புதன், 15 செப்டம்பர், 2021

வானதி சீனிவாசன் மகன் ஆதர்ஷ் சென்ற கார் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்து!

 விகடன் -நவீன் இளங்கோவன் -க .தனசேகரன் :  சேலம் பட்டர்ஃப்ளை மேம்பாலத்தில் அதிவேகமாக வந்த கார், நிலைதடுமாறி தலைகுப்புறக் கவிழ்ந்திருக்கிறது.
கோவை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனின் மகன் ஆதர்ஷ் (22). இவர் நேற்றிரவு வானதி சீனிவாசனை ரயில் மூலமாக சென்னைக்கு அனுப்பிவைத்துவிட்டு, கோவையிலிருந்து சென்னைக்கு மாருதி பலீனோ காரில் கிளம்பியிருக்கிறார்.
இரவு 11:30 மணியளவில் சேலம் கொண்டலாம்பட்டி பகுதியிலுள்ள பட்டர்ஃபிளை மேம்பாலத்தில் வந்தபோது, ஆதர்ஷ் ஓட்டிவந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தின் தடுப்புச் சுவர் மீது மோதியிருக்கிறது.
இதில் கார் தலைகீழாகக் கவிழ்ந்து, சிறிது தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டிருக்கிறது.


இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அன்னதானப்பட்டி போலீஸார், கடும் சேதமடைந்து கிடந்த காரில் இருந்த ஆதர்ஷை மீட்டனர். அதன் பிறகு நடைபெற்ற விசாரணையில்தான் விபத்தில் சிக்கிய ஆதர்ஷ், வானதி சீனிவாசனுடைய மகன் என்பது போலீஸாருக்குத் தெரியவந்திருக்கிறது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக எவ்விதக் காயமும் இன்றி ஆதர்ஷ் உயிர் தப்பினார். இதனால் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் விபத்துக்குள்ளான கார் சாலையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, அன்னதானப்பட்டி காவல் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இந்த விபத்து நடந்த உடனேயே ஆதர்ஷ், அவருடைய அம்மா வானதி சீனிவாசனுக்கு போனில் தகவலைச் சொல்லியிருக்கிறார். உடனே சேலத்தில் இருந்த பாஜக நிர்வாகிகளை வானதி, சம்பவ இடத்துக்கு அனுப்பிவைத்திருக்கிறார். அதன் பிறகு சேலத்திலுள்ள கே.என்.ராவ் மருத்துவமனைக்கு ஆதர்ஷை அழைத்துச் சென்ற பாஜக-வினர், அங்கு பரிசோதனையில் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை எனத் தெரிந்த பிறகு மற்றொரு காரை வரவழைத்து சென்னைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக