வியாழன், 16 செப்டம்பர், 2021

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்குச் சொந்தமான இடங்களில் சோதனை- முக்கிய ஆவணங்கள் சிக்கின

மாலைமலர் : அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது தொடர்ச்சியாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்தி வருவது அரசியல் அரங்கில் பரபரப்பான பேச்சாக மாறி உள்ளது.
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்குச் சொந்தமான இடங்களில் சோதனை- முக்கிய ஆவணங்கள் சிக்கின
சென்னை : கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாக அமைச்சர்கள் சொத்துக்களை குவித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடத்தி வருகிறார்கள்.
கடந்த ஜூலை மாதம் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டிலும், கடந்த மாதம் (ஆகஸ்டு) முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.இந்த நிலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை சோதனையை தொடங்கியுள்ளனர்.
கே.சி.வீரமணி கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகவும், பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து உள்ளார்.

இந்த காலக்கட்டங்களில் கே.சி.வீரமணி வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்து உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதன் அடிப்படையில் வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் கே.சி.வீரமணி மீது வழக்குப்பதிவு செய்தனர். ஊழல் தடுப்பு சட்டம், வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்தது, தனது அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தியது என்பது உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளில் கே.சி.வீரமணி மீது வழக்குப் போடப்பட்டது.

இதன் அடிப்படையில் தான் கே.சி.வீரமணியின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான அலுவலகங்கள், நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்று வருகிறது.

கே.சி.வீரமணியின் சொந்த ஊர் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகில் உள்ள எடையாம்பட்டி ஆகும். அமைச்சராக இருந்த காலத்தில் கே.சி.வீரமணி தனது சொந்த மாவட்டமான திருப்பத்தூர் உள்ளிட்ட பல இடங்களில் தனது வருமானத்துக்கு அதிகமான சொத்துக்களை வாங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கே.சி.வீரமணி பத்திரப்பதிவுத்துறை அமைச்சரான பிறகு பல்வேறு இடங்களில் முறைகேடாக சொத்துக்களை வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

ஜோலார்பேட்டை காந்தி ரோட்டில் உள்ள வீட்டில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வசித்து வருகிறார். இன்று காலை 6.30 மணிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. ராஜேஷ் தாஸ் தலைமையிலான குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர். அவர்கள் வீட்டில் இருந்த கே.சி.வீரமணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கே.சி.வீரமணியின் சகோதரர்கள் கே.சிஅழகிரி, கே.சி. காமராஜ் ஆகியோர் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்று வருகிறது.

ஜோலார்பேட்டை சோலையூர் பகுதியிலுள்ள அ.தி.மு.க. நகர செயலாளர் சீனிவாசன் வீட்டிலும் சோதனை நடந்தது.

தாமலேரி முத்தூரில் உள்ள ஒன்றிய செயலாளர் ரமேஷ், நாட்டறம்பள்ளி மல்லகுண்டா கிராமத்திலுள்ள ஒன்றிய செயலாளர் ராஜா, திருப்பத்தூரில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ., கே.ஜி ரமேஷ், ஏலகிரி கிராமத்தில் உள்ள அ.தி.மு.க. மகளிரணி செயலாளர் சாந்தி ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடந்தது.

கே.சி.வீரமணி திருமண மண்டபம்.

ஜோலார்பேட்டை நாட்டறம்பள்ளி ரோட்டில் உள்ள கே.எஸ். திருமண மண்டபம் வாலாட்டியூர் கிராமத்திலுள்ள கே.சி.வீரமணிக்கு சொந்தமான பீடி கம்பெனி ஆகிய இடங்களில் சோதனை நடந்தது.

திருப்பத்தூர் மற்றும் ஏலகிரி மலையில் உள்ள கே.சி.வீரமணிக்கு சொந்தமான ஓட்டல்களிலும் சோதனை நடைபெற்றது.

குடியாத்தம் கொத்தமாரி குப்பம் கிராமத்தில் கே.சி. வீரமணிக்கு சொந்தமான வேளாண் கல்லூரியில் 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.

வேலூரில் முன்னாள் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் கர்ணல் என்பவருக்கு சொந்தமான சத்துவாச்சாரி, சேண்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள வீடுகளில் சோதனை நடந்தது.

இதேபோல அரக்கோணத்தை சேர்ந்த அதி.மு.க. இளைஞர் பாசறை மாவட்ட துணை தலைவர் ஷியாம் வீட்டில் சோதனை நடந்தது.

இன்று காலை 6 மணியில் இருந்து லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் திருப்பத்தூர், சென்னை, கிருஷ்ணகிரி, ஏலகிரி, பெங்களூர், ஓசூர் உள்பட 28 இடங்களில் கே.சி.வீரமணிக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்கள் மற்றும் அ.தி.மு.க.வினர் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

சோதனை நடைபெறும் சாந்தோமில் உள்ள கே.சி.வீரமணி வீட்டின் அருகே பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ள போலீசாரை படத்தில் காணலாம்.

திருப்பத்தூரில் 15 இடங்களில், சென்னையில் சாந்தோம், கொளத்தூர், சூளைமேடு, அண்ணாநகர் உள்ளிட்ட 4 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள மூக்கண்டப்பள்ளியில் கே.சி.வீரமணிக்கு சொந்தமான 7 ஹீல்ஸ் நட்சத்திர விடுதி உள்ளது. இன்று காலை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தினர்.

கோவை மண்டல லஞ்ச ஓழிப்புத்துறை ஏடிஎஸ்பி திவ்யா தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் இன்று காலை 6 மணியளவில் நட்சத்திர ஓட்டலுக்கு வந்தனர். ஓட்டல் வரவேற்பு அறை, மற்றும் அலுவலக அறைகளில் சோதனை நடத்தி வருகிறார்கள். இதையொட்டி நட்சத்திர விடுதி முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெளியாட்கள் யாரும் ஓட்டலுக்கு செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை.

கே.சி.வீரமணிக்கு சொந்தமான 28 இடங்களிலும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

கடந்த 2011-ம் ஆண்டு கே.சி.வீரமணியின் சொத்து மதிப்பு ரூ.7.48 கோடியாக இருந்தது. அது அடுத்த 10 ஆண்டுகளில் பலமடங்கு அதிகரித்துள்ளது. தற்போது அவரது சொத்து மதிப்பு ரூ.90 கோடியை தாண்டி இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் அசையா சொத்து மற்றும் அசையும் சொத்துக்களின் மதிப்பும் அதிகரித்துள்ளது. கே.சி.வீரமணி தனது உறவினர்கள் பெயரில் சொத்துக்களை வாங்கி அதனை தனது பெயருக்கு தானமாக மாற்றி இருப்பதாகவும் புகார் கூறப்பட்டு உள்ளது. இந்த புகார்களின் அடிப்படையில் வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளார். அதன் அடிப்படையில் இன்று சோதனை நடைபெற்று உள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் கே.சி.வீரமணி முறைகேடாக சொத்துக்களை வாங்கி இருப்பதாக முதல் தகவல் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று நடைபெற்ற சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு உள்ள நிலையில் 3-வதாக முன்னாள் அமைச்சரான கே.சி.வீரமணி வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்று வருகிறது. இது அ.தி.மு.க. மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது தொடர்ச்சியாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்தி வருவது அரசியல் அரங்கிலும் பரபரப்பான பேச்சாக மாறி உள்ளது. லஞ்ச ஒழிப்பு போலீசாரின் இந்த தொடர் நடவடிக்கை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி ஆகியோரது வீடுகளை தொடர்ந்து மேலும் சில முன்னாள் அமைச்சர்களின் வீடுகளிலும் விரைவில் சோதனை நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக