புதன், 29 செப்டம்பர், 2021

மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் மீண்டும் உயிர் பெற்றது

மெத்தனம் காட்டிய அதிமுக; அதிரடி காட்டும் திமுக அரசு - மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை அசத்தல் அறிவிப்பு
இந்தியாவிலேயே முதல்முறையாக இரண்டு அடுக்கு சாலையாக அமையவுள்ளது மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை.
இந்தியாவிலேயே முதல்முறையாக இரண்டு அடுக்கு சாலையாக மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை அமையவுள்ளதாகவும், விரிவான திட்ட அறிக்கை (DPR) மூன்று மாதத்தில் நிறைவடைந்த பின், சாலைப்பணிகள் தொடங்கும் என நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் தீரஜ் குமார் தெரிவித்துள்ளார்.  கடந்த 2007ம் ஆண்டு தி.மு.க ஆட்சியின்போது பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும், சென்னை துறைமுகத்தில் இருந்து கண்டெய்னர் சரக்கு போக்குவரத்து தடையின்றி செல்லவும் ரூ. 1,815 கோடி ரூபாய் செலவில் மதுரவாயல்-சென்னை துறைமுகம் இடையே கூவம் ஆற்றின் வழியே மேல்மட்ட பறக்கும் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.

இத்திடத்திற்கு 2007ம் ஆண்டு, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மதுரவாயலில் அடிக்கல் நாட்டி பறக்கும் சாலை திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து 2011ல் ஆட்சி மாற்றம் நடைபெற்ற பின், பறக்கும் சாலை திட்டத்திற்கான ஆய்வுப் பணிகளை அப்போதைய அரசு மீண்டும் மேற்கொண்டு, கூவம் ஆற்றின் வழித்தடத்தை மாற்றும் வகையில் இத்திட்டம் இருப்பதாக கூறி, பறக்கும் சாலைக்கான கட்டமைப்பு பணிகளுக்கு அப்போதைய அ.தி.மு.க அரசு தடை விதித்தது.

ஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பின்னர், டெல்லி சென்ற போது ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்தபின், இத்திட்டம் மீண்டும் துவக்கப்படும் என்று அறிவித்தார். 1800 கோடியாக தொடக்கத்தில் மதிப்பிடப்பட்டிருந்த இத்திட்டம் 2018ல் ஆண்டில் 2,400 கோடியாக உயர்த்தப்பட்டு, பின்னர் 3087 கோடியாக உயர்த்தப்பட்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.

மெத்தனம் காட்டிய அதிமுக; அதிரடி காட்டும் திமுக அரசு - மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை அசத்தல் அறிவிப்பு

சென்னை துறைமுகத்தில் தொடங்கி சிந்தாரிப்பேட்டை, எழும்பூர், அமைந்தகரை, நுங்கம்பாக்கம், அரும்பாக்கம், கோயம்பேடு வழியாக மதுரவாயலில் முடிவடையும் இந்த சாலைக்காக, 6,993 சதுர மீட்டர் தனியார் நிலமும், 2,722 சதுர மீட்டர் அரசு நிலமும் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உயர்மட்ட சாலை அமையவுள்ள மொத்த தூரத்தில் கூவம் ஆற்றில் வருகின்ற 10 கிலோமீட்டர் தூரமும் கடற்கரை ஒழுங்காற்று மண்டலத்திற்குள் வருவதால் இத்திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதிக்கு விண்ணப்பிக்கப்பட்டு, 2011ல் அனுமதியும் பெறப்பட்டது.

பின்னர் திட்டம் பல ஆண்டுகள் நிறுத்தப்பட்டதால், மீண்டும் சுற்றுச்சூழல் அனுமதி கோரி சென்னை துறைமுக நிறுவனம் சமர்ப்பித்த விண்ணப்பத்தை பரிசீலித்து, கட்டுமானத்திற்கு நிலத்தடி நீரை உறிஞ்சி பயன்படுத்தக் கூடாது, கழிவுகளை நீர்நிலைகளில் கொட்டக்கூடாது, கட்டுமானத்திற்காக ஏற்படுத்தப்பட்ட தற்காலிக கட்டமைப்புகளை திட்டம் முடிவடைந்த பின்னர் அகற்ற வேண்டும், என்பது உள்ளிட்ட 6 நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் மதுரவாயல் துறைமுகம் பறக்கும் சாலை நவீன தொழில்நுட்பத்துடன் இந்தியாவிலேயே முதல்முறையாக இரண்டு அடுக்கு சாலையாக அமைக்கப்பட உள்ளதாக நெடுஞ்சாலை துறை தெரிவித்துள்ளது. அதன்படி, மதுரவாயல்-துறைமுகம் இடையே சென்னை மாநகரின் போக்குவரத்தை குறைக்கும் வகையில் முதல் அடுக்கில் பேருந்துகள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் வகையில் ஆறு வழிச்சாலை ஆக அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆறு வழிச்சாலையில் எங்கு அணுகு சாலைகள் அமைக்க வேண்டும் என்பது பரிசீலனையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் அடுக்கில் அமைய உள்ள நான்கு வழி சாலை நேரடியாக மதுரவாயலில் இருந்து துறைமுகம் வரை செல்லும் என்றும், அதில் கன்டெய்னர் உள்ளிட்ட சரக்கு போக்குவரத்திற்கு பயன்படும் வகையில் கட்டப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 10 வழிச்சாலைகளில் கூடுதல் எடையுடன் வாகனங்கள் செல்வதற்கு ஏற்றாற்போல நவீன தொழில்நுட்பத்துடன் பாலம் கட்டும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.

மொத்தம் 10 வழி சாலை, அணுகு சாலை உள்ளிட்ட புதிய கருத்துக்கள் அடங்கிய விரிவான திட்ட அறிக்கை இன்னும் மூன்று மாதத்தில் முடிக்கப்பட உள்ளதாகவும், அதைத்தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நிதி முதலீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் செயலாளர் தீரஜ்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக