திங்கள், 20 செப்டம்பர், 2021

அமெரிக்காவுக்குள் பாலத்துக்கு அடியில் தஞ்சமடைந்த 10 ஆயிரம் குடியேறிகள் - என்ன ஆகும்?

மத்திய அமெரிக்க குடியேறிகள்

BBC : அமெரிக்க சுங்க அலுவலகத்தில் அகதியாக தஞ்சம் கோரி விண்ணப்பித்தவர்களின் மனுக்கள் பரிசீலிக்கப்படும்வரை இவர்கள் போக இடமின்றி எல்லை முகாம்களில் காத்திருக்கிறார்கள்.
அமெரிக்கா-மெக்சிகோ எல்லை பாலம் அருகே முகாமிட்டுள்ள ஆயிரக்கணக்கான குடியேறிகளை ஹேட்டிக்கே திருப்பி அனுப்பும் நடவடிக்கையை அமெரிக்கா தொடங்கியிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எல்லையில் முகாமிட்டுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் ஹேட்டியைச் சேர்ந்த குடியேறிகள். இவர்களை திருப்பும் அனுப்பும் நடவடிக்கை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியுள்ளது. இந்த பணி எட்டு நாட்கள்வரை ஆகலாம் என்று அதிகாரிகள் அசோசியேட்டட் பிரெஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர்.
அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள டெல் ரியோவையும் மெக்ஸிகோவின் சியூடாட் அகூன்யாவையும் இணைக்கும் பாலத்தின் கீழ் சுமார் 10 ஆயிரம் குடியேறிகள் திரண்டுள்ளனர். மேலும் பலர் அங்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், டெல் ரியோ மேயர் ப்ரூனோ லோசானோ, அவசரநிலையை அறிவித்துள்ளார்.
இத்தகைய சூழ்நிலை முன்னெப்போதும் நடந்திராத மற்றும் கனவிலும் நினைத்துப் பார்க்காத ஒன்று என விவரித்த மேயர், எல்லையில் கண்காணிப்பு ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ள அதே சமயம், முகாமிட்டுள்ள குடியேறிகள் மிக மோசமான நிலையில் வசித்து வருவதாக தெரிவித்தார்.    எல்லை நோக்கி குவிந்து வரும் குடியேறிகளை சமாளிக்கும் வகையில், டெல் ரியோவின் எல்லை கடவுப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்க குடியேறிகள்டெல் ரியோவில் உள்ள தற்காலிக முகாமில் சில அடிப்படை சேவைகள் உள்ளன. குடியேறிகள், 37 டிகிரி செல்ஷியஸ் (99F) வெப்பநிலையில் பொருட்களை வாங்குவதற்காக ஆற்றைக் கடந்து மெக்சிகோவுக்கு சென்று வருகிறார்கள். ராட்சத கயிற்றின் உதவியுடன் மிகப்பெரிய கூடாரங்களை போட்டுள்ள குடியேறிகள், ஆற்றங்கரையிலேயே குளித்தும் துணிகளை துவைத்தும் வசித்து வருவதாக ஏபி செய்தி முகமை தகவல்கள் கூறுகின்றன. அந்த முகாமில் சமீபத்திய நாட்களில் இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அகதியாக தஞ்சம் கோரி வந்தவர்களில் 41 வயதான ராம்செஸ் கோலன் என்ற ஆப்பிரிக்க-கியூபாவைச் சேர்ந்தவரும் ஒருவர். பெருவில் வேலை பார்த்து வந்த அவர் இந்த பயணத்துக்காக பணத்தை சேமித்து வந்துள்ளார். இந்த முகாம் குழப்பம் நிறைந்து காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.

வாஷிங்டன் போஸ்ட் நாளிதழிடம் பேசிய அவர்,, "ஆயிரக்கணக்கானோருக்கு மத்தியில் சிறிய டிக்கெட்டை வைத்துக் கொண்டு அழைப்பு வரும் என காத்திருக்கிறோம்,"என்று தெரிவித்தார்.

அமெரிக்காவுக்குள் நுழையும் நோக்கத்துடன் வரும் குடியேறிகளின் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் காலத்தில் அவர்களுக்கு இதுபோன்ற சிறிய டிக்கெட் வழங்கப்படும். 

 அமெரிக்க குடியேறிகள்

டெல் ரியோ மாவட்டத்தை தமது தொகுதியில் கொண்டவரான குடியரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டோனி கோன்சலஸ், இத்தகைய மோசமான சூழ்நிலையை இதற்கு முன்பு தாம் கண்டிருக்கவில்லை என்று ஃபாக்ஸ் செய்தித் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்தார்.

"மக்களின் எண்ணிக்கை, அங்கு நிலவும் குழப்பமான நிலை போன்றவற்றை பார்த்தால், உண்மையில் தேச எல்லை என்பதே கிடையாதா என்று நினைக்கத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு மெக்சிகோவில் இருந்து அமெரிக்க எல்லைக்குள் குடியேறிகள் எளிதாக வந்து போகிறார்கள். இது மிகவும் ஆபத்தானது," என்று கோன்சலஸ் கூறினார்குடியேறியாக வந்தவர்களில் பெரும்பாலானோர் ஹேட்டியை சேர்ந்தவர்கள். மற்றவர்கள் கியூபா, பெரு, வெனிசுவேலா, நிகரகுவா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் கூறுகின்றன.

வடக்கு நோக்கி முன்னேறும் ஹேட்டியர்களின் பெரிய அலையே நகருவது போல தோற்றமளிக்கிறது. இந்த கூட்டத்தில் பெரும்பாலானவர்கள் 2010ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்குப் பிறகு பிரேசில் மற்றும் தென்னமெரிக்க நாடுகளுக்கு வந்தவர்களாக இருக்கலாம் என்று வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் செய்தி கூறுகிறது.

இந்த பெருந்திரள் குடியேறிகளின் எல்லை முற்றுகையை இப்போது அமெரிக்கா அரசாங்கம் எதிர்கொண்டிருக்கிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்க-மெக்ஸிகோ எல்லையில் கடந்த ஜூலை மாதம் தடுத்து வைக்கப்பட்ட புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 21 ஆண்டுகளில் முதல் முறையாக 2 லட்சத்தை தாண்டியதாக அறிவிக்கப்பட்டது.

கடந்த மாதம், அதிகாரிகள், மெக்சிகோ எல்லையில் 1,95,000க்கும் அதிகமான குடியேறிகளை கைது செய்ததாக அரசு கடந்த புதன்கிழமை வெளியிட்ட தரவில் கூறியது. இந்த கோடைகால எண்ணிக்கை 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைதான 51,000 பேரை விட பல மடங்கு அதிகமாகும். புலம்பெயர்ந்தோர் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் செயல்பாட்டாளர் ஜென் பட் பிபிசியிடம் பேசும்போது, ஆவணப்படுத்தப்படாத குடியேறிகளை வேகமாக வெளியேற்றும் அமெரிக்க அதிபர் பைடன் நிர்வாகத்தின் திட்டமே இது என்று தெரிவித்தார்.

"அகதிகள் அல்லது தஞ்சம் அடைந்தவராக கோரும் மக்களின் எண்ணிக்கை அதிக எண்ணிக்கையில் இருக்கும்போது, அதற்கான அமைப்பை மூடிவிட்டால், உடனே அந்த மக்களுக்கு சட்டவிரோதமாக எல்லையை க கடப்பதைத் தவிர வேறு தேர்வு இருக்காது," என்கிறார் ஜென் பட்.. இவர் ஒரு முன்னாள் எல்லை கண்காணிப்பு ஏஜென்ட் மற்றும் உளவு ஆய்வாளர் ஆக அறியப்படுகிறார்...... தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமானால், நீங்கள் ஒரு வலுவான மற்றும் மனிதாபிமான அடிப்படையிலான புகலிட முறையைக் கொண்டிருக்க வேண்டும். இல்லையெனில், மக்கள் சட்டவிரோதமாக கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் நுழைவார்கள். பிறகு அவர்கள் மீது நாடு கடத்தல் அமலாகும். அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் வாய்ப்பு அந்த குடியேறிக்கு கிடைக்கும்."

அமெரிக்க குடியுரிமைய முறையில் சீர்திருத்தம் செய்வதாகக் கூறி அதிபரான ஜோ பைடன் ஆட்சிக்கு வந்ததும் முந்தைய அதிபர் டொனால்ட் டிரம்ப் எழுப்பிய சுவர் மூலம் குடியேறி பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்ட அவர்களின் குழந்தைகளை மீண்டும் சேர்க்கும் நடவடிக்கையை முன்னெடுக்க ஒரு சிறப்பு பணிக்குழுவை உருவாக்கினார். சட்டபூர்வ குடியுரிமை திட்டத்தை மீளாய்வு செய்யவும் பைடன் நடவடிக்கை எடுத்தார்.

அமெரிக்க குடியுரிமை தடுப்பு மையங்களில் ஆதரவற்ற நிலையில் வைக்கப்பட்டிருந்த சிறார்கள் உள்பட நூற்றுக்கணக்கான குடியேறிகள் அமெரிக்காவின் தென் பகுதிக்கு வந்தபோது, அவர்கள் அங்கிருந்தபடி தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அதிபர் பைடன் நடவடிக்கை எடுத்திருந்தார். அதுபோலவே இப்போதும் அவர் ஏதாவது செய்வாரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்தான் ஆயிரக்கணக்கான குடியேறிகள் ஹேட்டிக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையை அமெரிக்கா தொடங்கியிருக்கிறது. 

 Map

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக