சனி, 18 செப்டம்பர், 2021

நடிகர் கார்த்தியின் சொதப்பலால் வட்டி கொடுமையில் சிக்கிய தயாரிப்பாளர் எஸ் இலட்சணகுமார்!

 மின்னம்பலம் : நடிகர் கார்த்தி இப்போது பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியதேவன் கதாபாத்திரத்தில் நடித்து முடித்துவிட்டார். அதைத் தொடர்ந்து முத்தையா இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனால் கார்த்தியின் நண்பரும் தயாரிப்பாளருமான இலட்சுமண் குமார் நெருக்கடிக்கு உள்ளாகிஇருப்பதாகச் செய்திகள் கசிந்துள்ளன.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் புதிய படமொன்றின் அறிவிப்பு கடந்த ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி தீபாவளி நாளில் வெளியானது.
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.இலட்சுமண்குமார் தயாரிக்கும் அந்தப்படத்தின் பெயர், முதல்பார்வை மற்றும் ட்ரெயிலர் ஆகியன 25.04.2021 அன்று வெளியானது.
படத்துக்கு சர்தார் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
படத்தில் சுல்தான் பட நாயகி ராஷ்மிகா மந்தனா மற்றும் கர்ணன் பட நாயகி ரெஜிஷா விஜயன் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள் என அறிவிக்கப்பட்டது. அப்படத்துக்கு இசை ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவு ஜார்ஜ் சி.வில்லியம்ஸ். சர்தார் படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடந்ததோடு நிற்கிறது.


பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை முடித்துவிட்டு சர்தார் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாகச் சொல்லியிருந்திருக்கிறார் கார்த்தி.

எனவே, அதற்காகப் பெரும் தொகையைக் கடன் பெற்று சர்தார் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கத் தயார் ஆகியிருக்கிறார் இலட்சுமண் குமார்.

திடீரென, சூர்யாவுக்கு சொந்தமான 2D எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் முத்தையா இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளப் போவதாகவும், அப்படத்தை வேகமாக முடித்துவிட்டு சர்தார் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாகவும் தகவல் கூறி இருக்கிறார் கார்த்தி.

இதுதான் அவருடைய நெருக்கடிக்கு காரணம். இந்தப்படத்துக்காகப் பெரும் தொகையை வட்டிக்கு வாங்கியிருப்பதால் மேலும் சில மாதங்கள் கூடுதலாக வட்டி கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. படப்பிடிப்புக்கு என்றும், கதாநாயகனுக்கு பெரும்தொகையை சம்பளமாக கொடுக்கவும் பைனான்சியர்களிடம் காலத்தின் கணக்கு அதற்குரிய வட்டி இவைகளை கணக்கிட்டே கடன் வாங்குவார்கள்.

இதில் சற்று மாற்றம் ஏற்பட்டாலும் வட்டி லாபத்தை சாப்பிட்டுவிடக்கூடிய அபாயம் உண்டு. அதனால்தான் பட ரிலீஸ் நேரத்தில் கடனை திருப்பி செலுத்த முடியாமல் பைனான்சியர் பிரச்சினை ஏற்படுகிறது.

இவை எல்லாம் தெரிந்திருந்தும் சிவகுமார் குடும்பத்தினரும், கார்த்தியும் ஏன் இந்தப்படத்தைத் தள்ளிப்போட்டார்கள் என்பது புரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறாராம் தயாரிப்பாளர்.

-இராமானுஜம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக