சனி, 18 செப்டம்பர், 2021

ராகுல் காந்தியால் மோடியை தோற்கடிக்க முடியாது - திரிணாமுல் காங்கிரஸ் MP

 News18 Tami  : ராகுல் காந்தியை நீண்ட காலமாக கவனித்து வருகிறேன், அவர் மோடிக்கு மாற்றான தலைவராக தன்னை மேம்படுத்திக் கொள்ளவில்லை
ராகுல் காந்தி பிரதமர் மோடியை தோற்கடிக்கும் திறன் படைத்த தலைவர் கிடையாது, 2024 தேர்தலில் மம்தா பானர்ஜி தான் எதிர்கட்சிகளின் முகமாக இருக்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்.பி பேசியுள்ளார்.
பிரதமர் மோடியின் 71வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், பிரதமர் மோடிக்கு மாற்றான தலைவர் ராகுல் காந்தி இல்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி ஒருவர் பேசியுள்ளது அரசியல் அரங்கில் சூட்டை கிளப்பியுள்ளது.
2014, 2019 என தொடர்ச்சியாக இருமுறை நாடாளுமன்ற தேர்தல்களில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்த சூழலில் 2024 நாடாளுமன்ற தேர்தல் வியூகங்கள் குறித்து இப்போதே பேச்சுக்கள் கிளம்பியுள்ளன. 2024 தேர்தல் குறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சுதிப் பந்த்யோபத்யாய் கூறுகையில், 2024 தேர்தலில் நரேந்திர மோடிக்கு எதிரான எதிர்கட்சிகளின் தலைவராக மம்தா பானர்ஜி இருக்க வேண்டும் என கூறினார்.

அவர் கூறியதாவது, “மம்தா தான் எதிர்கட்சிகளின் ஒருங்கிணைந்த தலைவராக இருக்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. நான் ராகுல் காந்தியை நீண்ட காலமாக கவனித்து வருகிறேன், அவர் மோடிக்கு மாற்றான தலைவராக தன்னை மேம்படுத்திக் கொள்ளவில்லை. நான் காங்கிரஸ் இல்லாத ஒரு கூட்டணி குறித்து பேசவில்லை. ஒட்டுமொத்த தேசமும் மம்தாவை விரும்புகிறது, அவரே எதிர்கட்சிகளின் முகமாக இருப்பார், அதை மையப்படுத்தியே நாங்கள் பிரச்சாரம் மேற்கொள்வோம்.

ராகுல் காந்தியால் மோடியை வீழ்த்த முடியாது, அதே நேரத்தில் கம்யூனிஸ்ட்களும் மதிப்பிழந்து போயிருக்கின்றனர்.” இவ்வாறு அவர் பேசினார்.

மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜி கட்சி பெருவாரியான வெற்றிக்கு பிறகு, அவர் தேசிய தலைவராக மாறுவதற்காக காய்நகர்த்தி வருகிறார். அவரின் கட்சித் தலைவர்கள் பலரும் பிரதமர் மோடிக்கு மாற்றானவர் மம்தா என பேசிவருகின்றனர். அதே நேரத்தில் எதிர்கட்சிகளின் ஒற்றுமையே தனக்கு முக்கியம் என மம்தா கூறியுள்ளார்.

எதிர்கட்சிகளி ஒற்றுமை குறித்து மம்தா பேசிவரும் நிலையில் அவரின் கட்சித் தலைவர் ஒருவர் மம்தாவை முன்னிலைப்படுத்தி காங்கிரஸ் தலைவரை விமர்சித்துபேசியிருப்பது மிக முக்கிய அரசியல் முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக