சனி, 28 ஆகஸ்ட், 2021

கோடநாடு வழக்கில் திடீர் திருப்பம்: மேல் விசாரணை நடத்த போலீஸுக்கு அதிகாரம் உள்ளது: உயர் நீதிமன்றம்

 Shyamsundar -   Oneindia Tamil News  :   சென்னை: கோடநாடு வழக்கில் போலீசுக்கு மேல் விசாரணைநடத்த அதிகாரம் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறது. இதில் சயான், தன்பால் மற்றும் மனோஜ் உள்ளிட்டோர் கொடுத்த வாக்குமூலங்கள் வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கை தமிழ்நாடு போலீஸ் மீண்டும் மறுவிசாரணை செய்து வருகிறது.
பெயிலில் வெளியே வந்து ஊட்டியில் இருக்கும் சயானிடம் ஏற்கனவே ஊட்டி போலீசார் கடந்த வாரம் மறுவாக்குமூலம் வாங்கிவிட்டனர். அதேபோல் தனபாலிடமும் வாக்குமூலம் வாங்கிவிட்டனர். இந்த நிலையில் இன்று இந்த வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடப்பதாக இருந்தது.
இவர்கள் வழங்கிய வாக்குமூலம் இன்று ஊட்டி கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதோடு சயான் இன்று நீதிமன்றத்திலும் முக்கிய வாக்குமூலம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் மொத்தமாக ஊட்டி நீதிமன்றம் பரபரப்பாக காணப்பட்டது. ஆனால் இன்று கோர்ட்டில் விசாரணை நடத்தப்படாமல் வழக்கு செப்டம்பர் 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இன்று ஊட்டி கோர்ட்டில் வழக்கு விசாரணை வந்து தள்ளிவைக்கப்பட்ட நிலையில் இன்னொரு பக்கம் கோவையைச் சேர்ந்த ரவி என்பவர் தொடுத்த கோடநாடு தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த ரவி என்பவர் கோடநாடு வழக்கில் சாட்சியமாக இருக்கும் ஒருவர். இவர் தனக்கு இந்த வழக்கில் மிரட்டல் விடுக்கப்படுவதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

எனக்கு மிரட்டல் வருகிறது. போலீஸ் என்னை கோடநாடு வழக்கில் மறுவிசாரணைக்கு அழைக்கிறது. போலீசின் இந்த மறுவிசாரணையை அனுமதிக்க கூடாது. மீண்டும் இதில் வாக்குமூலம் பெற அனுமதிக்க கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் கடந்த வாரம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு, இதில் விரைந்து விசாரணை முடிப்போம் என்று கூறியது..

60 நாட்களுக்குள் கோடநாடு வழக்கில் விசாரணையை முடிப்போம். எங்களுக்கு இந்த வழக்கில் யார் மீதும் பழிபோடும், நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கம் இல்லை என்று குறிப்பிட்டது. இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி,ஒரு குற்ற வழக்கில் தொடர்புடையவர்களை முழுமையாக கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டுமென்ற நோக்கில், விசாரணையை விரிவுபடுத்துவதற்காக நீலகிரி நீதிமன்றத்தில் காவல்துறை மெமோ தாக்கல் செய்யபட்டதாகவும், அது நிராகரிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சிலர் விசாரணையை விரிவுபடுத்த வேண்டுமென நீதிபதியிடம் கடிதம் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மீண்டும் சூடு பிடிக்கும் Kodanadu விவகாரம்.. என்ன காரணம்? | Explained


காவல்துறை தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் முகமது ஜின்னா ஆஜராகி, மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்துமே அனுமானத்தின் அடிப்படையில் கூறப்படுபவை என சுட்டிக்காட்டினார். மனுதாரர் அனுபவ் ரவி காவல்துறை சாட்சியம் மட்டுமல்ல என்றும், வழக்கில் குற்றம்சாட்டபட்டவர்களுடன் நெருக்கமானவர் எனவும் சுட்டிக்காட்டினார். காவல்துறை விரிவுபடுத்தப்பட்ட விசாரணையை நடத்தி நீதிமன்றத்தில் தான் அறிக்கை தாக்கல் செய்ய இருப்பதாகவும், அதை பொறுத்து நீதிமன்றம் தான் முடிவெடுக்கப் போவதாகவும் சுட்டிக்காட்டினார்.

வழக்கில் தொடர்புடையவர்கள் சிலர் மரணம், சிலர் விபத்துக்குள்ளானது போன்ற விஷயங்கள் முன்னர் முறையாக விசாரிக்கப்படவில்லை எனவும் தற்போது முழுமையாக விசாரிக்கப்படுகிறது எனவும் விளக்கம் அளித்தார். அந்த விசாரணைக்கு அழைத்தால் ஆஜராகி விளக்கம் அளிக்காமல், நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும், வேண்டுமானால் அவரது வழக்கறிஞர் துணையுடன் காவல் நிலையத்தில் ரவி ஆஜராகலாம் என்றும் விளக்கம் அளித்தார். இந்த வழக்கு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்படும் என்று சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டது. இந்த நிலையில்தான் இன்று இந்த வழக்கில், போலீசுக்கு மறுவிசாரணை நடத்த அதிகாரம் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி நிர்மல்குமார், வழக்கின் எந்த கட்டத்திலும் விசாரணையை விரிவுபடுத்த முடியும்.வழக்கு விசாரணையை தாமதபடுத்தினாலும் உண்மையை கண்டறிவதில் உதவியாக இருக்கும்.தங்களுக்கு கிடைத்த ஆதாரங்களையும், விவரங்களையும் வைத்து பாரபட்சமற்ற விசாரணையை தொடர எவ்வித தடையும் இல்லை.காவல்துறை தாக்கல் செய்யும் ஆவணம் மற்றும் அறிக்கையை ஏற்பதா வேண்டாமா என நீலகிரி நீதிமன்றம் முடிவு செய்யும்.என்று தெரிவித்த நீதிபதி கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் மேல் விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த நீதிபதி. கோடநாடு கொலை கொள்ளை தொடர்பாக மேல்விசாரணை தடை கோரி ரவி வழக்கு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக