புதன், 18 ஆகஸ்ட், 2021

ஆப்கானிஸ்தானில் பர்தா அணியாமல் வெளியே சென்ற பெண்ணை தலிபான்கள் சுட்டுக் கொன்றனர்

Maniam Shanmugam - தேசாபிமானியில் ஸ்ரீகாந்த் பி.கே  - தமிழில்: சி.முருகேசன்   :  ஆப்கானிஸ்தானில் கம்யூனிஸ்ட் அரசைக் கவிழ்க்க தலிபான் பயங்கரவாதிகளை வளர்த்த அமெரிக்கா!
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரும் ஜனநாயக கட்சித் தலைவருமான ஹிலாரி கிளிண்டன் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட உரை இன்னும் யூடியூபில் உள்ளது.
“கம்யூனிஸ்ட் அரசாங்கத்தை எதிர்த்துப் போராட நாங்கள் தலிபான்களுக்கு உதவினோம், இன்று அவர்கள் எங்களுக்கும் மற்ற நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக மாறிவிட்டனர்” என்கிறது அந்த உரை.தலிபான்கள் இறுதியாக காபூலைக் கைப்பற்றினர்.
ஜனாதிபதி மாளிகையில் ஆப்கானிஸ்தான் கொடியை இறக்கி தலிபான் கொடி ஏற்றப்பட்டுள்ளது. நாட்டின் பெயரை விரைவில் “ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட்” என்று மாற்ற உள்ளதாக தலிபான்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குப்பிடிக்க முடியாமல், ஜனாதிபதி அஷ்ரப் கனியும் அவரது துணை ஜனாதிபதியும் நாட்டை விட்டு வெளியேறினர். நம்கண்முன்னே, ஒரு நாட்டின் மக்கள் மீண்டும்இருண்ட யுகத்தில் விழுந்துகொண்டிருக்கிறார்கள். உலகின் தெற்கு வரைபடத்தில் ஐரோப்பிய ஏகாதிபத்தியர்களிடமிருந்து சுதந்திரம் பெற்ற முதல் நாடு ஆப்கானிஸ்தானாக இருக்கக் கூடும். 1919 இல், சோவியத் யூனியன் உருவான இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஆப்கானிஸ்தான் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியில் இருந்துசுதந்திரம் பெற்றது. சோவியத் யூனியன்ஆரம்பம் முதல் இறுதி வரை ஆப்கானிஸ்தா னுடன் நெருங்கிய வர்த்தக உறவுகளைக் கொண்டிருந்தது.

ஜார் புரட்சிக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர் நூர் முகமது தராக்கி, ஆப்கானிஸ்தான் ஜனநாயகக் குடியரசின் முதல் தலைவர் ஆனார். 1978 முதல்1992 வரை கம்யூனிஸ்ட் அரசுகள் ஆப்கானிஸ் தானை ஆட்சி செய்தன. எந்தவொரு சோசலிசசமுதாயத்தையும் போலவே, அந்த அரசாங்கமும் முற்போக்கான சீர்திருத்தங்களுக்கு வழிவகுத்தது. அனைத்து மக்களுக்கும் இலவசசுகாதாரப் பாதுகாப்பு, அனைத்து மாணவர்களுக்கும் இலவசக் கல்வி, ஆயிரக் கணக்கான புதிய பள்ளிகளின் கட்டுமானம், தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகரிப்பதற்கான கொள்கைகளை ஏற்றுக்கொள்வது மற்றும் பாலின சமத்துவத்தை அனைத்து துறைகளிலும் கொண்டு வரவும், குழந்தை திருமணத்தை தடை செய்யவும் முடிந்தது.

ஆப்கானிஸ்தான் வரலாற்றில் முதல் முறையாக பெண்களுக்கு அரசுப்பணி முதல் ஆப்கான்மக்கள் கண்டிராத ஒரு பொற்காலத்திற்கு வழிவகுத்தது. இதில் ஆப்கானிஸ்தான் மக்கள்முன்னோடியில்லாத மாற்றங்களைக்கண்டனர், எல்லாவற்றிற்கும் மேலாக, கேரளத்தைப்போல கம்யூனிஸ்ட் அரசால் நடைமுறைப்படுத்தப்பட்ட நில சீர்திருத்தங்கள்தான் ஆப்கானிஸ்தானில் வலதுசாரி வகுப்புவாதக் கட்சிகளை பலவீனப்படுத்தியது. நிலப்பிரபுத்துவ சமூகத்தினர் அரசாங்கத்திற்கு எதிராக திரும்புவதற்கு இது ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

1980இல் ஆப்கானிஸ்தான் அரசை நிச்சயமற்றதாக்க முஜாஹித் தீவிரவாதிகளின் முயற்சிகளை எதிர்கொள்ள ராணுவத்தை அனுப்பியது சோவியத் யூனியன். அதற்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் நடத்திய உரையில், “இது ஒரு சுதந்திர இஸ்லாமிய மக்களை அடிபணியச் செய்ய கம்யூனிஸ்ட் நாத்திக அரசாங்கத்தின் திட்டமிட்ட முயற்சி.” என குறிப்பிட்டார். அங்கிருந்து ஆப்கான் மக்களின் இருண்ட நாட்கள் தொடங்கியது.ஆயுதங்களும், பணமும், கருப்புப் பணமும் மட்டுமல்லாது பெண்களையும் வழங்கி தலிபான்களை விரிவுபடுத்தி போர் நடத்தியது அமெரிக்க முதலாளித்துவம். தலிபான் பயங்கரவாதிகளை கேரள ஊடகங்கள் போராளிகளாகப் பார்த்தன.

ஹாலிவுட் திரைப்படங்கள் கூட உருவாக்கப்பட்டன. ஹாலிவுட் திரைப்படம் ‘ராம்போ 3’ முடிவில், தலிபான்களை வாழ்த்துகிறது.கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் கீழ், ஆப்கானிஸ்தான் சமூக அரசியல் துறைகளில் மட்டுமல்ல கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பத்திலும் முன்னேறிய நாடாக இருந்தது. கணினிப் புரட்சியின் போது, ஆப்கானியர்கள் சோவியத் உதவியுடன் டிரான்சிஸ்டர் ஆர் & டி யை உருவாக்கினர். அமெரிக்க ஆதரவு பெற்ற தலிபான் சதி இல்லாமல் அந்த அரசாங்கம் முன்னோக்கிச் சென்றிருந்தால், அது இன்று தெற்காசியாவில் மிகவும் வளர்ந்த மற்றும் வளமான நாடுகளில் ஒன்றாக மாறியிருக்கும். அந்த மக்கள்தான் வறுமையின் படுகுழியில் மத சட்டங்களுக்கு உட்பட்டு வாழ்கிறார்கள்.

கம்யூனிஸ்ட் தலைவர் டாக்டர். நஜிபுல்லாவை பகிரங்கமாக தூக்கிலிட்டு, தலிபான்களிடம் அதிகாரத்தை ஒப்படைத்துச் சென்றது ஜனநாயகத்தின் மொத்த வியாபாரி அமெரிக்கா. 1996 முதல் 2001 வரை ஆப்கான் மக்களை தலிபான்களின் இருண்ட காலத்திற்குள் தள்ளியது. தாலிபான் பயங்கரவாதிகள் 2020 பிப்ரவரியில் தோஹாவில் அமெரிக்க டிரம்ப் நிர்வாகத்துடன் ஒரு உடன்பாட்டை செய்துகொண்டனர். அதன்படி மீண்டும் அதிகாரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் ஒன்றரை வருடங்களுக்கு முன்பே தலிபான்கள் ஆட்சியைப் பிடித்தனர்.

தலைநகர் காபூல் இறுதியாக தலிபான்களிடம் வீழ்ந்தது, அமெரிக்கா மே மாத இறுதியில் ஆப்கானிஸ்தானில் இருந்துதுருப்புக்களை திரும்பப் பெறத் தொடங்கிய போது, ஒவ்வொரு பிரதேசத்தையும் கைப்பற்றத் தொடங்கினர். இறுதியாக தலைநகரான காபூலையும் கைப்பற்றினர்.
எந்தவொரு மத அடிப்படையிலான தேசத்திலும் முதன்மையாக பாதிக்கப்படுவது பெண்களே. தாலிபான்கள் மீண்டும் காட்டுமிராண்டித்தனமான சட்டங்களை கடைப்பிடிக்க வேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளது.

ஒருகாலத்தில் பல்கலைக்கழகத்திற்கு தனியாக பயணம் செய்து மகிழ்ச்சியாக பெண்கள் படித்தனர். அதே ஆப்கானிஸ்தானில் அண்மையில், பர்தா அணியாமல் வெளியே சென்றதற்காக ஒரு பெண்ணை தலிபான்கள் சுட்டுக் கொன்றனர். முந்தைய தலிபான் ஆட்சியில் எப்படி இருந்தார்களோ அந்த நிலைக்கு திரும்பிச் செல்லுமாறு ஆப்கானிஸ்தான் மக்களை தலிபான்கள் எச்சரித்துள்ளனர்.
நான்கு நாட்களுக்கு முன்பு, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து ராணுவம் வெளியேறுவது குறித்து தமக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும், தலிபான்கள் ஆட்சியைப் பிடிப்பது பற்றி எதுவும் சொல்வதற்கு இல்லை என்றும் அவர் கூறினார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அமெரிக்கா இப்போது தலிபான்களுடன் ஒரு ஆயுத ஒப்பந்தத்தில் ஈடுபடப் பார்க்கிறது. கம்யூனிஸ்டுகளை துரத்தி அதிகாரத்தை தூக்கி எறிந்த மக்களை இருண்ட யுகத்திற்கு தள்ளுவதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்த அனைவரும் இன்று சேவ் ஆப்கானிஸ்தான் ஹேஷ்டேக்கில் மகிழ்ச்சிக் கண்ணீர் விடலாம்.
தேசாபிமானியில் ஸ்ரீகாந்த் பி.கே  
தமிழில்: சி.முருகேசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக