செவ்வாய், 21 செப்டம்பர், 2021

பொறியியல் படிப்புக்கு தேர்வான மாணவர்களின் கல்வி கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும் - மு.க.ஸ்டாலின்

 மாலைமலர் : தமிழகத்தின் இளைய சக்தி அனைத்தும் உயர் கல்வியை அடைந்ததாக மாற்றுவது தான் இந்த அரசின் உயரிய இலக்கு என முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பொறியியல் படிப்புக்கு தேர்வான மாணவர்களின் கல்வி கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும் - மு.க.ஸ்டாலின்
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத சிறப்பு உள் ஒதுக்கீட்டின் அடிப்படையில் பொறியியல் படிப்புக்கு தேர்வு செய்யப்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கான சேர்க்கை ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்றது.
இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று 50 மாணவ-மாணவிகளுக்கு பொறியியல் படிப்பில் சேருவதற்கான ஆணைகளை வழங்கினார்.விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு தொழில் கல்வியில் சேர்வதற்காக 7.5 சதவிகித இடஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு வழங்கி உள்ளது.
அந்த அடிப்படையில் தொழிற்கல்வி படிப்புகளில் சேர்வதற்கான ஆணைகளை பெறுவதற்காக இங்கு வந்திருக்கும் மாணவ, மாணவியர் அனைவர்க்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொறியியல் பட்டதாரியாக ஆக வேண்டும் என்ற உங்களது கனவு நிறைவேறும் நாள் இது. உங்கள் கனவு நிறைவேறுவதன் மூலமாக உங்களது பெற்றோரது கனவும், உங்களது குடும்பத்துக்கனவும் நிறைவேறக் கூடிய நாளாக இது அமைந்திருக்கிறது.

போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் நமக்கு இடம் கிடைக்குமா? அதுவும் அரசுக்கல்லூரியில் இடம் கிடைக்குமா என்ற ஏக்கம் சில மாதங்களுக்கு முன்பு வரை உங்களுக்கு இருந்திருக்கும். அந்த ஏக்கம் மறைந்து, ஏற்றம் பிறக்கும் நாள் தான் இந்த நாள் என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

இந்த நாட்டின் நிலையான செல்வம் பொறியியல் பட்டதாரிகளும், மருத்துவ நிபுணர்களும், கல்வியாளர்களும் தான் என்று அண்ணா குறிப்பிட்டார்.அதனால் தான் அறிஞர் அண்ணா அதிகமாக மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் பேசினார். கல்விச் செல்வம், கடைசி மனிதனுக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைத்தார்.

திராவிட இயக்கத்தின் நோக்கமே அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் அவர் தகுதிக்கேற்ற வேலை தரப்பட வேண்டும் என்பது தான். இந்த இயக்கமே அதற்காகத் தான் உருவாக்கப்பட்டது. ஆட்சியைப் பிடித்தபிறகு அந்த நோக்கத்தை நிறைவேற்றும் காரியங்களையே அதிகம் செய்தும் வருகிறது, நிறைவேற்றியும் வருகிறது என்பது உங்களுக்கு தெரியும்.

தமிழகத்தின் இளைய சக்தி அனைத்தும் உயர் கல்வியை அடைந்ததாக மாற்றுவது தான் இந்த அரசின் உயரிய இலக்கு ஆகும். கல்லூரிச் சாலைக்குள் செல்லும் மாணவர்களுக்கு மூன்று முக்கிய இலக்குகள் இருக்க வேண்டும் என்று புரட்சியாளர் லெனின் சொன்னார்.

படிப்பு, படிப்பு, படிப்பு ஆகிய மூன்றையும் தான் இலக்காகச் சொன்னார். மூன்று முறை சொன்னதற்குக் காரணம், படிப்புக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதற்காகத் தான்.

நீங்கள் இந்த இடத்துக்கு வந்திருக்கிறீர்கள் என்றால் அதற்காக உங்கள் வாழ்க்கையில் எவ்வளவு எல்லாம் சிரமப்பட்டு இருப்பீர்கள் என்பதை நான் அறிவேன்.உங்களை இந்த பதினேழு வயது வரைக்கும் படிக்க வைக்க உங்கள் பெற்றோர் எவ்வளவு சிரமப்பட்டு இருப்பார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். அவர்கள் தங்களது சுகங்களையும், சிரமங்களையும் மறந்து, ஒதுக்கி வைத்துவிட்டு, உங்களை முன்னேற்றுவதற்கு வழிவகை செய்து கொடுத்துள்ளார்கள்.

நம் பிள்ளை பெரிய கல்லூரிக்குள், பெரிய படிப்பு படிக்கப் போகிறான். பெரிய ஆளாய் வருவான்.பெரிய வேலைக்கு போவான் என்ற நம்பிக்கையுடன் உங்களை அனுப்பி வைத்துள்ளார்கள். அவர்களது நம்பிக்கையைக் காப்பவர்களாக நீங்கள் உங்களை இன்னும் சிறப்பாக உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று உரிமையோடு, அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

நாட்டின் முதல்- அமைச்சராக மட்டுமல்ல உங்களது அன்புச் சகோதரனாக நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். பள்ளிக் காலத்தில் இருந்து கல்லூரிக் காலத்துக்குள் நுழைகிறீர்கள். உங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்குச் செல்கிறீர்கள். சிறந்த வேலை வாய்ப்பை நீங்கள் பெற வேண்டும். வேலை தேடுபவர்களாக மட்டுமல்ல, வேலை கொடுப்பவர்களாகவும் உயர வேண்டும்.

முதலமைச்சர் முக ஸ்டாலின் அரசுப்பள்ளி மாணவி ஒருவருக்கு பொறியல் படிப்பிற்கான சேர்க்கை ஆணைகளை வழங்கிய காட்சி

அதற்காக உங்களை முழுமையான திறமைசாலிகளாக, பன்முக ஆற்றல் உள்ளவர்களாக வளர்த்துக் கொள்ள வேண்டும். தொழிற்கல்வி என்பதை பட்டம் பெறும் கல்வியாக மட்டும் கருதாதீர்கள். உங்களது தொழில் அறிவை கூர்மையாக்கவும் அதை பயன்படுத்த வேண்டும்.

உங்களில் பலரும் நாளைய தினம் சொந்தமாக ஏதாவது தொழில் தொடங்கலாம். அறிவுடன் சேர்ந்து அறிவின் கூர்மையும் வேண்டும். எதனையும் அறிவியல் பார்வையுடன் அணுகுபவர்களாக நீங்கள் இருக்க வேண்டும். இந்தக் கல்விச் செல்வம் தான் என்றும் அழியாத செல்வம் ஆகும்.

இத்தகைய அழியாத அறிவுச் செல்வமானது அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதே இந்த அரசின் நோக்கமாகும். அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களும் உயர் கல்வி நிலையங்களுக்குள் நுழைய வேண்டும்.

கிராமப்புற மாணவர்களும் நகர்ப்புறங்களில் இருக்கும் மிகப்பெரிய கல்வி நிலையங்களில் சேர வேண்டும். அதற்காக ஏராளமான திட்டங்களை கழக ஆட்சி அமையும் போதெல்லாம் நிறைவேற்றினோம்.

மருத்துவம், பொறியியல் படிப்புகளில் கிராமப்புற மாணவர்கள் நுழைய, நுழைவுத்தேர்வு தடையாக இருக்கிறது என்பதை அறிந்த அன்றைய முதல்வர் கலைஞர் அதனை ரத்து செய்தார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

இன்று நீட் தேர்வுக்கு எதிராக இந்த அரசும் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறது. சமூகநீதி உத்தரவுகளால் தான் சமநிலைச் சமுதாயம் அமைப்பதற்கான அடித்தளம் இடப்படுகிறது.

அரசு பள்ளிகளில் படிப்பவர்களில் 69 சதவிகிதம் பேர் கிராமப்புற மாணவர்கள் தான். அந்த வகையில் பார்த்தால் கிராமப்புறக் கல்வியின் மேம்பாட்டுத்திட்டமாக இது அமைந்துள்ளது. அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு பொறியியல், வேளாண்மை, கால் நடை மருத்துவம், மீன்வளம், சட்டம் போன்ற தொழிற் கல்விபடிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், 7.5 சதவிகிதம் இடங்கள்முன்னுரிமையின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய இந்த அரசால் கடந்த சட்ட மன்ற கூட்டத்தொடரில் சட்டம் இயற்றப்பட்டது.

அந்த அடிப்படையில் தான் நீங்கள் கல்விச் சாலைகளுக்குள் நுழைகிறீர்கள். அரசுப்பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகள், நகராட்சிப் பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகள், கள்ளர் சீர்திருத்தப்பள்ளிகள், வனத்துறைப் பள்ளிகள் மற்றும் அரசுதுறைகளினால் நிர்வகிக்கப்படும் பிற பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற மாணாக்கர்கள் இந்த இடஒதுக்கீட்டின் கீழ் பயன்பெறுகிறார்கள்.

நடப்பு கல்வி ஆண்டில், இந்த சிறப்பு உள்ஒதுக்கீட்டு மூலம் பொறியியல் படிப்பு களில்சுமார் 10,000 அரசு பள்ளி மாணாக்கர்கள் பயன்பெறுவர். அதேபோல, அரசு பள்ளிகளில் பயின்ற சுமார் 350 மாணவர்கள் வேளாண்மை, கால்நடை மருத்துவம், மீன்வளம் மற்றும் சட்டப் படிப்புகளிலும் பயன்பெறுவார்கள்.

இந்த மாணவர்கள் மூலமாக, அவர்களது குடும்பமும், அவர்களது ஊரும் முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச் செல்லப்படுகிறது. இதன் மூலமாக அவர்களது தலைமுறை தலைநிமிர்ந்து நிற்கப்போகிறது. அதன் மூலமாக இந்த மாநிலம் பயனடையப்போகிறது. இப்படிப்பட்ட நிலையில் உங்களுக்கு கல்வி ஆணை வழங்குவதை நான் எனக்கு கிடைத்த பெருமையாகக் கருதுகிறேன்.

நாட்டுக்கு பெருமை ஏற்படுத்தித் தருபவர்களாக நீங்கள் வளருங்கள், வாழுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். கல்வி ஆணையைக் கொடுத்து ஒரு தலைமுறையை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்வதன் மூலமாக கிடைக்கும் பெருமை என்பது மிகப் பெரியது.

காமராஜர் காலம் என்பது பள்ளிக்கல்வித்துறையின் பொற்காலமாகச் சொல்லப்படுகிறது. இன்றும் சொல்கிறோம். நம்முடைய தலைவர் கலைஞர் ஆட்சி காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலமாகப் போற்றப்படுகிறது.

இந்த ஆட்சி காலம் உயர்கல்வி, தொழிற்கல்வி, ஆராய்ச்சிக் கல்வியின் பொற்காலமாக மாற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இன்னும் சில ஆண்டுகள் கழித்து, எங்கோ ஒரு ஊரில் என்னைச் சந்தித்து, நீங்கள் கொடுத்த அரசாணையால் கல்வி பெற்ற நான், மிகப் பெரிய நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன், சொந்தமாக தொழில் செய்கிறேன் என்று நீங்கள் சொல்வீர்களானால் அதை விட எனக்கு மகிழ்ச்சி இருக்க முடியாது.

இந்த 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தொழிற்படிப்புகளில் கல்லூரியில் சேரக்கூடிய மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்கள் மனம் மகிழக்கூடிய வகையில் ஒரு செய்தியை, ஒரு அறிவிப்பை மகிழ்ச்சியோடு வெளியிடுகிறேன்.

அது என்னவென்றால், அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் தொழிற்கல்லூரிகளில் சேரும் மாணவர்களுடைய கல்விக்காக ஆகக்கூடிய செலவு கல்விக் கட்டணம், விடுதிக்கட்டணம், ஏன் கலந்தாய்வுக் கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் இந்த அரசு ஏற்றுக்கொள்ள முன்வந்திருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.  இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, மா. சுப்பிரமணியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ், தொழில் நுட்பக்கல்வி இயக்குநர் லட்சுமி பிரியா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக