சனி, 25 செப்டம்பர், 2021

விஐபி" மகனை தட்டி கேட்டதால் வால்பாறை வன ரேஞ்சர் கைது.. வனத்துறை ஊழியர்கள் போராட்டம்

போராட்டம்
 விஐபி மகனுடன் வாக்குவாதம்
Veerakumar  -   Oneindia Tamil :   கோவை மாவட்டம் வால்பாறை வனச் சரகர் ஜெயச்சந்திரன் என்பவர் மீது போலீசார் பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளதாக வனத்துறை ஊழியர்கள் குற்றம்சாட்டி போராட்டத்தில் குதித்துள்ளனர்.
வால்பாறை வனச்சரகத்தில் ரேஞ்சராக பணியாற்றுபவர் ஜெயச்சந்திரன். இவர் மது போதையில் பணியில் இருந்ததாக கூறி, வால்பாறை போலீசில், சட்டப்பிரிவு 294 பி, 506 (1) மற்றும் 4 (1) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆனால், வனத் துறையில் ஜெயசந்திரனுடன் பணியாற்றும் ஊழியர்கள், இது பொய் புகார் என்று குற்றம்சாட்டுகிறார்கள்.
இது தொடர்பாக, பெயர் தெரிவிக்க விரும்பாத, வால்பாறை வனச்சரகத்தில் உள்ள வனத்துறை ஊழியர்கள் சிலர் கூறுகையில், "ஜெயச்சந்திரன் இயல்பாக பணியில் ரொம்பவே ஸ்ட்ரிக்ட்டானவர். வன பாதுகாப்பு விஷயத்தில் ரொம்பவே உறுதியாக இருப்பார். தப்பு செய்வது யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்பார்.
சமூகத்தில் பெரிய இடத்தில் இருப்பவர்கள் தவறு செய்தால் அதை ஏற்றுக்கொள்வதும், மற்றவர்கள் என்றால் மட்டும் தண்டனை கொடுப்பதும் அவருக்கு பிடிக்காது.

சட்டம் எல்லோருக்குமே சமம் என்பார்.
இப்படித்தான், "விஐபி" ஒருவர் மகன் ஒருவர் தனது நண்பர் கூட்டத்தோடு, சிருகுந்த்ரா பாறை பகுதியில் சுற்றித் திரிந்ததை ஜெயச்சந்திரன் கவனித்து அங்கேயிருந்து போகுமாறு எச்சரித்துள்ளார். ஏனெனில் யானைகள் எப்போது வேண்டுமானாலும் அந்த பகுதிக்குள் வர வாய்ப்பு உண்டு. யானைக்கும் தொந்தரவு, அங்கே நிற்கும் மனிதர்களுக்கும் ஆபத்து என்ற நல்ல எண்ணத்தில் ஜெயச்சந்திரன் இவ்வாறு கூறி எச்சரித்துள்ளார்.

ஆனால் அந்த நபரோ, அங்கேயேதான் நிற்பேன். யானையை பார்க்கத்தான் வந்தேன் எனக் கூறி, ரேஞ்சருடன் தகராறு செய்தார். அப்போது இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. நான் யார் தெரியுமா என்றெல்லாம் அந்த நபர் கேட்க, அதைப் பற்றி கவலையில்லை. இங்கிருந்து கிளம்பி போங்கள் என ஜெயச்சந்திரன் கூறியுள்ளார். இந்த நிலையில்தான், திடீரென போலீஸ் நிலையத்தில் ஜெயச்சந்திரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் குடி போதையில் இருந்தார் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், ஜெயச்சந்திரன் அப்படிப்பட்ட நபர் கிடையாது. எனவே, இந்த அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக, போராட்டம் நடத்த உள்ளோம். ஜெயச்சந்திரனுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.

இதனிடையே, ஜெயச்சந்திரன் கைது செய்யப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த, வன ஊழியர்கள் தங்கள் போராட்டத்தையும் ஆரம்பித்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்கம், துணை இயக்குநர், ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனக்கோட்டம் மற்றும், துணை இயக்குநர், ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்டம் ஆகியோருக்கு தகவல் அனுப்பியுள்ளனர்.

ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனக்கோட்டம், வால்பாறை வனச்சரக அலுவலர் திரு.கி.ஜெயச்சந்திரன் மீது பொய் வழக்கு பதிவு செய்து, உயர் நீதிமன்ற நீதியரசர் அவர்களின் மகன் மற்றும் அவரது நண்பர்கள் ஆகியோர் நீதியரசரின் அதிகாரத்தை பயன்படுத்தி வனச்சரக அலுவலர் மீது சட்டத்திற்கு புறம்பாக காவல்துறை மற்றும் நீதித்துறை நடவடிக்கைக்கு உட்படுத்தி, நிபந்தனையற்ற நீதிமன்ற கைது நடவடிக்கைக்கு ஏற்றவாறு, சட்ட பிரிவுகளை பயன்படுத்தியது தொடர்பாகவும், களப் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பின்மை காரணமாகவும் தனிக்குழு அமைத்து நீதி விசாரணை செய்யும் வரை ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி மற்றும் திருப்பூர் வனக்கோட்ட களப்பணியாளர்கள் ஒருங்கிணைந்து 24.09.2021 காலை முதல் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பு நடத்த வன அலுவலர்கள் சங்கம் சார்பாக முடிவெடுக்கப்பட்டுள்ளது என்பதை தகவலுக்காக பணிந்து தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன ஊழியர்கள் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால், அடுத்து காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்க உள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக