ஞாயிறு, 26 செப்டம்பர், 2021

தமிழ்நாட்டில் இரண்டாவது நாளாக 219 ரவுடிகள் கைது

 hindutamil.in : சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று இரண்டாவது நாளாக போலீஸார் நடத்திய சோதனையில் 219 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டி கொலை, கொள்ளை, பலாத்காரம், ரவுடித்தனத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்ய, டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதன்படி, மாநிலம் முழுவதும் நேற்று இரண்டாவது நாளாக போலீஸார் ரவுடிகளை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்படி சேலம் மாநகரப் பகுதியில் 44 ரவுடிகளும், மாவட்ட பகுதியில் 139 ரவுடிகள் என மாவட்டம் முழுவதும் 183 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
ஈரோட்டில் 16 ரவுடிகள் கைது

ஈரோடு மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில், முதல் நாளில் 13 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு 2-வது நாளாக போலீஸார் நடத்திய சோதனையில் 16 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், மாவட்டம் முழுவதும் சந்தேக நபர்கள் 65 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரியில் 20 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி சாய் சரண் தேஜஸ்வி உத்தரவின் பேரில் குற்றப் பின்னணி கொண்டவர்கள், ரவுடிகள் என 80 பேர், கடந்த 23-ம் தேதி இரவு கைது செய்யப்பட்டனர். நேற்று முன்தினம் மேலும் 20 பேரை போலீஸார் கைது செய்தனர். குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை கைது செய்யும் பணி தொடர்ந்து நடைபெறும் என போலீஸார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக