ஞாயிறு, 12 செப்டம்பர், 2021

தலைவி – கங்கனா ரணாவத் நடித்த ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படம் எப்படி உள்ளது?

தலைவி - கங்கனா ரணாவத் நடித்த ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படம் எப்படி உள்ளது?

  முரளிதரன் காசி விஸ்வநாதன்  -      பிபிசி தமிழ்  :  நடிகர்கள்: கங்கனா ரணாவத், அரவிந்த் சுவாமி, சமுத்திரக்கனி, நாசர், மதுபாலா, தம்பி ராமைய்யா; சண்முகராஜா, பூர்ணா, ரெஜினா கஸாண்ட்ரா; கதை: கே.வி. விஜயேந்திர பிரசாத்; ஒளிப்பதிவு: விஷால் விட்டல்; இசை: ஜி.வி. பிரகாஷ்குமார்; இயக்கம்: ஏ.எல். விஜய்.
மிகப் பெரிய ஆளுமைகளின் வாழ்வை திரைப்படங்களாக எடுப்பது மிகச் சவாலான காரியம். அதனால், பெரும்பாலான bio-Pic திரைப்படங்கள், சம்பந்தப்பட்ட ஆளுமைகளை விதந்தோதும் சம்பவக் கோர்வைகளாகவே முடிந்துவிடுகின்றன. தலைவியும் அந்த வரிசையில் வரும் ஒரு திரைப்படம்தான்.
மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையின் ஒரு பகுதியை மட்டும் காட்சிப்படுத்துகிறது ‘தலைவி’. குடும்பம் மிக சிரமப்படும் ஒரு காலகட்டத்தில், சினிமாவில் நடிக்கவரும் ஜெயலலிதா, மெல்லமெல்ல எம்.ஜி.ஆருடன் நெருக்கமாகிறார். திரைத்துறையின் உச்சத்திற்கு வருகிறார்.

ஆனால், சத்யா மூவிஸைக் கவனித்துக்கொண்டிருந்த ஆர்.எம். வீரப்பனுக்கு இந்த நெருக்கம் பிடிக்கவில்லை. எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையிலான உறவு ஏற்ற – இறக்கமாக சென்றுகொண்டிருக்கும்போது மரணமடைகிறார் எம்.ஜி.ஆர். அதற்குப் பிறகு, அ.தி.மு.கவின் தலைமைப் பதவியைக் கைப்பற்றுகிறார் ஜெயலலிதா என்பதோடு இந்தப் படம் முடிவடைகிறது.

ஜெயலலிதா அரசியலுக்கு வந்து முதலமைச்சரானதற்குப் பின்னதான காலகட்டத்தில்தான் அவர் மிகப் பெரிய தலைவியாக உருவெடுத்தார். ஆனால், அந்த காலகட்டம் கடும் விமர்சனங்களைச் சந்தித்த காலகட்டமாக இருக்கும் நிலையில், அந்தப் பகுதி இந்தப் படத்தில் வசதியாகத் தவிர்க்கப்பட்டிருக்கிறது.

ஆகவே, வண்ணமயமான திரைத்துறையில் அவர் இருந்த நாட்களில், அவருக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையிலான உறவை மட்டும் பேசும் ஒரு படமாக ‘தலைவி’ உருவாகியிருக்கிறது. இந்தக் கதைக்கு வில்லன் ஆர்.எம். வீரப்பன்.

1989 மார்ச் மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடந்த களேபரம் குறித்து ஜெயலலிதா சொன்ன சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுகளை, காட்சிகளாக்கி படத்தைத் துவங்கியிருக்கிறார் விஜய்.

இதற்குப் பிறகு படம் பின்னோக்கி நகர்ந்து, ஜெயலலிதான் அறிமுக நாட்களுக்குச் செல்கிறது. அங்கிருந்து அவருக்கும் எம்.ஜி.ஆருக்குமான உறவை பின்தொடர்ந்து, எம்.ஜி.ஆரின் மரணத்தோடு முடிகிறது. ஒரு முழுமையான வாழ்க்கைக் கதைக்கான டைட்டிலைக் கொண்டிருக்கும் இந்தப் படம், இரு பெரிய நட்சத்திரங்கள் இடையிலான உறவைச் சொல்லும் குறுநாவலாகச் சுருங்கிப் போயிருக்கிறது.

ஆனால், அந்தக் கதையும்கூட முழுமையாக இல்லை. எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா இடையிலான உறவில் நடந்த சர்ச்சைக்குரிய சம்பவங்களோ, நிகழ்வுகளோ இல்லாமல் பார்த்துக்கொண்டிருக்கிறது. சசிகலாவைத் தவிர, ஜெயலலிதாவின் வாழ்வில் இருந்த பிற மனிதர்களைப் பற்றிய சுவடுகள்கூட படத்தில் இல்லை. தவிர, 1972லிருந்து, ஜெயலலிதா அ.தி.மு.கவில் சேருவதற்கு இடைப்பட்ட பத்தாண்டு காலம் குறித்த சம்பவங்கள் படத்தில் பெரிய அளவில் இடம்பெறவில்லை.

முடிவில் பார்வையாளர்களுக்கு கிடைப்பதென்னவோ, எல்லோருக்கும் தெரிந்த சம்பவங்களும் சில பிரபல எம்.ஜி.ஆர். பாடல்களுக்கு அரவிந்த் சாமியும் கங்கனா ரணாவத்தும் வாயசைக்கும் காட்சிகளும்தான்.

வரலாற்றை மாற்றிச் சொல்லும் காட்சிகள் பலவும் படத்தில் இடம்பெற்றிருக்கின்றன. குறிப்பாக, எம்.ஜி.ஆர். மரணமடைவதற்கு முதல் நாள், ஜெயலலிதாவுக்கு போன் செய்து, தான் உணவருந்த அவரது வீட்டிற்கு வருவதாக சொல்வதைப் போல இந்தப் படத்தில் ஒரு காட்சி வருகிறது. உணவைச் சமைத்துவைத்து ஜெயலலிதா காத்திருக்கும்போது, அவரது மரணச் செய்திதான் வந்து சேர்கிறது. அதாவது, மரணத் தருவாயிலும் எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவிடம் பாசம் கொண்டிருப்பதைப் போல இந்தக் காட்சி சித்தரிக்கிறது.
தலைவி - கங்கனா ரணாவத் நடித்த ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படம் எப்படி உள்ளது?

ஆனால், பிரபல மூத்த பத்திரிகையாளர் வாஸந்தி எழுதியுள்ள The Lone Empress புத்தகத்தின்படி பார்த்தால் டிசம்பர் 23ஆம் தேதி அதாவது எம்.ஜி.ஆர். மரணத்திற்கு முந்தைய நாள் நடந்ததே வேறு. கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் என்ற முறையில் ஜெயலலிதாவின் வீட்டிற்கு கொடுக்கப்பட்டிருந்த ஒரு தொலைபேசி இணைப்பு, முதலமைச்சரின் ஆணையின் பேரில் அன்றைய தினம்தான் துண்டிக்கப்படுகிறது. இதுபோல, பல வசதியான மாற்றங்கள் இந்தப் படத்தில் இருக்கின்றன.

ஜெயலலிதாவாக நடித்திருக்கும் கங்கனா ரணாவத் பல இடங்களில் பொருந்தாமல் தென்படுகிறார். குறிப்பாக, அவருக்கான டப்பிங் சுத்தமாகப் பொருந்தவில்லை. ஆனால், அரவிந்த் சாமி ஒரு நல்ல தேர்வு. ஆர்.எம். வீரப்பனாக வரும் சமுத்திரக்கனியும் சிறப்பாகவே பொருந்துகிறார்.

இந்தப் படத்தில் பாராட்ட வேண்டிய ஒரு விஷயம், கலை இயக்கம். பல தருணங்களில் அந்த காலகட்டத்தை நேரில் கொண்டுவந்திருக்கிறார் கலை இயக்குனர். சினிமா ஸ்டுடியோக்கள், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் வீடுகள் என சிறப்பாகவே செய்திருக்கிறார்கள். ஒளிப்பதிவும் இசையும்கூட நன்றாகவே அமைந்திருக்கின்றன.
ஆனால், ஒரு Biopic திரைப்படமாக பார்த்தால், யாருக்கும் உண்மையாக இல்லாத ஒரு படம் இது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக