வியாழன், 23 செப்டம்பர், 2021

டி கே எஸ் மீது பி டி ஆர் - சொந்தக் கட்சியினர் மீதும் பிறாண்டத் தொடங்கிய பி.டி.ஆர்: முதல்வர் ஆக்‌ஷன் என்ன?

சொந்தக் கட்சியினர் மீதும் பிறாண்டத் தொடங்கிய பி.டி.ஆர்:  முதல்வர்  ஆக்‌ஷன் என்ன?
PTR - DKS- MKS
மின்னம்பலம் : எதிர்க்கட்சிக்காரர்களை கடுமையான வார்த்தைகளால் ட்விட்டரில் விமர்சிக்கும் திமுகவைச் சேர்ந்த தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், திமுகவின் மாநிலங்களவை எம்பி டி.கே.எஸ். இளங்கோவனையும் கடுமையான வார்த்தைகளால் தாக்கியுள்ளார். இது தலைமையின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் சில நிமிடங்களில் அந்த ட்விட்டர் பதிவை நீக்கியிருக்கிறார் பி.டி.ஆர். தியாகராஜன். இது திமுகவுக்குள் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த சில தினங்களாகவே நிதியமைச்சர் பி.டி.ஆர். தியாகராஜன் செப்டம்பர் 17 ஆம் தேதி லக்னோவில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்கு செல்லாதது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஒன்றிய நிதியமைச்சரின் நடவடிக்கைகளையும், ஒன்றிய அரசின் பொருளாதாரக் கொள்கைகளையும் வாய்கிழிய விமர்சிக்கும் பி.டி.ஆர் ஜிஎஸ்டி கூட்டத்துக்கு நேரில் ஏன் செல்லவில்லை என்று பாஜகவினரும், அதிமுகவினரும் சமூக தளங்களில் கேள்வி எழுப்பினர்.

இதற்கு செப்டம்பர் 17ஆம் தேதியன்றே மதுரையில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பி.டி.ஆர் பதிலளித்தார். “ 17 ஆம் தேதி நடக்கும் ஜிஎஸ்டி கூட்டத்துக்கு எனக்கு பத்தாம் தேதிக்குப் பிறகுதான் அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. மேலும் என்னென்ன அஜெண்டாக்கள் என்பதும் தாமதமாகத் தெரிவிக்கப்பட்டது. அதற்குள் நான் தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஒப்புக்கொண்டுவிட்டதால் ஜிஎஸ்டி கூட்டத்துக்கு செல்லவில்லை. நிதித்துறை செயலாளர் சென்றிருக்கிறார். மேலும் என் சார்பில் அறிக்கையை கவுன்சில் கூட்டத்தில் நான் சமர்ப்பித்துள்ளேன். தொகுதியில் நிறைய நிகழ்வுகள் ஒப்புக்கொண்டு விட்டதால் அதற்கு செல்ல வேண்டியுள்ளது. இன்று கூட வளைகாப்புக்கு செல்ல இருக்கிறேன்”என்று பதிலளித்தார். மதுரையில் சமூக நலத்துறை நடத்தும் சமுதாய வளைகாப்பு நிகழ்வை பிடிஆர் குறிப்பிட, இதுபற்றி பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, “நிதியமைச்சர் பிடிஆர் தியாகராஜன் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்கு செல்லவில்லை. ஏன் என்று கேட்டால் என் கொழுந்தியா பொண்ணு வளைகாப்பு என்று சொல்லுகிறார். இதெல்லாம் ஒரு காரணமா?” என்று கிண்டல் செய்தார். சமுதாய வளைகாப்பை கொழுந்தியா மகள் வளைகாப்பு என்று பாஜகவினர் வாட்ஸ் அப்பில் பரப்பிய வதந்தியைப் படித்து அதை பிரஸ்மீட்டிலேயே கூறினார் அண்ணாமலை.

இதற்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்த பி.டி.ஆர். தியாகராஜன், “வடிகட்டிய முட்டாள்தனம். எனக்கு கொழுந்தியாள் இல்லை, எப்படி இல்லாதவர் மகளுக்கு விழா நடக்கும். பொய் சொல்வதற்கு கூட ஒரு குறைந்தபட்ச அறிவு வேண்டுமடா மாட்டு மூத்திரம் குடித்தே மூளை கெட்டுப் போனவர்களா”என்று பதிலளித்தார்.

இதையடுத்து ட்விட்டரில் பிடிஆர் ஆதரவு திமுகவினருக்கும், பாஜகவினருக்கும் கடுமையான வார்த்தை மோதல்கள் ஏற்பட்டன. மன்னிப்பு கேள் அண்ணாமலை என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் திமுகவினரால் டிரண்ட் ஆக்கப்பட்டது.

இதற்கிடையில் முன்னாள் நிதியமைச்சரும் அதிமுகவைச் சேர்ந்தவருமான ஜெயக்குமார், “தமிழக மக்களின் உரிமைகளை நிலைநாட்டுகிற ஜிஎஸ்டி கூட்டத்தில் பி.டி.ஆர் பங்கேற்காதது வருத்தம். அதற்காக சொல்லப்படும் காரணமும் ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல.

பொதுமக்கள்- வணிகர்கள் ஆகியோரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் 30க்கும் மேற்பட்ட ஜிஎஸ்டி கூட்டங்களில் நான் கலந்துகொண்டுள்ளேன். ஒருமுறை கூட பங்கேற்காமல் இருந்ததில்லை. நிதியமைச்சராக தனது கடமையை செய்யாமல் இருப்பது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம் அல்லவா? தம்பி பி.டி.ஆர். கவனத்தில் கொள்” என்று கூறியிருந்தார்.

இதற்கு ட்விட்டரில் வழக்கம்போல் பதிலளித்த பி.டி.ஆர் ஜெயக்குமாரை பந்தாடினார்.

“ஒன்றிய நிதியமைச்சர், ஜிஎஸ்டி கவுன்சிலால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நான் அனுப்பிய 14பக்க அறிக்கையை பகிர்வதற்கு முன் சில கயவர்களின் GST கவுன்சிலின் விதிகள் பற்றிய அறியாமையை வெளிக்கொணர காத்திருந்தேன். முன்னாள் அமைச்சர் போன்ற பெரிய மீன் சிக்குமென நினைக்கவில்லை. மேலும் வேடிக்கைகளை எதிர்பார்க்கலாம்”என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில்தான் இந்த விவகாரத்தை சில ஆங்கில சேனல்களும் பெரிதாக்கின. ஆங்கில சேனல் ஒன்றுக்கு பதிலளித்த திமுகவின் எம்பி டி.கே.எஸ். இளங்கோவன்,

“பி.டி.ஆர் தியாகராஜன் மற்றவர்களிடம் வம்புகளைத் துவக்குவதில்லை. ஆனால் அவர்கள் தொடங்கிவைக்கும் வம்புகளில் எளிதாக தன்னை உட்படுத்திக் கொள்கிறார். அவர் எளிதில் கோபம் அடைந்துவிடுகிறார். பொதுவாழ்க்கையில் இருக்கும் ஒருவர் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடாது. திமுக தலைவரான முதல்வர் அனைவரையும் கவனித்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு அமைச்சரையும் அவர் கவனித்துக் கொண்டிருக்கிறார். அவர் பார்த்துக் கொள்வார்” என்று தெரிவித்திருந்தார்.

“பி.டி.ஆர் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்க வேண்டும். நிதியமைச்சர் என்பவர் அந்த மாநிலத்தை அந்த கூட்டத்தில் பிரதிநிதித்துவப் படுத்துகிறார் என்பதால் அவர் கலந்துகொண்டிருக்க வேண்டும்.

இந்த நிலையில்தான் வழக்கம்போல் எதிர்க்கட்சிக்காரர்களை பந்தாடுவதைப் போல கட்சியின் மூத்த பிரமுகர்களில் ஒருவரான டி.கே.எஸ். இளங்கோவனையும் கடுமையான வார்த்தைகளில் எச்சரித்துள்ளார் பி.டி.ஆர்.

இன்று (செப்டம்பர் 23) காலை 8.44க்கு தனது ட்விட்டரில் ஒரு பதிவிட்ட பி.டி.ஆர் தியாகராஜன் அதில் பெயர் குறிப்பிடாமல் டி.கே.எஸ்.இளங்கோவனை கடுமையாக தாக்கியிருந்தார். என்ன நடந்ததோ கொஞ்ச நேரத்தில் அதை நீக்கிவிட்டார்.

நீக்கப்பட்ட அந்த ட்விட்டர் பதிவில், “கட்சியின் இரு தலைவர்களாலும் இருமுறை நீக்கப்பட்ட வயதான முட்டாள் ஒருவர் (இரண்டு கிலோ இறால் வாங்கி வருவதற்கு மட்டுமே தகுதியானவர் என்பது அவரைப் பற்றி நான் கேள்விப்பட்ட துல்லியமான வர்ணனை) என்னைப் பற்றி கூச்சலிட்டிருக்கிறார்”என்று குறிப்பிட்டிருக்கிறார் பி.டி.ஆர் தியாகராஜன்.

கலைஞர், ஸ்டாலின் ஆகிய இரு தலைவர்களாலும் இருமுறை நடவடிக்கைக்கு உள்ளானவர் டி.கே.எஸ். இளங்கோவன். அவர் தன்னைப் பற்றி ஆங்கில சேனலுக்கு கொடுத்த பேட்டிக்கு பதிலாகத்தான் இதுபோன்ற மலினமான பதில் தாக்குதலை நடத்தி அதை கொஞ்ச நேரத்தில் ட்விட்டரில் இருந்து நீக்கியும் விட்டிருக்கிறார் பி.டி.ஆர்.

பி.டி.ஆர் அறிவாளியாக இருக்கலாம். பொருளாதாரத்தைக் கரைத்துக் குடித்தவராக இருக்கலாம். ஆனால் அவரால் திமுக அரசு தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே திமுக மூத்த முன்னோடிகள் முதல்வர் ஸ்டாலினுக்கு வைத்திருக்கும் வேண்டுகோள்.

டி.கே.எஸ். இளங்கோவன் அந்த பேட்டியில் கூறியபடி முதல்வர் ஸ்டாலின் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார் என்று நம்புவோம்!

-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக