வெள்ளி, 10 செப்டம்பர், 2021

பெண்களுக்கு எதற்கு மந்திரி பதவி... அவர்கள் குழந்தைகளை பெற்றெடுக்கட்டும் - தலிபான்கள்

 Arsath Kan  -   Oneindia Tamil :   காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண்கள் ஒருபோதும் அமைச்சராக வர முடியாது என்றும் அவர்கள் குழந்தைகளை பெற்றெடுத்து நிம்மதியாக இருக்கட்டும் எனவும் தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் ஆப்கானிஸ்தானை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த தலிபான்கள் இடைக்கால அரசையும் நிறுவி அதற்கான அமைச்சரவை பட்டியலையும் வெளியிட்டனர்.
அதில் ஒரு பெண்ணுக்கு கூட வாய்ப்பு வழங்காதது சர்வதேச அளவில் விவாதத்திற்கு உள்ளானனது.
இந்நிலையில் தலிபான் செய்தித் தொடர்பாளர் சையது ஷக்ருல்லா ஹஷிமி ஆப்கானிஸ்தான் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஆப்கானிஸ்தானில் பெண்கள் அமைச்சர்களாக ஆக முடியாது என்றும் பெண்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் அது அவர்களால் தாங்கமுடியாத சுமை என்றும் கூறியுள்ளார்.

பெண்களும் அமைச்சரவையில் இருக்க வேண்டும் என எந்த அவசியமும் இல்லை என்றும் அவர்கள் குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் எனவும் சையது ஷக்ருல்லா ஹஷிமி கூறியுள்ளார்.
மேலும், தற்போது ஆப்கனில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களை நாட்டின் ஒட்டுமொத்த பெண்களின் பிரதிநிதிகளாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை எனக் கூறியிருக்கிறார்.
தலிபான்கள் ஆட்சியில் பெண்ணுரிமை முற்றிலும் மறுக்கப்படுவதாக கூறி உலக நாடுகள் விமர்சித்து வரும் நிலையில் இத்தகைய கருத்தை பதிவு செய்துள்ளார் தலிபான் செய்தித் தொடர்பாளர் சையது ஷக்ருல்லா. இதனிடையே ஆப்கானிஸ்தானில் பெண்கள் விளையாட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், பெண்கள் கல்வி கற்கலாம் மற்றும் சுகாதார பணிகளில் ஈடுபடலாம் என தலிபான்கள் அறிவித்திருந்தாலும் அதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக பெண்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர். அவர்கள் மீது துப்பாக்கிச்சூடும், கசையடியும் நடத்தி போராட்டத்தை ஒடுக்க முற்பட்டுள்ளது தலிபான் அரசு. எங்களுக்கு சுதந்திரம் வேண்டும், ஆப்கானிஸ்தான் பெண்கள் வாழ்க, என்கிற வாசகங்கள் தாங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி போராட்டம் நடத்தி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.
மேலும், உலக நாடுகள் ஆப்கனில் நடப்பதை ஏன் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டுள்ளது என்ற வினாவையும் பெண்கள் எழுப்பியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் ஷரியத் சட்டத்தின் ஆட்சி நடைபெறும் என அந்நாட்டின் புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளா முல்லா ஹசன் நேற்று முன் தினம் அறிக்கை வெளியிட்டிருந்தது கவனிக்கத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக