வியாழன், 16 செப்டம்பர், 2021

இலங்கையில் தமிழ் அரசியல் கைதியை துப்பாக்கி முனையில் மிரட்டிய அமைச்சர் பதவி விலகல்

லொஹான் ரத்வத்த

BBC : அநுராதபுரம் சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதியொருவரை அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவத்தை அடுத்து, எழுந்த கண்டனங்களினால் சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பதவி விலகியுள்ளார்.
தான் தொடர்பில் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை அடுத்து, அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தாத நோக்கில், இன்று முதல் தனது சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு ராஜாங்க அமைச்சு பொறுப்பை ராஜினாமா செய்வதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பியுள்ள பதவி விலகல் கடிதத்தில் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலையில் நடந்தது என்ன?
அநுராதபுரம் சிறைச்சாலையில் தனது சகாக்களுடன் சென்ற சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, தமிழ் அரசியல் கைதியை முழந்தாளிடச் செய்து, அவரது தலையில் துப்பாக்கி வைத்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த சம்பவம் கடந்த 12ம் தேதி இரவு வேளையில் இடம்பெற்றதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது ட்விட்டர் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.

தனது தனிப்பட்ட துப்பாக்கியை காண்பித்து, தமிழ் அரசியல் கைதிகளை கொலை செய்வதாக அச்சுறுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கூறியிருந்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மிக நீண்ட நாட்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமையினால், அவர்கள் பெரும் அழுத்தத்தை எதிர்நோக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில தமிழ் அரசியல் கைதிகள் பல தசாப்தங்களாக எந்தவித ஆதாரங்களும் இல்லாமலும், குற்றச்சாட்டுக்கள் இல்லாமலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் வெளியிடப்பட்ட இந்த பதிவை அடுத்து, பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்பை வெளியிட ஆரம்பித்திருந்தனர்.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமை செயற்பட்டாளர்கள் என பலரும் தமது எதிர்ப்பை வெளியிட ஆரம்பித்திருந்தனர்.

இந்த நிலையில், அதிகாரபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இத்தாலி சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தொலைபேசியூடாக லொஹான் ரத்வத்தவை தொடர்புக் கொண்டு, பதவி விலகுமாறு வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், லொஹான் ரத்வத்த, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு, தனது பதவி விலகல் கடிதத்தை இன்று அனுப்பியுள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கை

வெலிகடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலை வளாகத்தில் தன்னால் நடத்தப்பட்ட சம்பவத்திற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு, சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு ராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து லொஹான் ரத்வத்த பதவி விலகியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றின் ஊடாக இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள நிலையில், அதனை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக