புதன், 8 செப்டம்பர், 2021

நனையும் மாஸ்க்: திணறும் மாணவர்கள்: அறிவாரா அன்பில் மகேஷ்?

 மின்னம்பலம் : முழு ஆண்டு பொதுத் தேர்வுக்குக் கூட பயப்படாத மாணவர்களும் பெற்றோர்களும் இப்போது மூன்றாவது அலையை பற்றிய ஒரு வித பயத்தோடே கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளி சென்று வருகிறார்கள்.
சில நாட்களிலேயே மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று என்று செய்திகள் வர ஆரம்பித்துவிட்டன. இதுகுறித்து கருத்து தெரிவித்த மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தொற்று பள்ளிக்கு வந்ததால் ஏற்பட்டிருக்காது. பள்ளிக்கு வருவதற்கு முன்பே ஏற்பட்டிருக்கும்” என்று கூறினார்.
அதன் பிறகு, “தொற்று கண்டறியப்பட்ட பள்ளிகள் சீல் வைக்கப்படும்” என்கிறார். 9,10,11,12 மாணவர்களுக்கு மட்டுமே இப்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் , “தொடக்கப் பள்ளிகளையும் திறக்கலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்படும்” என்று பேட்டி தருகிறார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.

அமைச்சர்கள், அரசியல் வாதிகள் எல்லாம் இப்படி ஒவ்வொரு நாளும் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்க காலை 7.30 முதல் எட்டு மணிக்குள் மாஸ்க்கை மாட்டிக் கொண்டு பேருந்து பிடித்து பள்ளி சென்று மாலை 4.30- 5 மணிக்கு வீடு திரும்பும் வரை மாஸ்க்கோடு இருக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் பதின்மவயது மாணவ மாணவிகள்.

இந்த நிலையில் மாணவிகளின் அவதியைக் குறிப்பிட்டு தமிழ்நாடு அரசுக்கு முக்கிய வேண்டுகோள் ஒன்றை முன் வைத்துள்ளார் எழுத்தாளரும், கவிஞரும் அதையெல்லாம் தாண்டி ஆசிரியருமான சுகிர்தா ராணி.

“காலை எட்டே முக்கால் மணியிலிருந்தே மாணவர்களும் ஆசிரியர்களும் பள்ளிக்கு வரத் தொடங்குகிறார்கள்.பள்ளி மாலை 4.30 மணிக்கு முடிகிறது.எனவே சுமார் ஏழு மணி நேரமாக முகக் கவசத்தோடு ஆசிரியர்களும் மாணவர்களும் இருக்க வேண்டியுள்ளது.வியர்வையின் காரணமாக முகக் கவசம் நனைந்து விடுகிறது.

எனவே மூச்சுத் திணறலாக இருக்கிறது.மாணவர்கள் சிரமப் படுகிறார்கள். ஒரே முகக் கவசத்தை அணிந்தபடி ஏழு மணி நேரம் இருப்பது ஆரோக்கியமானதா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. மாஸ்க்கோடு சுமார் 5 மணி நேரம் ஆசிரியர்களால் தொடர்ந்து பாடம் நடத்த இயலவில்லை.மிகச் சத்தமாகப் பேச வேண்டியுள்ளது வாரத்திற்கு ஆறு நாட்கள் பள்ளி வேலை நாட்கள் வேறு.மாணவர்கள் மிகவும் சோர்ந்து விடுகிறார்கள். எனவே தமிழக அரசும் கல்வித் துறையும் பள்ளியின் நேரத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தான் பள்ளியில் கண்டுணர்ந்த காட்சியை இன்று (செப்டம்பர் 7) பதிவு செய்திருக்கிறார் சுகிர்தா ராணி.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இதுபற்றி பரிசீலனை செய்வாராக!

-ஆரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக