திங்கள், 27 செப்டம்பர், 2021

வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் பாரத் பந்த் - வடமாநிலங்கள் முடங்கின

 மாலைமலர் : விவசாயிகள் போராட்டத்துக்கு காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி, ராஷ்ட்ரீய ஜனதாதளம், ஆம்ஆத்மி, கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து இருந்தன.
புதுடெல்லி: மத்திய அரசு விவசாயிகள் தொடர்பான 3 வேளாண்மை சட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றியது.
இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிராக இருப்பதாக கூறி அவற்றை வாபஸ் பெற வற்புறுத்தி விவசாயிகள் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கினார்கள்.
இந்த தொடர் போராட்டம் ஓராண்டை எட்டியுள்ள நிலையில் இன்று விவசாயிகள் பாரத்பந்த் போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்தனர். 40 விவசாய சங்கங்களை உள்ளடக்கிய சம்யுக்தா கிஷான் மோர்ச்சா அமைப்பு சார்பில் பந்த் போராட்டம் அறிவிக்கப்பட்டது.


காலை 6 மணியில் இருந்து மாலை 4 மணிவரை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் அறிவித்து இருந்தனர். இந்த போராட்டத்துக்கு காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி, ராஷ்ட்ரீய ஜனதாதளம், ஆம்ஆத்மி, கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து இருந்தன.

போராட்டக்காரர்கள் அறிவித்திருந்தபடி இன்று காலை 6 மணிக்கு முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது. டெல்லியை சுற்றியுள்ள முக்கிய சாலைகள் அனைத்திலும் விவசாயிகள் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லியில் இருந்து மீரட் செல்லும் சாலையில் காசிபூரில் விவசாயிகள் நூற்றுக்கணக்கானோர் சாலைகளில் அமர்ந்தனர். இது டெல்லியில் இருந்து உத்தரபிரதேசம் செல்லும் முக்கிய எக்ஸ்பிரஸ் சாலை ஆகும்.

அதில் விவசாயிகள் அமர்ந்ததால் அந்த சாலையில் முற்றிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

டெல்லி மற்றும் அரியானாவில் கடைகள், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் ஆகியவை மூடப்பட்டன.

அரியானாவில் இருந்து டெல்லி நகருக்குள் நுழையும் சிங்கு சாலையிலும் விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதேபோல சம்பு எல்லை, அமிர்தசரஸ் சாலை, டெல்லி- அம்பாலா சாலை ஆகியவையும் முடக்கப்பட்டன.

இதன் காரணமாக டெல்லியில் வாகன போக்குவரத்து நெரிசல் அதிகமாகியது. இதனால் டெல்லி நகரம் திணறியது. இதற்கு முன்பு டெல்லி நகருக்குள் நுழைந்து விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.

அப்போது கடும் வன்முறைகள் நிகழ்ந்தன. அதேபோன்று இப்போதும் விவசாயிகள் நுழைந்து விடாமல் தடுக்க நகர எல்லை பகுதிகள் முழுவதிலும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டு இருந்தது.

விவசாயிகள் டெல்லியில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்களை முற்றுகையிட வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டதால் பண்டிட்ராம் சர்மா ரெயில் நிலைய நுழைவு வாயில் மூடப்பட்டது. இதேபோல ஒரு சில மெட்ரோ ரெயில் நிலையங்களும் மூடப்பட்டு இருந்தன.


பஞ்சாபில் இருந்து அரியானா செல்லும் அனைத்து சாலைகளும் முடக்கப்பட்டு இருந்தன.

உத்தரபிரதேச மாநிலத்தின் மேற்கு பகுதியில் பல இடங்களிலும் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. இதனால் அங்கும் கடுமையான பாதிப்புகள் இருந்தன.

பீகார் மாநிலத்தில் ராஷ்ட்ரீய ஜனதாதளம் சார்பில் பல இடங்களிலும் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக