சனையாகவே உள்ளது என்றும் அவர் கூறினார்.

1,15,000 பாதிரியார்கள் மற்றும் பிற மதகுருமார்களில் மொத்தம் 3,200 பேருக்கு எதிரான ஆதாரங்களை விசாரணை ஆணையம் கண்டறிந்தது. இதுவும் இது அநேகமாக குறைத்து மதிப்பிடப்பட்டிருக்கலாம் என்று ஆணையம் கூறியுள்ளது.
"குடும்பம் மற்றும் நண்பர்களின் வட்டத்திற்குப் பிறகு, பாலியல் வன்முறை அதிகமாக இருக்கும் சூழல் கொண்டது கத்தோலிக்க திருச்சபை" என்று அறிக்கை கூறுகிறது.
பார்லஸ் எட் ரெவிவர் (பேசுங்கள், மீண்டும் வாழுங்கள்) என்ற பாதிக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவரான ஆலிவியர் சவிநாக், தனது 13 வயதில் ஒரு கத்தோலிக்க விடுமுறை முகாமின் இயக்குநரால் பாலியல் கொடுமைக்கு ஆளானார்.

கொடுமை இழைக்கப்படுவதற்கு முன்னதாக பாதிரியாரை "நல்லவர், அக்கறையுள்ள நபர்" என்று நினைத்ததாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் அவர் தெரிவித்தார்.

"வளர்ந்து வரும் நீர்க்கட்டி போன்ற, உடலிலும் ஆன்மாவில் உள்ள புற்றைப் போன்ற இதை நாங்கள் சுமந்து கொண்டிருக்கிறோம்" என்று அவர் கூறினார்.

பாலியல் கொடுமைக்கு ஆளானோரில் 60 சதவிகித ஆண்களும் பெண்களும் "தங்கள் உணர்வு மற்றும் பாலியல் வாழ்க்கையில் பெரும் பிரச்சினைகளை எதிர்கொண்டனர்" என்று விசாரணையில் கண்டறியப்பட்டிருக்கிறது.
இழப்பீடு கோரிக்கை

விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சில மட்டுமே குற்றவியல் வழக்குகள் தவிர்த்து, ஒழுங்கு நடவடிக்கை வரை சென்றிருக்கின்றன.

ஆனால் பெரும்பாலான கொடுமைகள் இப்போது நீதிமன்றங்கள் வழியாக வழக்கு தொடுக்க முடியாத அளவுக்கு பழையதாகிவிட்டன. இருப்பினும் நடந்தவற்றுக்கு திருச்சபை பொறுப்பேற்பதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் வேண்டும் என விசாரணை அறிக்கை கூறியிருக்கிறது.

நிதி இழப்பீடு பாதிக்கப்பட்டவர்கள் அனுபவித்த அதிர்ச்சிக்கு நிவாரணமாக அமையாது என்றாலும், "அங்கீகார செயல்முறைக்கு அது இன்றியமையாதது" என்று அறிக்கை கூறுகிறது.
பிரார்த்தனை

பாதிக்கப்பட்டவர்களுக்கு "நிதி அளிக்கும்" திட்டத்தை பிரான்ஸ் திருச்சபை ஏற்கெனவே அறிவித்திருக்கிறது.
பாதிரியார்கள் மற்றும் பிற மதகுருமார்களுக்கு பயிற்சி அளிப்பது உள்ளிட்ட முறைகேடுகளை தடுப்பதற்கான தொடர் பரிந்துரைகளையும் விசாரணை அறிக்கை பட்டியலிட்டிருக்கிறது.

"திருச்சபையின் தெளிவான மற்றும் உறுதியான பதில்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்று பாதிக்கப்பட்டோரின் ஆறு சங்கங்கள் கூறியிருக்கின்றன.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் துயர அனுபவங்கள் "நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு இருக்கின்றன" என்று இந்த விசாரணை அறிக்கையைக் கோரிய பிரான்சின் ஆயர்கள் கூட்டமைப்பின் தலைவரான பேராயர் எரிக் டி மவுலின்ஸ்-பியூஃபோர்ட் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு "நிதி அளிக்கும்" திட்டத்தை பிரான்ஸ் திருச்சபை ஏற்கெனவே அறிவித்திருக்கிறது. அது அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது.

பாலியல் கொடுமைகளை வெளிப்படையான குற்றமாக்கும் வகையில் கத்தோலிக்க சட்டங்களை போப் ஆண்டவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் மாற்றியமைத்தார். இது கடந்த 40 ஆண்டுகளில் மிகப் பெரிய திருத்தமாக அமைந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக