திங்கள், 6 செப்டம்பர், 2021

செப்டம்பர் 11’ தாக்குதல்: கடத்தப்பட்ட விமானத்துக்குள் நடந்தது என்ன?

கடத்தல்காரர்கள்
கட்டடம்
BBC : (உலக வல்லரசுகளில் முன்னோடி என்ற அடையளத்துடன் விளங்கி வந்த அமெரிக்காவின் அடித்தளத்தையே அசைத்துப் பார்க்கும் ஒரு சம்பவம் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி நடந்தது. அந்த சம்பவத்தின் சுவடுகளை திரும்பிப் பார்க்கும் வகையில் இன்று முதல் அடுத்த சில தினங்களுக்கு தினமும் ஒரு நினைவை தொடராகப் பதிவு செய்கிறது பிபிசி தமிழ். அதில் முதலாவது கட்டுரை இது.)

செப்டம்பர் 11 அமெரிக்காவின் ஆன்மாவை பயங்கரவாதிகள் சிலர் அசைத்துப் பார்த்த நாள். ஒட்டுமொத்த உலகத்தின் போக்கையும் மாற்றிய நாள்.பல்வேறு நாடுகளில் அமெரிக்கா பயங்கரவாதத்துக்கு எதிரான போரைத் தொடங்குவதற்கும் இந்த நாளே தொடக்கப் புள்ளியாக அமைந்தது. விமான நிலையங்களின் பாதுகாப்பையும், விமானப் பயணத்தின் தன்மையையும் நிரந்தரமாக மாற்றியது.நெஞ்சை உருக வைக்கும் ஆயிரக்கணக்கான சோகக் கதைகளும், நூற்றுக்கணக்கான வீரதீர நினைவுகளையும் ‘செப்டம்பர் 9’ சுமந்து கொண்டிருக்கிறது.

அமெரிக்காவின் வடமேற்கு நகரங்களில் இருந்து கலிபோர்னியாவை நோக்கிச் செல்ல வேண்டிய நான்கு விமானங்கள் குறுகிய நேர இடைவெளியில் கடத்தப்பட்டு மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டன.

உலக வர்த்தக மையக் கட்டடம், பாதுகாப்புத் துறையின் தலைமையிடமான பென்டகன் போன்ற முக்கியமான இடங்கள் தாக்குதலுக்கு இலக்காயின.

உலகையே கண்காணிக்கும் நாடு என்று பேசப்பட்டு வந்த அமெரிக்கா, உள்நாட்டிலேயே நடந்த மிகப்பெரிய தாக்குதலை முன்கூட்டியே கணிக்கத் தவறியதால் தலை குனிந்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

பெரும் பொருள் செலவில் 20 ஆண்டுகள் வரை நீடித்த மிக நீண்ட ஒரு போரை ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்த வேண்டியிருந்தது.

 2018-ஆம் ஆண்டு தாக்குதலின் நினைவு நாளில் பேசிய அப்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப், “ஒரு போதும் பயங்கரவாதத்துக்கு பணிந்துபோக மாட்டோம்” என்று சூளுரைத்தார்.

ஆனால் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறியிருக்கும் நிகழ்வு ட்ரம்பின் கருத்துக்கு நேர் எதிராக விமர்சிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் மீதான தாக்குதல் நடந்து 20 ஆண்டுகள் ஆகின்றன. அதற்காக அமெரிக்கா நடத்திய போர் முடிவுக்கு வந்திருக்கிறது. இந்தச் சூழலில் 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி நடந்தது என்ன என்பதை நினைவுபடுத்துவது பொருத்தமாகிறது.

இதற்கான பெரும்பாலான தரவுகளும் தகவல்களும் அமெரிக்க அரசு அமைத்த ஆணையத்தின் 9/11 விசாரணை அறிக்கையில் இருந்து எடுக்கப்பட்டிருக்கின்றன.

கறுப்பு தினத்தின் விடியல்

அது பாஸ்டன் நகரம். அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையோரம் நியூயார்க் நகருக்கு வடக்கே அமைந்திருக்கிறது.

செப்டம்பர் 11-ஆம் தேதி பாஸ்டன் நகர விமான நிலையத்தில் இருந்து கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரத்துக்குச் செல்வதற்காகத் தயாராக இருந்தது அமெரிக்கன் ஏர்லைன்ஸ் 11 என்ற விமானம்.

போர்ட்லேண்ட் நகரில் இருந்து பாஸ்டனுக்கு மற்றொரு விமானத்தில் வந்த முகமது அட்டா, அப்துல் அஜீஸ் அல்-ஓமாரி ஆகிய இருவரும் இந்த விமானத்தில் பயணம் செய்தாக வேண்டும்.

அவர்களது நண்பர்களான வலீத் அல்ஷேஹ்ரி, வெய்ல் அல்-ஷேஹ்ரி, சதாம் அல் சுகாமி ஆகிய மூவரும் ஒரு வாடகைக் காரைப் பிடித்து பாஸ்டன் விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.

காலை ஏழு மணியாக இன்னும் 8 நிமிடங்கள் இருந்தன. CAPPS எனப்படும் கணினி முறையில் தேர்வு செய்யப்படும் சோதனைகளைக் கடந்துதான் விமானத்துக்குப் போக முடியும்.

வெய்ல், வலீத் மற்றும் சதாம் அல் சுகாமி ஆகியோரை கூடுதல் பரிசோதனைக்காக CAPPS அமைப்பு தேர்வு செய்தது.

ஆயினும் அவர்களிடம் இருந்து எதுவும் கைப்பற்றப் படவில்லை. அதனால் 5 பேரும் விமானத்துக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். விமானத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருக்கையைத் தேர்வு செய்து அமர்ந்தனர்.

பாஸ்டன் லோகன் விமான நிலையத்தில் முகமது அட்டா நுழையும் காட்சி அங்குள்ள சிசிடிவியில் பதிவானது

அது போயிங் 767 ரக விமானம். 8 விமானப் பணியாளர்களும் அன்று வந்திருந்தனர். மொத்தம் 81 பயணிகளுடன் விமானம் புறப்பட்டபோது மணி 7.59.

பாஸ்டனின் லோகன் விமான நிலையத்தின் ஓடு பாதையில் சீறிப் பாய்ந்த விமானம், சில நிமிடங்களில் விண்ணில் பறக்கத் தொடங்குகிறது. 15 நிமிடங்களுக்குள்ளாக தரையில் இருந்து 26 ஆயிரம் அடி உயரத்துக்குச் சென்றுவிட்டது.

தலைமை விமானியான கேப்டன் ஜான் ஓகோனோவ்ஸ்கி, தரைக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து வந்த சில கட்டளைகளை பின்பற்றினார். சீட் பெல்ட்டுகளை அகற்றுவதற்கான நேரம். பணிப்பெண்கள் தங்களது சேவையைத் தொடங்குவார்கள்.

துணிச்சலான பணிப்பெண்கள்

விமானத்தை 35 ஆயிரம் அடிக்கு கொண்டு செல்லுமாறு தரைக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து அறிவுறுத்தப்பட்டது. ஆனால் எந்தப் பதிலும் இல்லை. தொடர்ந்து முயற்சி நடக்கிறது ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை.

இந்தத் தகவல்களின் அடிப்படையில் சரியாக 8.14 மணியை ஒட்டிய நேரத்தில் விமானம் கடத்தப்பட்டதாக அமெரிக்க விசாரணை ஆணையம் முடிவுக்கு வருகிறது. அந்த நேரத்தில் இரு விமானப் பணியாளர்களை தீவிரவாதிகள் இருவர் ஆயுதங்களால் குத்திக் காயப்படுத்தியிருந்தனர்.

இந்தத் தகவல்களையெல்லாம் விமானப் பணிப்பெண்ணான பெட்டி ஓங் தன்னிடம் இருந்த ஏர்ஃபோன் மூலமாக வடக்கு கரோலினாவின் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் முன்பதிவு அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு விமானம் கடத்தப்பட்ட செய்தியைத் தெரிவிக்கிறார்.

“காக்பிட்டில் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. உயர் வகுப்பில் யாரோ குத்தப்பட்டிருக்கிறார். எங்களால் மூச்சு விட முடியவில்லை. விமானம் கடத்தப்பட்டிருப்பதாக நான் நினைக்கிறேன்” என்று அவர் கூறியதுதான் அமெரிக்கா மீதான பயங்கரவாதத் தாக்குதலுக்கான முதல் எச்சரிக்கை.

ஹவாயில் விடுமுறையைக் கழிப்பதற்காக தாமாகவே இந்த விமானத்தில் பணியாற்ற முன்வந்தவர் அவர். அவர் பேசிய உரையாடலின் ஒலிப் பதிவு பின்னர் பொதுவெளியில் வெளியிடப்பட்டது.

பெட்டி ஓங் அளித்த தகவல் உடனடியாக தரைக் கட்டுப்பாட்டு மையத்துக்கு பறந்தது. ஏற்கெனவே தரைக் கட்டுப்பாட்டு மையம் விமானத்தைத் தொடர்பு கொள்ள இயலாமல் பதற்றத்தில் இருந்தததால், இந்தத் தகவல் கிடைத்ததும் விமானம் கடத்தப்பட்டதை உறுதி செய்தது.

உலக வல்லரசான அமெரிக்காவின் விமானம் அதன் வான் எல்லையிலேயே கடத்தப்பட்டிருந்தது.

விமானப் பணிப்பெண் பெட்டி ஓங்கின் நினைவிடம்

விமானம் வழக்கமாகச் செல்ல வேண்டிய பாதையில் இருந்து திரும்பியது. பாஸ்டன் தரைக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் எவ்வளவோ முயன்றும் விமானிகளுடன் பேச முடியவில்லை.

தொடர்பு முற்றிலுமாகத் துண்டிக்கப்படுகிறது. ஏனென்றால் அந்த நேரத்தில் விமானத்தை இயக்கிக் கொண்டிருந்தவர் விமானியல்ல. பயணியாக விமானத்தில் ஏறிய அட்டா. விமானத்தை இயக்கும் பயிற்சி பெற்ற பயங்கரவாதி.

“எங்களிடம் சில விமானங்கள் இருக்கின்றன. பயணிகள் யாரும் நகரக்கூடாது. மீறினால் நீங்களும் விமானமும் ஆபத்தைச் சந்திக்க நேரிடும். அமைதியாக இருங்கள்.

விமான நிலையத்துக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறோம்” என்று அட்டா எச்சரித்தது பயணிகள் யாருக்கும் கேட்கவில்லை.

மாறாக பாஸ்டன் தரைக் கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்களுக்கு அது கேட்டது. அட்டா தவறான பொத்தானை அழுத்திப் பேசியதுதான் காரணம். அப்போது விமானத்தின் நிலை என்னவென்பது தரையில் இருந்த அதிகாரிகளுக்குப் புரிய வந்தது.

பெட்டி ஓங் போலவே, மற்றொரு பணிப்பெண்ணான ஏமி ஸ்வீனியும் தனது ஏர்போன் மூலமாக விமானத்துக்குள் நடப்பதை தரையில் இருந்த அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு கூறிக்க கொண்டிருந்தார். எந்தெந்த இருக்கையில் இருந்தவர்களெல்லாம் கடத்தல்காரர்களாக இருக்கக்கூடும் என்பதையும் அவர் கூறினார்.

விமானப் பணிப் பெண்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சிகளையெல்லாம் தாண்டி ஒரு பதற்றமான சூழலை மிகவம் பொறுப்பாகக் கையாண்டு கொண்டிருந்தனர் என்கிறது

9/11 விசாரணை அறிக்கை. ஏர்போன் மூலமாகத் தொடர்பு கொண்டிருந்த பெட்டி ஓங், ஏமி ஸ்வீனி ஆகிய இருவருமே தங்களது உயிரையும் பொருள்படுத்தாமல், விமானத்தின் சூழலை தரையில் இருந்த அதிகாரிகளுக்கு தெளிவாகக் விளக்கிக் கொண்டிருந்தனர்.

நியூயார்க்கை நோக்கி திரும்பிய விமானம்

அட்டாவுடன் வந்தவர்கள் பயணிகளை மிரட்டிக் கொண்டிருந்தனர். அவர்கள் வெடிகுண்டுகள் வைத்திருப்பதாகக் கூறினர். ஆனால் கத்திகள், தடிகள் போன்ற ஆயுதங்களை மட்டுமே வைத்திருந்ததாகத் தெரியவந்தது.

8.41 மணிக்கு விமானம் நியூயார்க் நகரை நோக்கித் திரும்புவது உறுதிசெய்யப்பட்டது. கென்னெடி விமான நிலையத்துக்குச் செல்லக்கூடும் என்று கருதப்பட்டது.

8.44 மணிக்கு பெட்டி ஓங்கின் ஏர்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஸ்வீனி தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

ஆனால் அவரது குரலில் பதற்றம் இருந்தது “விமானம் மிகத் தாழ்வாகப் பறந்து கொண்டிருக்கிறது. அடக் கடவுளே! மிக மிகத் தாழ்வாகப் பறந்து கொண்டிருக்கிறது” என்றார்.

அந்த நேரத்தில் விமானத்தின் வேகம் மணிக்கு 740 கிலோ மீட்டர். கண்ணுக்கு எட்டும் தொலைவில் வர்த்தக மையக் கட்டடம் வந்துவிட்டது.

பயங்கரவாதிகள் திட்டமிட்டபடி வர்த்தக மைய வளாகத்தின் வடக்குக் கட்டடத்தில் விமானத்தை மோதியது. 93-வது மாடிக்கும் 99-வது மாடிக்கும் இடையே அமெரிக்கன் ஏர்லைன்ஸ் 11 விமானம் புகுந்தது. அப்போது மணி 8.46.

கடத்தல் காரர்கள்அமெரிக்கன் எர்லைன்ஸ் 11 விமானத்தை் கடத்தியதாக விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்படும் நபர்கள்

பெருஞ்சத்தத்துடன் நெருப்பும், கரும்புகையும் எழுந்தன. மக்கள் அபயக் குரல்களைக் கேட்க முடிந்தது.

ஆனாலும் உள்ளே சிக்கியிருந்தவர்களால் தப்பிக்க இயலவில்லை. வேறு யாரும் உள்ளே சென்று காப்பாற்றவும் முடியவில்லை.

ஏனென்றால், விமானத்தின் எரிபொருள் கட்டடத்தின் 22-வது மாடி வரைக்கும் கீழ்நோக்கி வடிந்து கொண்டிருந்தது. இதனால் கட்டடம் முழுவதும் நெருப்பு பரவியிருந்தது.

இந்தச் சம்பவத்தை மக்கள் முழுமையாக உள்வாங்கிக் கொள்ளாத நிலையில், அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.

அட்டா கூறியது போல கடத்தல்காரர்களின் கட்டுப்பாட்டில் சில விமானங்கள் இருந்தன. அவை இன்னும் பேரழிவை ஏற்படுத்துவதற்காக வானில் பறந்து கொண்டிருந்தன.

தொடரின் அடுத்த பகுதி நாளை வெளிவரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக