வெள்ளி, 13 ஆகஸ்ட், 2021

அதிமுகவைக் கழற்றிவிட்ட கூட்டணிக் கட்சிகள்!- வெளிநடப்பு விவகாரத்தின் உள் நடப்பு!

மின்னம்பலம் : தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் அதிமுக எடுக்கும் முடிவுக்கு அதன் கூட்டணிக் கட்சிகள் ஒத்துழைக்காமல் கழற்றிவிட்டதாக அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களே இன்று சபையில் முணுமுணுத்திருக்கிறார்கள்.
கடந்த அதிமுக ஆட்சியில், சட்டத்தின் பல்வேறு கூட்டத் தொடர்களின்போது திமுகவோடு அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸும் பலமுறை வெளிநடப்பு செய்திருக்கிறது.
ஆனால் இன்று (ஆகஸ்டு 13) திமுக அரசின் முதல் பட்ஜெட் உரையை அதிமுக உறுப்பினர்கள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
ஆனபோதும் அதிமுகவின் கூட்டணிக் கட்சியினரான பாமக, பாஜகவினர் அதிமுகவுடன் சேர்ந்து வெளிநடப்பு செய்யவில்லை.
இதைப் பற்றி அதிமுக கூட்டணிக் கட்சியான பாமக எம்.எல்.ஏ.க்கள் சிலரிடம் பேசினோம்.


“ பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்கப்போவது தெரிந்தும், கூட்டணிக் கட்சித் தலைவர்கள், எம்.எல்.ஏ.க்களுடன் என்ன செய்யலாம் என்று ஆலோசித்திருக்கலாம். மற்றவர்களின் கருத்துக்களை கேட்டிருக்கலாம். ஆனால் அதிமுக அப்படி எதுவும் ஆலோசனை செய்யாமல் சட்டமன்றத்துக்குள் வந்து திடீர் முடிவு எடுக்கிறார்கள்.

எங்கள் தலைமையும் அதிமுக வெளிநடப்பு செய்தால் வெளிநடப்பு செய்யுங்கள் என்று சொல்லவில்லை. சட்டமன்றத்துக்குள் நடப்பதைக் கூர்ந்து கவனிக்கச் சொல்லியுள்ளார் டாக்டர் அதனால்தான் நாங்கள் வெளிநடப்பு செய்யவில்லை” என்கிறார்கள்.

அதிமுக சீனியர் எம்.எல்.ஏ.க்கள் சிலரோ, “வன்னியர்களுக்கு நாங்கள் கொண்டு வந்த இட ஒதுக்கீட்டை ஸ்டாலின் உறுதி செய்தார். ஆனால் பாமகவோ தற்போது திமுக அரசுக்கு அனுசரனையாகவே இருப்பது போல தெரிகிறது. பாஜக எம்.எல்.ஏ.க்கள் இப்போதுதான் இருபது வருடம் கழித்து வந்திருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு அவை நடவடிக்கைகள் அறிந்துகொள்ளும்பொருட்டு அமர்ந்திருக்கலாம்” என்கிறார்கள்.

-வணங்காமுடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக